இந்திய டென்னிஸ் உலகில் நம்பிக்கை நட்சத்திரமாக கருதப்படுபவர் சானியா மிர்சா. இவர் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு பிறகு மீண்டும் சர்வதேச மகளிர் டென்னிஸ் தொடர்களில் பங்கேற்று வருகிறார். அந்தவகையில் தற்போது கிளேவிலேண்ட் ஓபன் டென்னிஸ் தொடரில் மகளிர் இரட்டையர் பிரிவில் பங்கேற்றுள்ளார். இந்தத் தொடரில் அமெரிக்காவின் கிறிஸ்டெய்ன் மெக்கேல் உடன் ஜோடி சேர்ந்து விளையாடி வருகிறார். இந்த இணை இத்தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரையிறுதிக்கு சென்றது. 


இந்நிலையில் இன்று அரையிறுதி போட்டி நடைபெற்றது. இதில் சானியா-மெக்கேல் இணை எக்ரி-ஹாரிசன் ஜோடியை எதிர்த்து விளையாடியது. இந்தப் போட்டியில் தொடக்கத்தின் சானியா ஜோடி சற்று பின்தங்கியிருந்தது. அதன்பின்னர் சுதாரித்து கொண்டு விளையாடியது. முதல் செட்டை டைபிரேக்கர் முறையில் 7-6 என்ற கணக்கில் சானியா ஜோடி வென்றது. இரண்டாவது செட்டில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்த சானியா-மெக்கேல் 6-2 என்ற கணக்கில் எளிதாக வென்றனர். அத்துடன் 7-6,6-2 என்ற கணக்கில் அரையிறுதி போட்டியை வென்று சானியா-மெக்கேல் ஜோடி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.


 






இந்தப் போட்டிக்கு பிறகு சானியா மிர்சா மைதானத்தில் தன்னுடைய மகனுடன் ஒரு சில வார்த்தைகளை பகிர்ந்தார். அதில், "நான் வரும் பகுதியில் பொதுவாக ஒரு குழந்தை பிறந்துவிட்டால் அத்துடன் வாழ்க்கை முடிந்துவிட்டது என்று நினைப்பார்கள். ஆனால் அப்படி இல்லை குழந்தை பிறந்ததற்கு பிறகு தான் நமக்கு ஒரு புதிய வாழ்க்கை தொடங்கும்" எனக் கூறியுள்ளார். சானியா மிர்சாவும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கும் 2010ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு 2018ஆம் ஆண்டு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. 


இதனால் இரண்டு ஆண்டுகள் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்காமல் சானியா மிர்சா ஓய்வு எடுத்து வந்தார். அதன்பின்பு 2020ஆம் ஆண்டு மீண்டும் டென்னிஸ் போட்டிகளில் களமிறங்கி வருகிறார். அவர் விளையாட போகும் பெரும்பாலான தொடருக்கு தன்னுடைய மகனையும் அவர் உடன் அழைத்து சென்று வருகிறார். குழந்தை பிறந்த பிறகும் தன்னுடைய கனவை ஒரு பெண் எட்ட முடியும் என்பதற்கு ஒரு நல்ல சான்றாக இவர் விளங்கி வருகிறார். சமீபத்தில் நடைபெற்ற டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் இரட்டையர் பிரிவில் இவர் அன்கிதா ரெய்னாவுடன் பங்கேற்றார். அதில் முதல் சுற்றில் தோல்வி அடைந்து வெளியேறினார். இது சானியா மிர்சாவிற்கு 4ஆவது ஒலிம்பிக் தொடர் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: பாராலிம்பிக் வீராங்கனை உருவத்தை பார்பி பொம்மையாக்கிய நிறுவனம் !- யார் தெரியுமா அந்த வீராங்கனை ?