பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்பட்ட ஆலோசனைகளின் அடிப்படையில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு இந்தாண்டு ரத்து செய்யப்படுகிறது என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
மேலும் 'பெருந்தொற்றின் காரணமாக, தமிழ்நாட்டில் பொதுத் தேர்வுகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நீட்" போன்ற நுழைவுத் தேர்வுகளை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று தமிழ்நாடு அரசு கருதுகிறது. இது குறித்த அறிவிப்புகள் இதுவரை எதுவும் வெளிவராத நிலையில், உயர்கல்விக்காக நடத்தப்படும் பல்வேறு நுழைவுத் தேர்வுகளையும் ரத்து செய்ய வலியுறுத்தி, மாண்புமிகு பிரதமர் திரு.நரேந்திர மோடி அவர்களுக்குக் கடிதம் எழுதியுள்ளேன். கொரோனா பெருந்தொற்றுக் காவத்தில், மாணவர்களின் உடல் நலன் மற்றும் மனநவனைக் கருத்தில் கொண்டு மட்டுமே இந்த முடிவு எடுக்கப்பட்டாலும், மாநில கல்வித் திட்ட அடிப்படையில், உயர்கல்வி சேர்க்கை எந்தவிதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை தமிழக அரசு உறுதி செய்யும்’ எனவும் இதுதொடர்பான அரசு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அரசின் இந்த அறிவிப்பை தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் தரப்புகள் வரவேற்றுள்ளன. பாட்டாளி மக்கள் கட்சித் தலைவர் ராமதாஸ் இதுதொடர்பாகத் தனது ட்விட்டர் பக்கத்தில் ,’தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. பாட்டாளி மக்கள் கட்சி இதைத் தான் வலியுறுத்தியது. நுழைவுத்தேர்வுகளையும் ரத்து செய்ய நடவடிக்கை வேண்டும்!’ எனக் கருத்திட்டுள்ளார்.
மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் பேராசிரியர் ஜவாகிருல்லா,’பிளஸ் 2 தேர்வை ரத்து செய்து உயர்கல்விக்குச் செல்ல மதிப்பெண்கள் அடிப்படையில் அனைத்து உயர்கல்வி மாணவர் சேர்க்கை மாநில கல்வி திட்டத்தின் படி நடைபெறும் என்ற தமிழ்நாட்டு முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறேன். நீட்டை திணிக்க நினைப்போருக்கு பெரும் கவலை’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
திராவிட முன்னேற்றக்கழகக் கூட்டணிக் கட்சியான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உட்பட தமிழ்நாட்டின் பல்வேறு கட்சிகளும் நுழைவுத் தேர்வு கூடாது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்