இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியின் கடைசி நாள் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டதால், போட்டி வெற்றி தோல்வியின்று டிராவில் முடிந்தது. இந்நிலையில், நேற்று லார்ட்ஸ் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
முதல் டெஸ்ட் போட்டியில் 4 ரன்களுக்கும், இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 9 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார் புஜாரா. நேற்றைய போட்டியில், ரோஹித்தும் ராகுலும் ரன் சேர்த்ததால் புஜாராவை மறந்துவிட்டனர். இல்லையென்றால், புஜாரா சிக்கி இருப்பார். எனினும், முதல் நாள் ஆட்டத்தில் இந்தியா ஸ்கோர் செய்திருந்தபோதும் புஜாரா பற்றிய விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது. காரணம், புஜாரா பேட்டிங்கில் சொதப்பி வருவதால், அடுத்து வரும் பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் கூடுகிறது.
89 ஆண்டுகால சோக வரலாறு : கபில்தேவ், தோனியைப் போல மாற்றி எழுதுவாரா கோலி..?
சிறந்த டெஸ்ட் கிரிக்கெட் பேட்ஸ்மேன்களில் ஒருவரான புஜாரா, கடைசி 10 இன்னிங்ஸ்களிலும் 21 ரன்களுக்கும் குறைவாகவே எடுத்துள்ளார். இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாக, 2019-ம் ஆண்டு ஜனவரி முதல் 20 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள புஜாரா 1050 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். பேட்டிங் சராசரி 32.81. இந்த டெஸ்ட் தொடரிலும் சொதப்பி வரும் அவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து டிராப் செய்யவேண்டும் என்ற கோரிக்கையை இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் முன்வைத்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, 2020-ம் ஆண்டு முதல் டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு ஒன் - டவுன் இறங்கி வரும் புஜாரா, ஆஸ்திரேலியா தொடரைத் தவிர வேறு போட்டிகளில் சோபிக்கவில்லை. இந்த ஃபார்ம் தொடர்ந்தால், மயங்க் அகர்வால் அல்லது ஹனுமா விஹாரி ஆகியோருக்கு வாய்ப்பு அளிக்கபடலாம். அடுத்த இன்னிங்ஸில் அவர் சிறப்பாக ஆடவில்லை என்றாலும், நம்பிக்கை தரும்படியான ரன்களை ஸ்கோர் செய்ய வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். அது நிறைவேறவில்லை எனில், புஜாராவின் கடைசி தொடர் இதுவாக இருக்கக்கூடும்.