இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரும் 12-ந் தேதி உலகப்புகழ்பெற்ற லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படுகிறது. இந்த மைதானத்தில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஆடுவது ஒவ்வொரு கிரிக்கெட் வீரரின் வாழ்நாள் கனவு ஆகும்.
லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி 1932ம் ஆண்டு முதல் விளையாடி வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி இதுவரை 18 டெஸ்ட் போட்டிகளில் ஆடியுள்ளது. இந்த போட்டிகளில் இந்திய அணி 2 டெஸ்ட் போட்டிளில் மட்டுமே இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 1932ம் ஆண்டு லார்ட்சில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் முதன் முறையாக களமிறங்கிய இந்திய அணி 158 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்திடம் தோல்வியை தழுவியது.
லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றியே பெற்றதில்லை என்ற 54 ஆண்டு கால சோக வரலாற்றிற்கு கபில்தேவ் தலைமையிலான கிரிக்கெட் அணி முதன்முறையாக முற்றுப்புள்ளி வைத்தது. 1986ம் ஆண்டு இங்கிலாந்து அணியை திலீப் வெங்கர்சகாரின் சிறப்பான பேட்டிங் மற்றும் கபில்தேவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு காரணமாக இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி புதிய சாதனையை படைத்தது.
அந்த வெற்றிக்கு பிறகு சுமார் 28 ஆண்டுகாலமாக லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய அணி வெற்றி பெறாமலே இருந்தது. அந்த சோகத்திற்கு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ்.தோனியின் படை, கடந்த 2014ம் ஆண்டு முற்றுப்புள்ளி வைத்தது. அந்த போட்டியில் இந்திய அணி ரஹானே, ஜடேஜா, புவனேஷ்குமார், முரளி விஜய் ஆகியோரின் சிறப்பான பேட்டிங்காலும், இஷாந்த் சர்மா மற்றும் புவனேஷ்குமாரின் மிரட்டலான பந்துவீச்சாலும் 95 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற 18 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி இதுவரை மேற்கண்ட இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இங்கிலாந்து அணி 12 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 4 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளது. இறுதியாக கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 159 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை தோற்கடித்தது.
லார்ட்ஸ் மைதானத்தில் 89 ஆண்டு காலமாக கிரிக்கெட் ஆடிவரும் இந்தியாவின் வெற்றி சதவீதம் 11 சதவீதமாகவே இதுவரை அமைந்துள்ளது. இங்கிலாந்து அணியின் வெற்றி சதவீதம் 66 சதவீதமாக அமைந்துள்ளது. இந்திய அணி இதுவரை இங்கிலாந்திற்கு எதிராக மட்டும் லார்ட்ஸ் மைதானத்தில் 3 முறை இன்னிங்ஸ் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.
உலககோப்பையை வென்ற இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான கபில்தேவும், எம்.எஸ்.தோனியும் மட்டுமே இதுவரை இந்தியாவிற்காக லார்ட்ஸ் மைதானத்தில் வெற்றியை பதிவு செய்துள்ளனர். அந்த வரிசையில் கடந்த முறை லார்ட்சில் தோல்வியை தழுவிய கோலியின் படை வெற்றி பெற்று சரித்திரத்தின் பக்கத்தில் இடம்பிடிப்பார்களா? என்று ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.