நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான சிறப்பு இயக்கத்தை தொடங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதை வரவேற்பதாக பூவுலகின் நண்பர்கள் சுந்தர்ராஜன் கூறியுள்ளார்.


அமைச்சர் வாசித்த இந்த பட்ஜெட் உரையில், “இந்தியாவில் முதல் ஒருங்கிணைந்த சுற்றுச்சூழல் கண்காணிப்பு மையம் நிறுவப்படும். மாநிலத்தில் ஈர நிலங்களின் சூழலியலை மேம்படுத்த ‘தமிழ்நாடு ஈர நிலங்கள் இயக்கம்’ ஏற்படுத்தப்படும். ஈர நிலங்களை சார்ந்தோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த 5 ஆண்டுகளுக்கு மொத்தம் ரூ.150 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சர்வதேச நீலக்கொடி சான்றிதழை பெற 10 கடற்கரைகள் மேம்படுத்தப்படும். ரூ.500 கோடியில் பருவநிலை மாற்ற இயக்கம் உருவாக்கப்படும்” என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.


இந்த நிலையில், இந்த பட்ஜெட் குறித்து பூவுலகின் நண்பர்கள் சுந்தர் ராஜன் தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில், “ சூழலியல் பார்வையில் பல முக்கியமான வரவேற்கத்தக்க அம்சங்கள் உள்ளன. முதலாவதாக சில தினங்களுக்கு முன்பாக உலக பன்னாட்டு அமைப்பான ஐபிசிசி வெளியிட்ட காலநிலை மாற்றம் குறித்தான அறிக்கையைத் தொடர்ந்து, இன்றைக்கு தமிழ்நாடு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டில் காலநிலை மாற்றத்துக்கான சிறப்பு இயக்கத்தை தொடங்க 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது நிச்சயமாக நல்ல ஒரு முன்னெடுப்பு ஆகும். வரக்கூடிய காலங்களில் மேலும் அதிகமான நிதிகளை ஒதுக்கி பணிகள் துரித்தப்படுத்தப்படும் என்று நாங்கள்  நம்புகிறோம். மேலும், தமிழ்நாட்டில் உள்ள  சதுப்பு நிலங்களை கண்டறிந்து அவற்றை பாதுகாத்து அதற்கான சிறப்பு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது மிக மிக முக்கியமான விஷயமாகும்.


ஏனென்றால், சதுப்பு நிலங்கள் இன்றைக்கு வெள்ளத்தடுப்பு விஷயத்தில் முக்கியமான பங்காற்றுகின்றன. சதுப்பு நிலங்களை நம்பி பலநூற்றுக்கனக்கான மீனவர்களும், உள்நாட்டு மீனவர்களும் பலரும் அதனை வாழ்வாதாரமாக நம்பியுள்ளனர். குறிப்பாக பழவேற்காடு பகுதியில் உள்ள சதுப்பு நிலங்களை பாதுகாக்கப்படும் என்ற அறிவிப்பை வரவேற்கிறோம். மேலும், தமிழ்நாட்டின் வனப்பரப்பை, அதாவது காடுகளின் பரப்பளவை 33 சதவீதமாக உயர்த்துவதற்கு பசுமை இயக்கம் தொடங்கப்படும் என்ற அறிவிப்பும் நல்ல ஒரு முன்னெடுப்பு ஆகும். தமிழ்நாட்டில் உள்ள சுற்றுச்சூழல் மாசுபாட்டை கண்காணிப்பதற்கான ஒருங்கிணைந்த ஒரு மையம் இந்தியாவில் முதல்முறையாக அமைக்கப்படும் என்ற அறிவிப்பும் நிச்சயமாக தேவைப்படுகிறது. காலத்திற்கு ஏற்ப அறிவிப்பாகும். இன்றைக்கு தமிழ்நாட்டின் தொழில்நகரங்களான வடசென்னை, ஆம்பூர், திருப்பூர், வாணியம்பாடி, கடலூர், தூத்துக்குடி போன்ற பல்வேறு நகரங்களில் உள்ள காற்று மாசு, நில மாசு போன்றவற்றை ஆய்வு செய்து, அதை சரிபடுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கு இது நிச்சயமாக பயன்படும். சூழலியல் பார்வையில் மிகமிகமுக்கியமான ஒரு காலக்கட்டத்தில் வந்துள்ள இந்த நிதிநிலை அறிக்கை சூழலியல் சார்ந்து பல்வேறு விஷயங்கள் மற்றும் முன்னெடுப்புகளை அறிவித்துள்ளது நிச்சயமாக வரவேற்கப்படவேண்டிய அம்சம்” என்று கூறினார்.


பட்ஜெட் உரை தொடங்குவதற்கு முன்பு, பேச வாய்ப்பு கேட்ட அதிமுக உறுப்பினர்கள் முழக்கமிட்டு வெளிநடப்பு செய்தனர்.


நாளை வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். பட்ஜெட் உரையுடன் தொடங்கும் சட்டசபை கூட்டம் செப்டம்டர் 21ஆம் தேதி வரை மொத்தம் 29 நாட்கள் நடைபெற உள்ளது.


Tamil Nadu Budget 2021: மீன்வளத்துறைக்கு ரூ.1,149.79 கோடி நிதி ஒதுக்கீடு