ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டிகள் துபாயில் நடைபெற்றது. இந்தப் போட்டிகளில் 51 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் மேரி கோம் வெள்ளிப்பதக்கம் வென்றார். மேலும் மகளிர் 74 கிலோ எடைப்பிரிவில் இந்தியாவின் பூஜா ராணி உஸ்பெகிஸ்தான் நாட்டின் மோவ்லோனாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை வென்று அசத்தினார். இந்தச் சூழல் யார் இந்த பூஜா ராணி? எப்படி குத்துச்சண்டை விளையாட்டிற்குள் வந்தார்? அதற்காக அவர் உடைத்த தடைகள் என்னென்ன?


ஹரியானா மாநிலத்தில் குத்துச்சண்டைக்கு பெயர் போன மாவட்டம் பிவானி. இந்த மாவட்டத்தில் நிம்ரிவாலி என்ற கிராமத்தில் பிறந்தவர் பூஜா ராணி. இவர் தனது கல்லூரி படிப்பு வரை எந்தவித போட்டிகளிலும் கலந்து கொள்ளவில்லை. இவர் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து கொண்டிருக்கும் போது இவருடைய பேராசிரியரின் மனைவி ஒரு அறிவுரை வழங்கியுள்ளார். அதாவது பூஜா ராணியின் உடற்கட்டமைப்பை பார்த்த அவர் குத்துச்சண்டை பயிற்சி மேற்கொள்ளுமாறு அறிவுரை கூறியுள்ளார். அவரின் அறிவுரையை ஏற்று பூஜா ராணி முதல் முறையாக குத்துச்சண்டை கை கவசத்தை அணிந்துள்ளார். எனினும் அவரால் அதை வைத்து சரியாக குத்துச்சண்டை செய்யமுடியாமல் போனது. அப்போதும் மனம் தளராமல் மீண்டும் மீண்டும் முயற்சி செய்துள்ளார். 






ஒரு வழியாக குத்துச்சண்டை செய்ய கற்றுக் கொண்டவுடன் இவருக்கு அடுத்த தடங்கள் காத்திருந்தது. இவருடைய வீட்டில் மற்ற பெற்றோர்களை போல் குத்துச்சண்டை விளையாட்டிற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக இவருடைய தந்தை குத்துச்சண்டை விளையாட்டு சற்று ஆக்ரோஷம் நிறைந்த விளையாட்டு. இதில் பெண்கள் விளையாடினால் பெரியளவில் காயங்கள் எதுவும் ஏற்பட்டு விடும் என்று பயந்து பூஜா ராணியின் பயிற்சியை நிறுத்துமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து தன்னுடைய தந்தையிடம் பல முறை பேசி பெரியளவில் காயம் வந்தால் குத்துச்சண்டை விளையாட்டிலிருந்து வெளியே வருவதாக கூறியுள்ளார். அதன்பின்னர் பயிற்சி பெற அவருடைய தந்தை அனுமதி அளித்துள்ளார். 


இதன் காரணமாக குத்துச்சண்டை பயிற்சியின் போது காயங்கள் ஏற்பட்டால் தன்னுடைய நண்பர்கள் வீட்டில் அல்லது பயிற்சியாளர் வீட்டில் பூஜா ராணி தங்கி விடுவார். காயம் குணம் அடைந்த பிறகு தான் தன்னுடைய வீட்டிற்கு செல்வார். இந்தச் சூழலில் 2009ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய ஜூனியர் சாம்பியன்ஷிப் 60 கிலோ எடைப்பிரிவில் முதல் முறையாக தங்கம் வென்று அசத்தினார். அதன்பின்னர் இவருடைய குடும்பத்திலும் பெரியளவில் ஆதரவு கிடைக்க தொடங்கியது. பின்னர் படிப்படியாக உயர்ந்தார். 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றார். 2017ஆம் ஆண்டில் இவருக்கு தோள்பட்டையில் பெரிய காயம் ஏற்பட்டது. இதனால் இவருடைய குத்துச்சண்டை வாழ்க்கையில் பெரிய கேள்விக்குறி எழுந்தது.




எனினும் இரண்டு ஆண்டுகாலம் நல்ல ஓய்வு எடுத்து காயத்தில் இருந்து சரியாக மீண்டு வந்தார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் 74 கிலோ எடைப்பிரிவில் தங்கம் வென்று அசத்தினார். அதைத் தொடர்ந்து தற்போது மீண்டும் இரண்டாவது முறையாக 74 கிலோ எடைப்பிரிவில் ஆசிய சாம்பியன்ஷிப் குத்துச்சண்டையில் தங்கம் வென்றுள்ளார். 30 வயதான பூஜா ராணி ஏற்கெனவே டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக் போட்டியிலும் தங்கம் வெல்லும் முனைப்பில் தற்போது தீவிரமாக பயிற்சி செய்து வருகிறார். இவர் மீதும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 


மேலும் படிக்க: Asian Boxing Championship | ஆசிய கோப்பை குத்துச்சண்டை : தங்கப் பதக்கத்தை தவறவிட்ட மேரி கோம்!