இந்திய அளவில் கேப்டன் பதவிக்கு தகுதியானவர் கோலியா? ரோகித் சர்மாவா? என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் சண்டை போட்டுக் கொண்டிருககும் அதே தருணத்தில், வாய்ப்புகள் கிடைத்த போது எல்லாம் அந்த பதவிக்கு தானும் மிகச்சரியான நபர் என்று நிரூபித்து வருபவர் இன்று பிறந்தநாள் காணும் ரஹானே. இந்திய அணியின் பெருஞ்சுவர் என்று அழைக்கப்பட்ட ராகுல் டிராவிட்டிற்கு பிறகு, 2013ம் ஆண்டு டெஸ்ட் போட்டிகளில் அறிமுகமான ரஹானே அவரது இடத்தை நிரப்புவார் என்று கிரிக்கெட் வல்லுநர்கள் கணித்தனர். ரஹானே அந்த வார்த்தைகளுக்கு பொருத்தமானவர்தான் என்றாலும், அவருக்கு இதுவரை மூன்று வடிவ போட்டிகளிலும் நிலையான இடம் கிடைக்கவில்லை.
அணியில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது அயராது உழைப்பின் மூலம் 2016-ஆம் ஆண்டு துணை கேப்டனாக ரஹானே நியமிக்கப்பட்டார். 2017-ஆம் ஆண்டு ஆஸ்திரேலியா அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வந்தது. காயம் காரணமாக கேப்டன் விராட் கோலி தொடரில் இருந்து வெளியேற, துணை கேப்டன் ரஹானே தலைமையில் இந்திய அணி முதன்முறையாக களமிறங்கியது, தர்மசாலாவில் தான் கேப்டனாக பதவியேற்ற முதல் போட்டியிலே வெற்றிக்கனியை இந்தியாவிற்காக பறித்துக்கொடுத்தார் ரஹானே.
இதையடுத்து, 2018ம் ஆண்டு டெஸ்ட் அங்கீகாரம் பெற்ற ஆப்கானிஸ்தான் அணி தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணிக்கு எதிராக அறிமுகமானது. இந்த போட்டியிலும் கேப்டனாக இந்திய அணியை வழிநடத்தினார் ரஹானே. இந்த போட்டியில் இந்திய அணி மிக எளிமையாக வென்றாலும், போட்டிக்கோப்பையை பெற்றுக்கொண்ட போது ரஹானே நடந்து கொண்ட விதம் `CRICKET IS GENTLEMEN GAME’ என்பதை நீண்ட காலத்திற்கு பிறகு கிரிக்கெட் ரசிகர்களுக்கு நினைவூட்டியது.
வெற்றிக் கோப்பையை கையில் ஏந்தியவுடன் உற்சாகத்தில் துள்ளிக்குதிக்காமல், உலகின் நம்பர் 1 அணியுடன் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையைத் தொடங்கிய ஆப்கானிஸ்தான் அணியினரையும் புகைப்படம் எடுக்க அழைத்து அவர்கள் கையிலும் கோப்பையை கொடுத்து அவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் ரஹானே. அவரின் இந்த செயல் கிரிக்கெட் ரசகிர்கள் அனைவராலும் பாராட்டப்பட்டது.
2018-19ம் ஆண்டு கோலியின் தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை ஆஸ்திரேலியாவில் பதிவு செய்து நாடு திரும்பியபிறகு, அந்த அணியில் ஸ்டீவ் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் இல்லாததாலே இந்திய அணி எளிமையாக வென்றது என்ற விமர்சனங்கள் எழுந்தது. இந்த விமர்சனங்களுக்கு முற்றுபபுள்ளி வைக்கும் நோக்கத்தில், 2020-201ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தை இந்தியா மேற்கொண்டது.
முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வீழ்த்தியது. ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் இருப்பதால் ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா மண்ணை கவ்வும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியும் தனது மனைவியின் பிரசவத்திற்காக நாடு திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டது.
வீரர்கள் மனதளவில் சோர்ந்து போயிருந்த இந்த இக்கட்டான தருணத்தில் இந்திய அணியின் கேப்டன் பொறுப்பை மீண்டும் தனது தோளில் சுமந்தார் ரஹானே. வீரர்களை உற்சாகப்படுத்தி, தோல்விகளை மறக்கச்செய்து விளையாட வைத்து இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மெல்போர்னில் தனது வெற்றிப் பயணத்தை மீண்டும் தொடங்கியது. அதற்கு அடுத்து சிட்னியில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது.
இறுதியாக பிரிஸ்பேன் கப்பா மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றது. போட்டியில் வெல்லும் அணி தொடரை கைப்பற்றும் என்ற நிலை. ஆட்டத்தின் முதல் நாள் முதலே இரு அணிகளும் மாறி, மாறி ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் இந்திய வீரர்களை தனது தன்னம்பிக்கையாலே சிறப்பாக விளையாடச் செய்தார் ரஹானே. குறிப்பாக, ரிஷப் பண்டை சுதந்திரமாக ஆட அனுமதித்தார்.
ரஹானே அளித்த சுதந்திரத்தால் டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போல் மாற்றிய ரிஷப் பண்ட் தனது அதிரடியால் இறுதி நாளில் இந்திய அணியை 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறவைத்தார். இறுதியில் ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய அணி இரண்டாவது முறையாக ரஹானே தலைமையில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. ஆஸ்திரேலிய பயிற்சியாளர் லாங்கர், இந்திய அணியை குறைத்து மதிப்பிட்டு தவறு செய்துவிட்டோம் என்று கூறியதன் மூலமே ரஹானேவின் அற்புதமான கேப்டன்சியை பற்றி உணர்ந்து கொள்ளலாம். ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை வென்ற இரண்டாவது ஆசிய கேப்டன் என்ற சாதனையையும் ரஹானே படைத்தார்.
எந்தவொரு சூழலிலும் நிதானத்தை இழக்காத ரஹானே, இதுவரை 73 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 4 ஆயிரத்து 583 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 12 சதங்களும், 23 அரை சதங்களும் அடங்கும். இந்திய அணிக்கு 5 போட்டிகளில் கேப்டனாக ஆடியுள்ள ரஹானே அதில் 4 போட்டிகளில் வெற்றியை பெற்றுத்தந்துள்ளார். ஒரு போட்டி மட்டும் டிரா ஆகியுள்ளது. வெளிநாட்டு மண்ணில் எப்போதுமே சிறப்பாக செயல்படும் ரஹானே, 18-ஆம் தேதி தொடங்க உள்ள நியூசிலாந்துக்கு எதிரான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் சிறந்த ஆட்டத்தை நிச்சயம் வெளிப்படுத்துவதுடன், கோலியுடன் சேர்ந்து இந்திய அணியை தன் தோளில் சுமப்பார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.