போலாந்து நாட்டில் உலக யூத் வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டிகள் இன்று முதல் தொடங்கியுள்ளன. இதில் காம்பவுண்ட் பிரிவு வில்வித்தை மகளிர் கேடட் பிரிவில் இந்தியாவை சேர்ந்த ப்ரியா குர்ஜர்,ப்ரணீத் கவுர் மற்றும் ரிதுவர்ஷினி செந்தில்குமார் ஆகிய மூவரும் பங்கேற்று உள்ளனர். அந்தப் பிரிவிற்கான தகுதிச் சுற்று போட்டிகள் இன்று நடைபெற்றன. அதில்  மூன்று இந்திய வீராங்கனைகளும் சிறப்பாக வில்வித்தை செய்தனர். குறிப்பாக ப்ரியா குர்ஜர் 696 புள்ளிகளையும், ப்ரணீத் கவுர் 689 புள்ளிகளையும், ரிதுவர்ஷினி செந்தில்குமார் 682 புள்ளிகளும் பெற்றனர். 


இவர் மூவரும் அணியாக மொத்தமுள்ள 2160 புள்ளிகளுக்கு 2067 புள்ளிகள் பெற்று புதிய உலக சாதனையை படைத்துள்ளனர். இதற்கு முன்பாக இந்தப் பிரிவில் 2045 புள்ளிகள் உலக சாதனையாக இருந்தது. அந்தச் சாதனையை தற்போது இந்த மூன்று பேரும் 22 புள்ளிகள் அதிகம் பெற்று முறியடித்துள்ளனர். அத்துடன் தகுதிச் சுற்றில் தனிநபர் பிரிவில் ப்ரியா குர்ஜர் முதலிடத்தையும், ப்ரணீத் கவுர் மூன்றாம் இடத்தையும், ரிதுவர்ஷினி செந்தில் குமார் நான்காவது இடத்தையும் பிடித்தனர். நாளை முதல் தனிநபர் பிரிவு போட்டிகள் நடைபெற உள்ளன. அதன்பின்னர் அணி போட்டியும் நடைபெற உள்ளது. 


 






யார் இந்த ரிதுவர்ஷினி செந்தில்குமார்?


இந்த அணியில் இடம்பெற்றுள்ள ரிதுவர்ஷினி செந்தில் குமார் தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். இவர் தன்னுடைய 8 வயது முதல் வில்வித்தை பயிற்சியை மேற்கொண்டு வருகிறார். இவர் யுவராஜ் என்ற பயிற்சியாளரிடம் தன்னுடைய பயிற்சியை தொடங்கினார். தன்னுடைய 11ஆவது வயதில் இவர் சிபிஎஸ்இ பள்ளிகள் இடையேயான தேசிய அளவிலான போட்டியில் வெண்கல பதக்கம் வென்றார். அதன்பின்னர் 2017ஆம் ஆண்டு நடைபெற்ற தேசிய கிராமபுற விளையாட்டு போட்டிகளில் காம்பவுண்ட் வில்வித்தையில் 4 தங்கம் மற்றும் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்று இருந்தார். 




அதன்பின்னர் 2019ஆம் ஆண்டு சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு இடையேயான தேசிய அளவிலான போட்டியில் 14வயதுக்குட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவு வில்வித்தையில் 680 புள்ளிகள் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றார். இதனைத் தொடர்ந்து இந்தாண்டு நடைபெற்ற உலக யூத் வில்வித்தை  போட்டிகளுக்கான இந்திய வீராங்கனைகள் தேர்வில் ரிதுவர்ஷினி கலந்து கொண்டார். அதில் சிறப்பாக செயல்பட்டதன் மூலம் இந்திய யூத் அணியில் இடம்பிடித்தார். தற்போது போலாந்தில் நடைபெற்று வரும் போட்டியில் பங்கேற்று உள்ளார். இவர் தகுதிச் சுற்றில் இவர் சிறப்பாக செயல்பட்டதால்  உலக யூத் சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகம் எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: பார்சிலோனாவிற்கு அடுத்து எங்கே? நாளை பாரீஸ் கிளப்பில் இணைகிறாரா மெஸ்ஸி?