ஐசிசி டி20 உலகக் கோப்பை 2021 போட்டிகளில் வரும் அக்டோபர் மாதம் இறுதியில் தொடங்கி நவம்பர் மாதம் வரை இந்தியாவில் நடைபெற இருந்தது. இதில் 16 அணிகள் பங்கேற்க திட்டமிடப்பட்டிருந்தது. தற்போது இந்தியாவில் கொரோனா பரவல் மோசமாக உள்ள சூழலில் இந்தப் போட்டிகள் திட்டமிட்டபடி இந்தியாவில் நடைபெறுமா என்ற சிக்கல் எழுந்தது. இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் பிசிசிஐ உயர்மட்ட குழு மற்றும் ஐசிசி அதிகாரிகளுடன் இந்தத் தொடரை இந்தியாவில் நடத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்தின் முடிவில் இதுகுறித்து இறுதி முடிவு எடுக்க இன்னும் சில நாட்கள் கால அவகாசம் கேட்கப்பட்டதாக செய்தி வெளியானது. 


இந்நிலையில் இத்தொடரை யுஏஇ மற்றும் ஓமானில் நடத்த பிசிசிஐ மற்றும் ஐசிசி திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுதொடர்பாக ஒருவர் பிடிஐ நிறுவனத்திடம் அளித்த பேட்டியில்,"டி20 உலகக் கோப்பை தொடர்பாக நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்க பிசிசிஐ ஐசிசியிடம் நான்கு வாரங்கள் கால அவகாசம் கேட்டது. எனினும் நடத்தும் உரிமையை இந்தியாவை வைத்திருக்கும் பட்சத்தில் இதை யுஏஇ மற்றும் ஓமானில் நடத்தவும் பிசிசிஐ விருப்பம் தெரிவித்துள்ளது.




செப்டம்பர் மற்றும் அக்டோபர் முதல் வாரம் வரை யுஏஇயில் ஐபிஎல் தொடர் நடைபெறும். அதன்பின்னர் டி20 உலகக் கோப்பையை அபுதாபி, துபாய், ஷார்ஜா மற்றும் ஓமானில் போட்டிகளை நடத்தலாம். அக்டோபர் முதல் வாரம் வரை யுஏஇ யில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதால், டி20 தொடரின் முதல் லெக் போட்டிகள் ஓமானி நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது. அப்போது தான் யுஏஇயில் உள்ள மூன்று ஆடுகளங்களையும் சீரமைக்க சற்று நேரம் கிடைக்கும். அதன்பின்னர் 2-வது லெக் போட்டிகளை யுஏஇயில் நடத்த ஐசிசி திட்டமிட்டுள்ளது" எனத் தெரிவித்துள்ளார். 


இம்முறை டி20 உலகக் கோப்பை தொடரில் 16 அணிகள் பங்கேற்க உள்ளன. அதில் சில சிறிய நாடுகளின் கிரிக்கெட் அணிகளும் உள்ளன. இதனால் ஒருவேளை ஒரு அணியில் யாராவது ஒருவருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டால் அந்த நாடுகளில் மாற்று வீரர் கிடைப்பது மிகவும் கடினம். எனவே இப்படி ஒரு சூழலில் இந்தியாவில் டி20 உலகக் கோப்பையை ஐசிசி நடத்தக் கூடாது என்று அசோசியேட் நாடுகளின் கிரிக்கெட் சங்க கூட்டமைப்பு ஐசிசியிடம் கருத்து தெரிவித்துள்ளது. ஆகவே அதையும் ஏற்கும் வகையில் ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடரை யுஏஇ மற்றும் ஓமானில் நடத்த அதிக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுகிறது. மேலும் அக்டோபர் முதல் வாரம் பல நாடுகளின் வீரர்கள் ஐபிஎல் தொடருக்காக யுஏஇயில் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு டி20 உலகக் கோப்பையையும் அங்கு நடந்தால் அது நல்லதாக தான் அமையும் என்றும் ஒரு சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


மேலும் படிக்க: Ajinkya Rahane Birthday | இந்திய அணியின் `ஆபத்பாண்டவன்' அஜிங்கிய ரஹானே...!