உலகக் கோப்பை வில்வித்தை போட்டிகளின் ஸ்டேஜ் 3 போட்டிகள் பிரான்சு தலைநகர் பாரீஸில் நடைபெற்று வருகிறது. இதில் காம்பவுண்ட் பிரிவு(Compound Archery) வில்வித்தையில் இந்தியாவின் அபிஷேக் வெர்மா கலந்து கொண்டார். இவர் இந்தப் பிரிவில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். இவர் மிகவும் நேர்த்தியாக வில்வித்தை செய்தார். அதன் விளைவாக தனி நபர் பிரிவில் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்று இருந்தார்.
இந்நிலையில் நேற்று காம்பவுண்ட் பிரிவு வில்வித்தை இறுதிப் போட்டி நடைபெற்றது. இதில் அபிஷேக் வெர்மா அமெரிக்காவின் கிறிஸ் ஷாசஃபை எதிர்கொண்டார். விறுவிறுப்பாக நடைபெற்ற இந்தப் போட்டியில் இருவரும் மாறி மாறி 10 புள்ளிகளை குவித்து வந்தனர். இறுதியில் அனைத்து செட்களின் முடிவில் இரு வீரர்களும் 148 புள்ளிகள் பெற்று இருந்தனர். இதனால் வெற்றியாளரை தீர்மானிக்க ஷூட் ஆஃப் முறை நடத்தப்பட்டது. அதில் முதலில் அமெரிக்க வீரர் கிறிஸ் 9 புள்ளிகள் எடுத்தார். இதைத் தொடர்ந்து வெற்றி பெற அபிஷேக் வெர்மா கட்டாயம் 10 புள்ளிகளை எடுக்க வேண்டி இருந்தது. அப்போது சிறப்பாக குறி வைத்து 10 புள்ளிகளை எடுத்து போட்டியை வென்றார். அத்துடன் தங்கப்பதக்கத்தையும் வென்று அசத்தினார்.
உலகக் கோப்பை வில்வித்தையில் அபிஷேக் வெர்மா பெறும் இரண்டாவது தங்கப்பதக்கம் இதுவாகும். ஏற்கெனவே இவர் 2015ஆம் ஆண்டு உலகக் கோப்பை வில்வித்தையில் தங்கம் வென்று இருந்தார். இந்த உலகக் கோப்பை தொடரில் மீண்டும் தங்கம் வென்று அசத்தியுள்ளார். முன்னதாக பெண்கள் பிரிவில் இந்தியாவிற்கு பெரிய ஏமாற்றம் கிடைத்தது. ஏனென்றால் இந்த உலக கோப்பை போட்டியில் ரிகர்வ் வில்வித்தை பிரிவில் பெண்கள் அணி முதல் மூன்று இடங்களை பிடித்திருந்தால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்று இருக்க முடியும்.
இதன் காரணமாக தீபிகா குமாரி, கோமாளி பாரி, அன்கிதா பகட் ஆகியோர் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. இந்தச் சூழலில் இந்திய மகளிர் அணி இரண்டாவது சுற்றில் கொலம்பியா நாட்டு அணியிடம் தோல்வி அடைந்து வெளியேறி அதிர்ச்சி அளித்தது. இதன்மூலம் மகளிர் ரிகர்வ் பிரிவு வில்வித்தையில் டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தது. 2004ஆம் ஆண்டு ஏதன்ஸ் ஒலிம்பிக் போட்டிக்கு பிறகு முதல் முறையாக டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் தான் இந்திய ரிகர்வ் பெண்கள் அணி பங்கேற்காத சூழல் உருவாகியுள்ளது.
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் வில்வித்தை போட்டிகளில் ரிகர்வ் பிரிவில் இந்திய ஆடவர் அணி தகுதி பெற்றுள்ளது. அடானு தாஸ், தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ் ஆகியோர் கொண்ட அணி டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ளது. இவர்கள் தவிர தனி நபர் ரிகர்வ் பிரிவில் தீபிகா குமாரி மட்டும் பங்கேற்க உள்ளார்.
மேலும் படிக்க: Tokyo Olympics 2021: ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாட்டு வீரர்கள் - விவரம்!