இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நேற்று மதியம் கிரிக்கெட்டின் மெக்கா என்று அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி ஃபீல்டிங் தேர்வு செய்தது. முதல் நாள் ஆட்டத்தின் முடிவில், 3 விக்கெட் இழப்பிற்கு 276 ரன்கள் எடுத்தது இந்திய அணி. ராகுல் (127*) மற்றும் ரஹானே (1*) ஆகியோர் களத்தில் இருந்தனர்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற இரண்டாவது நாள் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ராகுல், ரஹானேவின் விக்கெட்டுகளை இங்கிலாந்து அணி எடுத்தது. அதன்பின்னர் வந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜடேஜா சிறிது நேரம் அணியின் ஸ்கோரை உயர்த்தினர். எனினும் 37 ரன்கள் எடுத்திருந்த போது ரிஷப் பண்ட் மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிந்தார். இதைத் தொடர்ந்து வந்த முகமது ஷமி ரன் எதுவும் எடுக்காமல் மோயின் அலி பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார். அதைத் தொடர்ந்து வந்த இஷாந்த் சர்மா 8 ரன்களுக்கும் பும்ரா ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இறுதியில் ஜடேஜா 40 ரன்கள் எடுத்திருந்தப் போது மார்க் வூட் பந்துவீச்சில் ஆட்டமிழ்ந்தார்.
இதனால் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 129 ரன்கள் அடித்தார். அவருக்கு அடுத்து ரோகித் சர்மா 83 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் ஆண்டர்சென் 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா அணியுடன் தொடர்ச்சியாக ஆண்டர்சென் சிறப்பாக பந்துவீசி வருகிறார்.
அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு ஓப்பனிங் பேட்ஸ்மேன் பர்ன்ஸ் நிதானமான தொடக்கத்தை தந்தார். சிப்லி 11 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஹசீப் ஹமீதும் ரன் ஏதும் எடுக்காமல் அவுட்டாகினார். ஒரே ஓவரில் இவர்களது விக்கெட்டுகளை சிராஜ் எடுத்தார். ஹாட்-ட்ரிக் பந்து வாய்ப்பு கிடைத்தபோது அடுத்த பந்து டாட்-பால் ஆனது. அதனை தொடர்ந்து பர்ன்ஸ், ரூட் கூட்டணி நிதானமாக ரன் சேர்த்தது. 49 ரன்கள் எடுத்திருந்தபோது பர்ன்ஸ் ஷமியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.
இரண்டாவது ஆட்ட நேர முடிவில், ரூட் (48*), பேர்ஸ்டோ (6*) களத்தில் உள்ளனர். 3 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து இங்கிலாந்து அணி இன்றைய ஆட்டத்தை தொடர உள்ளது. வானிலையை பொருத்தவரை, இன்றைய நாள் ஆட்டத்தை மழை குறிக்கிட வாய்ப்பில்லை என வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோலி, புஜாரா, ரஹானே - வாட்டி எடுக்கும் அதே மிடில் ஆர்டர் பிரச்சனை..