மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் 100 நாள் நிறைவடைந்தது. இதனை முன்னிட்டு, இந்த ஆட்சியில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், அறிவிப்புகள், கொண்டு வந்த சட்டங்கள் குறித்து ஏபிபி நாடு பல தொகுப்புகளாக செய்திகள் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், திமுக ஆட்சியில் காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் குறித்து பார்க்க இருக்கிறோம். காவல்துறை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கீழ் வரும் துறை என்பதால், அதுகுறித்து முக்கியமாக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 


நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றி பெற்றது. 159 இடங்களில் கூட்டணி வெற்ற் நிலையில், திமுக 125 இடங்களில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. தமிழ்நாட்டின் முதலமைச்சராக கடந்த மே 7ஆம் தேதி மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றார். அவர் பதவி ஏற்றவுடன் பல புதிய திட்டங்களுக்கு கையெழுத்து இட்டு யாரும் எதிர்பாராத வகையில் செயல்பட்டார். திமுக ஆட்சி ஏற்ற நேரத்தில், தமிழ்நாட்டில் கொரோனாவும் கோர தாண்டவம் ஆடிவந்தது. இதையெல்லாம், சமாளித்து ஆட்சி நடத்தி வந்த நிலையில், இதற்கு இடையில் பல சட்டம் மற்றும் ஒழுங்கு, சைபர் க்ரைம், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான நடைபெற்ற குற்றச் சம்பவங்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழ்நாடு விரைவாக நடவடிக்கை எடுத்தது. இதில், சில நடவடிக்கைகள் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை என்றும் எதிர்க்கட்சிகளால் குற்றச்சாட்டு வைக்கப்பட்டன. 


கொரோனா தொற்று நோயை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவில், தடையை மீறி செயல்பட்ட பொதுமக்கள் மீது எந்த தாக்குதல் நடத்தாமல் காவல்துறை செயல்பட்டது. ஏனென்றால், கடந்த ஆட்சியில் காவல்துறை மேற்கொண்ட நடவடிக்கையால், விமர்சனங்கள் எழுந்தது குறிப்பிடத்தக்கது.


திமுகவை விமர்சித்தவர்கள் கைது


அதிமுக ஆட்சியின் போது திமுகவை விமர்சித்தவர்கள் பலர் உள்ளனர். குறிப்பாக சமூகவலைதளங்கள் வாயிலாக அந்த கட்சியை விமர்சித்தனர். இதில், சில அருவருக்கத்தக்க வார்த்தைகளோடு விமர்சித்தவர்கள் மற்றும் பொதுவாக விமர்சிக்கப்பட்டவர்களும், திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்களுக்குள்ளையே கைது செய்து நடவடிக்கை சிறையில் அடைத்த சம்பவங்களும் அரங்கேறியுள்ளன.


திமுகவின் மறைந்த மூத்த தலைவர்கள் குறித்து இழிவாக சமூகவலைதளங்களில் பதிவிட்ட கிஷோர் கே சுவாமியை கைது செய்யப்பட்டார். மறைந்த முதல்வர் கருணாநிதி, அண்ணா மற்றும் பெரியார் மீது கிஷோர் கே சுவாமி என்பவர் சமூக வலைதளங்களிலும், யூ டியூப்பிலும் கடுமையாக விமர்சித்து வந்தார். மேலும், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் பற்றியும் சில சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறியிருந்தார். இதுதொடர்பாக கைது செய்யப்பட்ட கிஷோர் கே சாமி மீது, ஏற்கெனவே இருந்த பழைய வழக்குகளும் தூசி தட்டப்பட்டு, அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்து, தற்போது சிறையில் இருந்து வருகிறார்.


அடுத்து, நாம் தமிழர் கட்சியின் ஆதரவாளரும் சாட்டை யூட்யூப் தளத்தை நிர்வகித்துவருபவருமான யூ-டியூப் பதிவர் துரைமுருகனின் கைது. கார் நிறுவன ஊழியரை மிரட்டியதாக அளிக்கப்பட்ட புகாரில் யூ டியூப் பதிவர் துரைமுருகன் கைது செய்யப்பட்டார். விடுதலை புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரன் குறித்து திமுக ஆதரவாளரான வினோத் என்பவர் ட்விட்டரில் அவதூறு பரப்பியதாக கூறி, திருச்சியில் அவர் நடத்தும் கார் உதிரி பாகங்கள் விற்பனை செய்யும் கடையை முற்றுகையிட்டு, நாம் தமிழர் கட்சியினர் மற்றும் தமிழ் தேசிய ஆதரவாளர்கள் என்று அறியப்படுபவர்கள் போராட்டம் நடத்தினர். இந்நிலையில்,  சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோர், ட்விட்டரில் பிரபாகரன் குறித்து பதிவிட்ட வினோத்தை அதற்காக மன்னிப்பு கேட்க வைத்து, அதனை வீடியோவாக சமூக வலைதளங்களில் பதிவிட்டனர்.இதன்பிறகே காவல்துறை அவர் மீது நடவடிக்கை எடுத்தது.


பாலியல் வழக்கில் போலீசின் அதிரடி நடவடிக்கை


இதுபோன்ற நடவடிக்கை ஒருபுறம் இருந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் பள்ளி ஆசிரியர் பத்மநாபன், சிவசங்கர் பாபா, சமூகவலைதளங்களில் ஆபாசமாக பேசிய பப்ஜி மதன் போன்றவர்களை கைது அதிரடி நடவடிக்கை எடுத்த காவல்துறையை பொதுமக்கள் உள்பட பலரும் பாராட்டிய நிகழ்வும் நடந்தேறியுள்ளது.


முன்னாள் அமைச்சர்கள் மீதான நடவடிக்கை


திமுக ஆட்சிக்கு வந்ததும் ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஸ்டாலின் கூறியிருந்தார். ஊழலில் ஈடுபட்ட அமைச்சர்களின் பட்டியல் கூட திமுக சார்பில் ஆளுநரிடம் சமர்பிக்கப்பட்டது. இந்த நிலையில், முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், முன்னாள் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை போலீஸ் சோதனையில் ஈடுபட்டு நடவடிக்கை மேற்கொண்டது. இதில், பல ஆவணங்கள் சிக்கின. ஆதாரங்களின் படியே இந்த சோதனை நடைபெற்றாலும், வழக்கம்போல இது திமுக பழிவாங்கும் நடவடிக்கை என்று கூறப்பட்டது.


தமிழ்நாட்டின் டிஜிபியாக தமிழர் ஒருவரை நியமித்து திமுக அரசு உத்தரவிட்டதற்கு பலரும் வரவேற்பு அளித்தனர். அவர் வந்தவுடன், போலீசாருக்கு வார விடுப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளை வெளியிட்டது சிறப்பு வாய்ந்ததாக கருதப்பட்டது.




பெண் போலீஸின் வேலை சுமையை யாரும் அறியாத வகையில் இருந்த வந்த நிலையில், முதலமைச்சர் செல்லும் பாதையில் பெண் போலீசார் பாதுகாப்பு நிறுத்தப்படுவதில் இருந்து விலகளித்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டது, அனைத்து பெண் போலீசாருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியதோடு மட்டுமல்லாமல், இந்த உத்தரவை அனைவரும் வரவேற்றதை எல்லாம், முதல்வர் ஸ்டாலின் அரசின் கீழ் எடுக்கப்பட்ட சிறந்த நடவடிக்கையாக இருக்கும் இன்னும் வருங்காலங்களில் கூட என கூறிக்கொண்டு...இவரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள காவல்துறை இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டும் என எதிர்பார்க்கிறோம்.


Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற