மயிலாடுதுறையில் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் மீது கல்லூரி மாணவி பாலியல் தொந்தரவு அளித்ததாக புகார் அளித்துள்ளார். உடற்கல்வி ஆசிரியரை போக்சோ சட்டத்தின்கீழ் மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் கைதுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர்.




சென்னை பத்மசேஷாத்திரி பள்ளி ஆசிரியர் ராஜகோபாலனை தொடர்ந்து கராத்தே பயிற்சி மாஸ்டர் கெபிராஜ் மற்றும் பிரைம் தடகள பயிற்சி மையத்தின் பயிற்சியாளர் நாகராஜன்  என தமிழகத்தில் 100-க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள் மீது பாலியல் புகார்கள் குவிந்துள்ளன. பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட பள்ளி-கல்லூரி மாணவிகள் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் மூலம் புகார் அளிக்கலாம் என்று அவரது செல்போன் நம்பர் கொடுக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து கடந்த ஒரு வாரத்தில் துணை கமிஷனர் ஜெயலட்சுமிக்கு வாட்ஸ்-அப் வாயிலாக 100 புகார்கள் தமிழகம் முழுவதும் இருந்து வந்துள்ளன. 




இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள ஒரு கல்லூரியில் பிஏ ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு பயிலும் மாணவி ஒருவர் நூற்றாண்டுகள் பழமையான ஒரு பள்ளியில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் 2018 ம் ஆண்டு வரை 6-ஆம் வகுப்பில் இருந்து 12-ஆம் வகுப்பு வரை படித்துள்ளார்.  விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவி பள்ளியின் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றிவரும் அண்ணாதுரையிடம் பயிற்சி பெற்று பல்வேறு பதக்கங்களைப் வென்றுள்ளதாகவும், பயிற்சி அளித்த ஆசிரியர் அண்ணாதுரை இரட்டை அர்த்தத்தில் பேசியதாகவும், உடல் ரீதியாக சீண்டல்களில் ஈடுப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார். 




2018-ஆம் ஆண்டு அந்த மாணவியை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பம் பூர்த்தி செய்வதாக கூறி, தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளதாகவும், தற்போது மயிலாடுதுறை அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பாலியல் தொந்தரவு குறித்து வெளியில் சொல்ல முடியாமல் இருந்த மாணவி சமீபத்தில் தொடர்ந்து பள்ளி ஆசிரியர்கள் மீது மாணவிகள் புகார் அளித்து வருவதும் அதனை அடுத்து ஆசிரியர்கள் கைது செய்யப்படுவதையும் அறிந்து தைரியம் அடைந்து, தற்போது காவல்நிலயத்தில் புகார் அளித்திருப்பது பரபரப்பையும், பெற்றோர்கள், மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. 




மயிலாடுதுறை மாணவி அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து ஆசிரியர் அண்ணாதுரையை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில் அந்த பள்ளியில் படித்த பல மாணவிகளின் பெற்றோர்கள் அச்சத்தில் உறைந்து போய் உள்ளனர். இந்த பாலியல் குற்றச்சாட்டு இந்த ஒரு மாணவியுடன் முடியுமா? அல்லது மேலும் பல மாணவிகளுக்கு  புகார் கொடுக்க வருவார்களா என்றும், கைது செய்யப்பட்ட ஆசிரியரிடம் நடைபெறும் விசாரணையில், இதில் வேறு ஆசிரிகளும் ஈடுபட்டுள்ளார்களா என்ற கேள்வி பெற்றோர்களிடம் எழுந்துள்ளது. 




இந்நிலையில் உடற்கல்வி ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அறிந்து, அவருக்கு ஆதரவாக அவரிடம் பயின்ற ஏராளமான மாணவர்கள் காவல்நிலையத்தில் திரண்டனர். புகார் அளித்த மாணவியின் தோழி கூறுகையில், ”அவளுக்கு வேலை வாங்கித் தராமல், தனக்கு உடற்கல்வி ஆசிரியர் அண்ணாதுரை வேலை வாங்கி கொடுத்தார் என்னும் காழ்ப்புணர்ச்சியில் பழிவாங்கும் நோக்கத்தில் அவர்மீது அவதூறு புகார்” அளித்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளார்.