புதுச்சேரி மாநில அரசின் சின்னமான ஆயி மண்டபம் புதுப்பொலிவு பெற்றுள்ளது. தமிழ்நாடு அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஸ்ரீவில்லிபுதூர் ஆண்டாள் கோயில் கோபுரம் இருப்பதை போன்றே புதுச்சேரி யூனியன் பிரதேச அரசின் அதிகாரப்பூர்வ சின்னமாக ஆயி மண்டபம் விளங்குகிறது. 


புதுச்சேரி ஆளுநர் மாளிகையான ராஜ்நிவாஸூக்கும், சட்டப்பேரவைக்கும் எதிரே உள்ள பாரதி பூங்காவில் அமைந்துள்ளது ஆயி மண்டபம். கிபி 16ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஆயி என்ற தேவதாசியின் பெயர்தான் இந்த மண்டபத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.


விஜயநகர பேரசின் அரசராக திகழ்ந்த கிருஷ்ணதேவராயர் தனது வேலூர் பயணத்தை முடித்துவிட்டு புதுச்சேரி உழவர் கரையிலுள்ள தனது ஆதரவாளர் உய்யகுண்ட விஸ்வராயாரை பார்க்க வந்தார். அப்போது புதுச்சேரி முத்தரையர் பாளையத்தில் இருந்த மாளிகையை கோயில் என நினைத்து வணங்கினார். ஆனால், அருகில் இருந்தவர்கள் இது தாசியின் வீடு என்றனர். இதனால் ஆத்திரமடைந்த கிருஷ்ண தேவராயர் அந்த மாளிகையை இடிக்க உத்தரவிட்டார்.




தான் ஆசையாக கட்டிய மாளிகையை தானே இடிப்பதாகவும், அதற்கு கால அவகாசம் வேண்டும் என தேவதாசியான ஆயி மன்னர் கிருஷ்ணதேவராயரிடம் கோரிக்கை விடுத்தார். ஆயியின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டார் மன்னர் கிருஷ்ண தேவராயர். இதையடுத்து தான் ஆசையாக கட்டிய மாளிகையை ஆயி இடித்ததுடன், அந்த இடத்தில் தனது செல்வத்தை கொண்டு மக்களுக்காக குளத்தை உருவாக்கினார். இந்த குளம் புதுச்சேரி மக்களுக்கு முக்கிய நீராதாரமாக விளங்கியது.


அதன் பின்னர் 18ஆம் நூற்றாண்டில் புதுச்சேரியில் பிரெஞ்சுகாரர்கள் ஆட்சியில் அமர்ந்தனர். தண்ணீர் பிரச்சினையை தீர்க்க அப்போதைய ஆளுநர் போன்டெம்ப்ஸ், பிரான்சில் ஆட்சி செய்த அரசர் மூன்றாம் நெப்போலியனுக்கு கடிதம் எழுதினார். அதையடுத்து மூன்றாம் நெப்போலியன் உத்தரவின்பேரில் பொறியாளர் லாமை ரெஸ்சே பிரான்ஸ் நாட்டில் இருந்து புதுச்சேரிக்கு வந்தார்.




16ஆம் நூற்றாண்டில் முத்தரையர் பாளையத்தில் ஆயி வெட்டிய குளத்தில் இருந்து நீளமான வாய்க்கால் வெட்டி தற்போதைய பாரதி பூங்கா வரை கால்வாய் அமைத்தார். அதன் மூலம் புதுச்சேரி நகருக்கு தண்ணீர் வந்தது. தண்ணீர் பிரச்சினை தீர்ந்தது தொடர்பாகவும், பொறியாளரை கவுரவிக்க அனுமதி கேட்டும் மூன்றாம் நெப்போலியனுக்கு ஆளுநர் கடிதம் எழுதினார். தாசி குலத்தில் பிறந்து தனது ஆசை மாளிகையை இடித்துவிட்டு மக்களுக்காக குளத்தை வெட்டிய ஆயியின் சிறப்பை அறிந்து வியந்த மூன்றாம் நெப்போலியன், தேவதாசியான ஆயியின் நினைவாக ஒரு புதிய நினைவுச் சின்னத்தை அமைக்க உத்தரவு பிறப்பித்தார்.


கிரேக்க - ரோமானிய கட்டிடக் கலை அம்சத்துடன் வெள்ளை நிறத்தில் காண்போரை கவரும் கலைநயத்துடன் ஆயி மண்டபம் அமைக்கப்பட்டது. பிற்காலத்தில் ஆயி மண்டபத்தை சுற்றியே பாரதி பூங்கா அமைந்தது.




புதுச்சேரி அரசின் சின்னமாக இருக்கும் ஆயி மண்டபம் பல ஆண்டுகளாக மோசமான நிலையில் இருந்தது. அதை சுட்டிக்காட்டி ஊடகங்களில் செய்தி வெளியானது. அதைத்தொடர்ந்து பராமரிப்பு பணி தொடங்கியது. மண்டபம் நிறம் இழந்து, மேல்சுவர் பூச்சு இன்றி காணப்பட்ட பகுதிகள் சீரமைக்கப்பட்டு இறுதிப் பணிகள் முடிவடைந்துள்ளது. இந்தோ - பிரெஞ்சு உறவின் முதன்மையான அடையாளமாகத் திகழும் ’ஆயி மண்டபம்’ நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது புதுப்பொலிவு பெற்றுள்ளது புதுச்சேரி மக்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.