இங்கிலாந்து-இந்தியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி தற்போது லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 364 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. முதல் டெஸ்ட் போட்டியை போல் இந்தப் போட்டியிலும் இந்தியாவின் மிடில் ஆர்டர் வீரர்களான புஜாரா, கோலி,ரஹானே ஆகிய மூவரும் சொதப்பியுள்ளனர். விராட் கோலி மட்டும் இந்தப் போட்டியில் இரட்டை இலக்கை ஸ்கோரை எட்டினார். அவர் 42 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

இந்நிலையில் நீண்ட நாட்களாக நீடிக்கும் இந்தியாவின் மிடில் ஆர்டர் பிரச்னை குறித்து தரவுகள் கூறுவது என்ன? பிரச்சனை தான் என்ன?

இந்திய கிரிக்கெட் அணி கொரோனா ஊரடங்கு காலத்திற்கு பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர், இங்கிலாந்து டெஸ்ட் தொடர், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டி எனப் பல டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்று உள்ளது. அதன்பின்னர் தற்போது இங்கிலாந்தில் இந்திய அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்று வருகிறது. இந்த அனைத்து டெஸ்ட் தொடர்கள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி சந்தித்த மிகப்பெரிய பிரச்னை பேட்டிங்தான். அதிலும் குறிப்பாக இந்தியாவின் மிடில் ஆர்டர் இடத்தில் உள்ள 4,5 மற்றும் டாப் ஆர்டர் இடத்தில் இருக்கும் 3ஆவது இடத்தில் இருக்கும் வீரர்களின் செயல்பாடுகள்தான். 


டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டில் 3,4,5 ஆவது இடம் மிகவும் முக்கியமான இடமாக அமைகிறது. இந்தியா அணியில் அந்த இடத்தில் நீண்ட நாட்களாக புஜாரா,விராட் கோலி, ரஹானே ஆகிய மூன்று பெரிய வீரர்கள் களமிறங்கி வருகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக அவர்களுடைய செயல்பாடுகள் மிகவும் சிறப்பாக அமையவில்லை. அதுவே நமது அணியின் பேட்டிங் மோசமாக அமைய முக்கிய காரணமாக அமைந்துள்ளது. விராட் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் களமிறங்கும்போது 5 பந்துவீச்சாளர்களை கொண்டு தான் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்று வருகிறது. 

ஏற்கெனவே நம்முடைய டெயில் எண்டர்கள் சரியாக விளையாட மாட்டார்கள். ஆகவே இப்படி 5 பந்துவீச்சாளர்களுடம் விளையாடும் போது நம்முடைய மிடில் ஆர்டர் மீது ரன் அடித்தே ஆகவேண்டிய நெருக்கடி உருவாகும். அந்த நெருக்கடியை சரியாக கையாளாமல் இந்த மூன்று முக்கிய வீரர்களும் சொதப்பி வருவது தான் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இருப்பினும் இந்திய அணி எப்படி டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெறுகிறது என்ற சந்தேகம் நமக்கு வரக்கூடும். அதற்கு முக்கிய காரணம் நம்முடைய  தொடக்க ஆட்டக்காரர்கள் மற்றும் ரிஷப் பண்ட் ஆகியோரின் ஃபார்ம் தான். அவர்கள் முடிந்தவரை இந்திய அணியின் ஸ்கோரை உயர்த்துகின்றனர்.

இவர்களுடன் சேர்ந்து கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக இருக்கும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சும் வெளிநாடு வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. பும்ரா,ஷமி,இஷாந்த் கூட்டணி அனைத்து அணிகளின் பேட்டிங்கை ஒரு கை பார்க்கும் வகையில் அமைந்துள்ளது. அவர்களுக்கு ஆதரவாக சிராஜ், ஷர்தல் தாகூர் ஆகியோரும் உள்ளது பந்துவீச்சில் கூடுதல் பலமாக அமைந்துள்ளது. 

சரி கோலி,புஜாரா மற்றும் ரஹானேவின் சமீபத்திய செயல்பாடுகள் என்ன?

கோலி,புஜாரா,ரஹானே 2020 முதல்  தற்போது வரை  டெஸ்ட் செயல்பாடு:

வீரர்கள்  போட்டிகள்  ரன்கள்  அரைசதம்  சதம் சராசரி
புஜாரா 13 551 5 0 25.09
விராட் கோலி 10 387 3 0 24.19
ரஹானே  13 541 1 1 25.76

2020ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இந்த மூவரில் ரஹானே மட்டும் ஒரே ஒரு சதத்தை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்துள்ளார். கோலி மற்றும் புஜாரா ஆகிய இருவரும் தற்போதுவரை சதம் அடிக்கவே இல்லை. மேலும் புஜாரா கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 9, 12*, 4, 15, 8, 17, 0, 7, 21, 15 ஒரு அரைசதம் கூட பதிவு செய்யவில்லை. அதேபோல் ரஹானே கடந்த 10 டெஸ்ட் இன்னிங்ஸில் 1 0 67 10 7 27 49 15 5 1 ஒரே ஒரு அரைசதம் மட்டும் அடித்துள்ளார்.


மேலும் இந்திய கேப்டன் விராட் கோலியை பொறுத்தவரை கடந்த 10 இன்னிங்ஸில் அவர் 3 அரைசதம் அடித்துள்ளார். அதுதவிர கடைசியாக 2019ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட் பங்களாதேஷ் அணிக்கு எதிராக ஒரு சதம் அடித்தார். அதன்பின்னர் இதுவரை டெஸ்ட் கிரிக்கெட் சதம் அடிக்கவே இல்லை. இவர்களின் பேட்டிங் சொதப்பல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணி கோப்பையை இழக்க முக்கிய காரணமாக அமைந்தது. ஏனென்றால் 146/3 என இருந்த இந்திய அணி 217 ரன்களுக்கு அப்போட்டியில் ஆட்டமிழந்தது. அதேபோல் இங்கிலாந்து அணியுடனான முதல் டெஸ்ட்டில் 97/0 என இருந்த இந்திய அணி 112/4 என மாறியது. 

அந்த நிலை தற்போது நடைபெறும் இரண்டாவது டெஸ்ட் போட்டியிலும் தொடர்ந்துள்ளது. 267-3 என இருந்த இந்திய அணி 284-5ஆக மாறி மீண்டும் ஒரு மிடில் ஆர்டர் சொதப்பலை சந்தித்துள்ளது. இந்த நிலை எப்போதுதான் மாறும் என்று இந்திய ரசிகர்கள் மிகவும் சோகத்துடன் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

மேலும் படிக்க: இந்தியாவின் ரன் வேட்டைக்கு ‘ஸ்பீட் ப்ரேக்கர்’: ராகுல், ரஹானே அவுட்!