திருச்சி மாவட்டத்தில் சத்திரம் பேருந்து நிலையம் முக்கியமானதாகும். ஏன் என்றால் வரலாற்று சிறப்புமிக்க மலைக்கோட்டை, ஸ்ரீரங்கம், கல்லூரிகள், போன்ற பல சுற்றுலா தலங்களுக்கு மையமாக இங்க இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. ஆகையால் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் இந்த பேருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்தில் முதல் டெர்மினல் அமைக்கும் பணி 90 சதவீதம் நிறைவடைந்துள்ளது.
திருச்சி மாநகரின் வளர்ச்சி மற்றும் மக்கள் தொகை பெருக்கத்தை கருத்தில் கொண்டு 3 ஏக்கர் பரப்பளவு கொண்ட பழமையான சத்திரம் பேருந்து நிலையம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் 17.34 கோடியில் அதிநவீன வடிவமைப்புடன் மேம்படுத்தும் பணி கடந்த 2019 அக்டோபர் மாதம் தொடங்கி நடந்து வருகிறது. பேருந்து நிலையத்தின் கீழ்த்தளத்தில் 370 சதுர மீட்டரில் 350 இருசக்கர வாகனங்கள் நிறுத்தும் அளவிற்கு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் தரைதளம் 3 ஆயிரத்து 864 சதுர மீட்டரில் முதல் தளம் 687 சதுர மீட்டரில் என்று மொத்தம் 4,921 சதுர மீட்டரில் அமைக்கபடுகிறது. தலா 15 பேருந்துகள் நிறுத்தும் இடங்களுடன், 2 டெர்மினல்களும், தரைதளத்தில் 11 கடைகள், முதல் தளத்தில் 22 கடைகள், என்று மொத்தம் 33 கடைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.
இதுதவிர பயணிகள் ஓய்வு அறை, பயணிகள் நடைபாதை, பயணச்சீட்டுகள் விற்குமிடம், பாதுகாப்பான குடிநீர், பொருட்கள் பாதுகாப்பு அறை, தாய்மார்கள் பாலூட்டும் அறை, உணவகம், கழிவறை, ஆகியவற்றையும் அமைக்கப்படுகின்றன. தனியே 8.50 கோடியில் பேருந்து நிலையம் முழுவதும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட்டு வருகிறது. இதில் முதல் டெர்மினல் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது,
சத்திரம் பேருந்து நிலையம் அபிவிருத்தி பணிகள் முதல் டெர்மினலில் 90 சதவீதம் பணிகள் நிறைவடைந்துள்ளது. மேலும் இரண்டாவது டெர்மினல் பணிகள் தளம் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது. மேலும் டெர்மினல் ஒரு முகப்பு பகுதி, டெர்மினல் 2இல் நுழைவு வாயில் மற்றும் மீதமுள்ள பகுதிகளில் அலுமினியம் கலவையால் ஆன பேனல் அமைக்கும் பணிக்கு 1.90 கோடிக்கு மாநகராட்சி சார்பில் இன்று டெண்டர் கோரப்பட்டுள்ளது. இப்பணிகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என்றனர்.
முதல் டெர்மினல் பணிகள் முடிக்கப்பட்டு உள்ளதால் முதலில் திறக்கப்படுமா என்று குறித்து அல்லது இரு டெர்மினல் பணிகளும் முழுமையான பிறகு திறக்கப்படுமா என்பது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, இப்பணிகள் முடிப்பதற்கான கால அவகாசம் அக்டோபர் மாதத்துக்குள் பணிகள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்பணிகள் முழுமையாக முடிந்து சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு பேருந்து நிலையம் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் போது அப்பகுதி புதிய வடிவம் பெற்றிருக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
சத்திரம் பேருந்து நிலையத்தில் இருந்து மாநகர முழுவதும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக கரூர், அரியலூர், பெரம்பலூர், சென்னை போன்ற பகுதிகளுக்கு இங்கிருந்து அதிக அளவில் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகிறது. அதுமட்டும் அல்லாமல் சுற்றுலாத் தலங்களான முக்கொம்பு, காவேரி ஆறு, மலைக்கோட்டை, கல்லணை, ஸ்ரீரங்கம், போன்ற பல்வேறு பகுதிகளுக்கு தொடர்ச்சியாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது.
ஆகையால் இந்த பணிகள் விரைவில் முடிவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும் என மக்கள் எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள். பேருந்து நிலைய பணிகள் நடைபெற்று வருவதால் பேருந்துகள் அனைத்தும் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் அதிகளவில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருவதாகவும் மக்கள் தொடர்ந்து தெரிவிக்கின்றனர். இந்த ஆண்டுக்குள் சத்திர பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வர உள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.