வருடம் 1969 பிப்ரவரி மாதம் 10ந் தேதி முதலமைச்சராகப் பொறுப்பேற்க இருந்த கருணாநிதியிடம் பத்திரிகையாளர்கள் ’அமைச்சரவைப் பதவி ஏற்பு எப்படி இருக்கும்?’ எனக் கேட்கிறார்கள். ’ஆடம்பரமின்றி எளிமையாக இருக்கும் ஆளுநர் மாளிகையிலே சிக்கனமாக நடைபெறும்’ என பதிலளித்தார் கருணாநிதி. வருடம் 2021, மே மாதம் 7ந் தேதி வரலாறு மீண்டும் திரும்பியது. ஆளுநர் மாளிகையில் ஆடம்பரமின்றி சிக்கனமாக ’முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய நான்’ என முழங்கி முதலமைச்சர் பொறுப்பேற்றார் மு.க.ஸ்டாலின். 




புதிய அரசு பொறுப்பேற்றதன் நூறாவது நாள் இன்று. 'மேடைப்பேச்சு சரிவரவில்லை, என்ன இருந்தாலும் கருணாநிதி போன்ற பேச்சு மொழி இல்லை' என பல்வேறு விமர்சனங்களுக்கு இடையே தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி நூறு நாட்களை வெளிச்சப்பாய்ச்சலில் கடந்துள்ளது. சிக்ஸர், பவுண்ட்ரி என மைதானத்தில் சுழன்று ஆடினால்தான் கிரிக்கெட்டில் சதம் என்னும் இமாலய இலக்கை எட்ட முடியும். இந்த நூறு நாட்களில் ஸ்டாலின் அரசு சுழன்றாடிய ஆட்டம் சிக்ஸர்களா? சறுக்கல்களா? நினைத்திருந்தால் கொரோனா இரண்டாம் அலையைக் காரணம் காட்டி செயலற்ற அரசாங்கமாகச் சும்மா அமர்ந்திருக்கலாம் என்றாலும் முதல்வராகப் பதவியேற்பதற்கு முன்பே முதல்வருக்கான பொறுப்புகளை ஏற்றிருந்தார் ஸ்டாலின். 

தேர்தல் முடிவுகள் வெளியான அடுத்த நாளே, தலைமைச் செயலாளர் - மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளரை வைத்து கொரோனா தடுப்புப் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். இரண்டு நாள் ஆலோசனையில் மூன்று அறிக்கைகள் வந்தன. மூன்றும் கொரோனா பாதிப்பு கட்டுப்பாடு குறித்து.




ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் ஈஸ் தி பெஸ்ட் இம்ப்ரெஷன் என்பார்கள். முதலமைச்சரின் முதல் கையெழுத்துதான் அடுத்து வரும் ஐந்தாண்டு ஆட்சிக்குமான ஃபர்ஸ்ட் இம்ப்ரெஷன் என்னும் நிலையில் பொறுப்பேற்றவுடன் ஐந்து முக்கிய ஆணைகளில் கையெழுத்திட்டிருந்தார் முதலமைச்சர்.


1. கொரோனா நிவாரணமாக குடும்ப அட்டை ஒன்றுக்கு ரூ.4000 
2.ஆவின் பால் லிட்டருக்கு ரூ.3 குறைப்பு
3.  மகளிர், பணிக்குச் செல்லும் பெண்கள், படிக்கும் பெண்கள் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டம் பதவியேற்ற மறுநாளில் இருந்தே அமல்.
4. தேர்தல் பிரச்சாரத்தின்போது பெறப்பட்ட மனுக்களை 100 நாட்களில் தீர்வு காண “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” என்கிற திட்டத்தின் கீழ் துறை உருவாக்கம்
5. அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கொரோனா சிகிச்சை பெற்றாலும் முதல்வர் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் சிகிச்சை செலவுகளை அரசே வழங்கும்.
என அறிவித்தார்.




