காணொலி மூலம் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கலந்துகொள்கிறார். இந்தக் கூட்டத்தில், இந்த ஆண்டுக்கான டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து  ஆலோசனை மேற்கொள்ளப்படுகிறது.


மேலும், அடுத்த 8 ஆண்டுகளுக்கான வருங்கால போட்டி அட்டவணையை தீர்மானிப்பது குறித்தும், முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் அடுத்த டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியை எப்போது தொடங்கி நடத்தலாம் என்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படுகிறது. கிரிக்கெட் போட்டியை உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் வளர்ப்பது குறித்தும், குறிப்பாக பெண்கள் கிரிக்கெட்டை மேலும் மேம்படுத்துவது மற்றும் பிரபலப்படுத்துவது பற்றியும் ஆலோசிக்கப்படுகிறது. 2028ஆம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம் பெறுவதற்கு முன்னெடுக்க வேண்டிய முயற்சிகள் குறித்தும் ஆலோசனை நடக்க உள்ளது.




16 அணிகள் பங்கேற்கும் 7ஆவது டி20  உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இந்தியாவில் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால், கொரோனா அச்சுறுத்தலின் காரணமாக இந்த போட்டியை இந்தியாவில் நடத்த முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்தப் போட்டிக்கு மாற்று இடமாக ஐக்கிய அரபு அமீரகம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. எனினும், இந்த போட்டியை இந்தியாவில் நடத்த வேண்டும் என்பதில் பிசிசிஐ ஆர்வமாக இருக்கிறது. எனவே கொரோனா சூழ்நிலை குறித்து ஆய்வு செய்து சரியான முடிவுக்கு வர ஒரு மாத காலம் அவகாசம் வழங்கும்படி பிசிசிஐ சார்பில் ஐசிசியிடம் வேண்டுகோள் வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


முன்னதாக, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் புதிய விதிகளை ஐசிசி அறிவித்தது. 
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்கான இறுதிப்போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் வரும் ஜூன் 18ஆம் தேதி மோத உள்ளனர். இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுதாம்ப்டன் நகரில் நடைபெற உள்ள இந்த போட்டியில் கடைபிடிக்கப்பட உள்ள புதிய விதிகள் குறித்து ஐசிசி அறிவித்துள்ளது. இதன்படி, இந்த போட்டி டிராவில் முடிந்தால் இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய இரு அணிகளும் வெற்றியாளர்கள் என்று அறிவிக்கப்படுவார்கள்.


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியின் புதிய விதிகளை அறிவித்தது ஐசிசி!


இந்த போட்டிக்கான ரிசர்வ் நாள் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. போட்டி நடைபெறும் 5 நாட்களில் ஏதாவது ஒரு நாளில் மழை, நேர இழப்பு உள்ளிட்ட காரணத்தால் நேர இழப்பு ஏற்பட்டால், அதை ஈடு செய்வதற்காக இந்த ரிசர்வ் நாள் பயன்படுத்தப்பட உள்ளது. போட்டியில் முடிவு கிடைக்க வேண்டும் என்பதற்காக இந்த நாள் ஆட்டத்தில் சேர்த்துக் கொள்ளப்படாது.