தொலைநோக்காக 10 அமைச்சரவைகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டன. மகளிர் உரிமைத்துறையும் நீருக்கென்றே தனியாக நீர்வளத்துறையும் அதில் தவிர்க்கமுடியாத ஹைலைட். முதலமைச்சர் ஆனதற்கு மத்தியிலிருந்து வாழ்த்து வந்தது, ’மத்திய அரசு தோளோடு தோள் நிற்கும்’ என ட்வீட்டில் வாழ்த்திய அமித்ஷாவுக்கு நீங்கள் மத்தி அல்ல ஒன்றியம் என நேரடியாகவே நினைவூட்டினார் முதலமைச்சர் ஸ்டாலின்.  உறவுக்குக் கைக்கொடுப்போம் உரிமைக்குக் குரல் கொடுப்போம் என இந்திரா காந்திக்கு நினைவூட்டிய குரலின் 2.0 வெர்ஷன் அது. 


கோவையில் கொரோனா தொற்று சிகிச்சை பெற்றவர்களை அவெஞ்சர்ஸ் பாணியில் கொரோனா கவசம் அணிந்து நேரடியாகச் சந்தித்தது இந்திய அளவில் ட்ரெண்டானது. அதுவரை வேறு எந்த முதல்வரும் கொரோனா வார்டுக்கு அவ்வாறு அதிரடியாகச் சென்றிருக்கவில்லை. 


அதெல்லாம் சரி? நீட் தேர்வு ரத்து எங்கே எனக் கட்டைவிரல் உயர்த்திக் கேள்வி எழுப்பியவர்களுக்கு பதிலடியாக ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான நீட் ஆய்வுக் கமிட்டியை நிறுவினார் முதலமைச்சர். 


தெய்வ வழிபாட்டை எதிர்க்கும் திராவிடக் கொள்கையில் முளைத்த கட்சி இந்த நூறு நாட்களில் அதிகம் செயலாற்றியது என்ன இந்து சமய அறநிலயத்துறையில்தான். அன்னைத்தமிழில் அர்ச்சனை, பெண் அர்ச்சகர்களுக்கான பயிற்சி அறிவிப்பு, அதிரடியாக மீட்கப்பட்ட ரூ 626 கோடி மதிப்பிலான 187 ஏக்கர் நிலங்கள் என  இந்தப் பட்டியல் சற்றே பெரிது.  


உண்மையைச் சொல்லப்போனால் ஒருநாள் முதல்வர் பாணியில் அமைந்த முதல்வன் திரைக்கதைதான் தமிழ்நாடு அரசின் இந்த நூறு நாட்கள். எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி என முன்னாள் அமைச்சர்கள் மீதான அதிரடி ரெய்டு, ஸ்டெர்லைட் போராட்டம் அவதூறு வழக்குகள் என முன்னாள் ஆட்சிகளில் போடப்பட்ட அனைத்து வழக்குகளும் ரத்து, பிளஸ்டூ தேர்வு ரத்து, பத்திரிகையாளர்களும் முன்களப்பணியாளர்களாக அறிவிப்பு, முன்களப்பணியாளர்களுக்கான ஊக்கத்தொகை, கொரோனாவில் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கு வைப்புத்தொகை எல்லாம் செஞ்சூரியை நோக்கி வீறுநடை போடவைத்த பவுண்ட்ரி ஷாட்கள்.


திராவிடக் கட்சிகளின் ஆட்சி என்றாலே சுகாதாரத்துறையில் சூப்பர் திட்டங்களை எதிர்பார்க்கலாம் என்பது இந்த ஆட்சியிலும் சோடை போகவில்லை. ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என மருத்துவம் நுழையாத ஊர்களுக்கும் வீட்டுக்கே சென்று மருத்துவம் பார்க்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர்.


நூறு நாட்கள் நூற்றுக்கு நூறு பெற்றிருந்தாலும் இன்னும் நான்கு ஆண்டுகளுக்கு இந்த மதிப்பெண் நீடிக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.