டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. மூன்றாவது நாளான இன்று வரை டோக்கியோ பாராலிம்பிக் தொடரில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன. இந்தச் சூழலில் டோக்கியோ பாராலிம்பிக்கில் தற்போது பங்கேற்று உள்ள வீராங்கனை ஒருவரின் வடிவத்தை பார்பி நிறுவனம் பொம்மையாக செய்து கொடுத்துள்ளது. பொம்மைகள் விற்பனையில் உலகளவில் பிரபலம் அடைந்துள்ள அந்த நிறுவனம் இப்படி ஒரு பாராலிம்பிக் வீராங்கனையை பொம்மையாக செய்தது பெரும் ஆச்சரியம் மற்றும் வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது.
பார்பி நிறுவனம், அந்த வீராங்கனையை தேர்வு செய்ய காரணம் என்ன?
பார்பி நிறுவனம் தற்போது செய்துள்ள பொம்மை வடிவத்தில் இருக்கும் வீராங்கனை சிலி நாட்டைச் சேர்ந்த ஃபிரான்சிஸ்கா மார்டோன்ஸ். 43 வயதான சிலி நாட்டின் சான்டியாகோ நகரில் 1977ஆம் ஆண்டு பிறந்தவர். இவர் தன்னுடைய 22 வயது வரை அனைவரையும் போல் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் இருந்து வந்துள்ளார். 1999-ஆம் ஆண்டு இவரின் வாழ்க்கையில் பெரிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆண்டு போர்டோ ரிகோ தீவில் இவர் வேலை செய்து வந்துள்ளார். அப்போது அங்கு ஏற்பட்ட சூறாவளி காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அந்த விபத்தில் இவர் ஃபிரான்சிஸ்கா சிக்கியுள்ளார். அந்த விபத்தில் அவருடைய இடது தண்டுவட பகுதியில் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தன்னுடயை வாழ்க்கையில் இனிமேல் நடக்க முடியாத சூழல் உருவானது. அத்துடன் சக்கர நாற்காலியை பயன்படுத்தவேண்டிய நிலையும் ஏற்பட்டது. இந்த விபத்து தன்னுடைய வாழ்க்கையை முடக்கி போட்டுவிடக்கூடாது என்பதில் அவர் உறுதியாக இருந்தார். இதனால் பாரா விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்த விரும்பினார். அதில் வீல்சேர் டென்னிஸ் விளையாட்டில் அதிக கவனம் செலுத்தி வந்தார். 2007-ஆம் ஆண்டு முதல் சர்வதேச வீல்சேர் டென்னிஸ் போட்டிகளில் பங்கேற்றார்.
2012-ஆம் ஆண்டு லண்டன் ஒலிம்பிக் போட்டியில் இவர் வீல்சேர் டென்னிஸ் போட்டியில் இரண்டாவது சுற்றுவரை முன்னேறினார். அதைத் தொடர்ந்து 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக் போட்டியில் காலிறுதி வரை முன்னேறியிருந்தார். எனினும் வீல்சேர் டென்னிஸ் விளையாட்டில் அவரால் பெரிதாக சாதிக்க முடியவில்லை என்று கருதினார். இதன் காரணமாக 2017-ஆம் ஆண்டு வீல்சேர் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். அதன்பின்னர் பாரா தடகளத்தில் கவனம் செலுத்த தொடங்கினார்.
குண்டு எறிதலில் அதிக பயிற்சி மேற்கொண்டு வந்தார். அதன் பயனாக 2019-ஆம் ஆண்டு நடைபெற்ற உலக பாரா தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் எஃப் 55 குண்டு எறிதலில் இவர் பங்கேற்றார். அதில் வெள்ளிப்பதக்கம் வென்றார். அதே தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் அவர் ஈட்டி எறிதலில் 4-வது இடத்தையும், வட்டு எறிதலில் 6-வது இடத்தையும் பிடித்தார். இதனால் சிலி நாட்டில் மிகவும் போற்றப்படும் பாராலிம்பிக் வீராங்கனையாக வலம் வந்தார். தற்போது டோக்கியோ பாராலிம்பிக் போட்டிகளிலும் தடகள பிரிவில் இவர் பங்கேற்றுள்ளார். இவரை கௌரவிக்கும் வகையில் பார்பி நிறுவனம் அந்த பொம்மையை செய்துள்ளது. அதில் குண்டு எறிதல் மற்றும் டென்னிஸ் ஆகிய இரண்டையும் காட்டும் வகையில் பொம்மை வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பொம்மை தொடர்பாக ஃபிரான்சிஸ்கா, "இந்த பொம்மை என்னுடைய இயலாமையை காட்டுவதற்கு அல்ல. என்னுடைய சாதனைகளை காட்டுவதற்காக செய்யப்பட்டது. இந்த பொம்மையை பார்க்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இயலாமை தன்னுடைய லடசியத்துக்கு தடையாக இருக்கக்கூடாது என்று புரிய வேண்டும்" எனக் கூறியுள்ளார்.
மேலும் படிக்க: டோக்கியோ பாராலிம்பிக்கில், இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை உறுதி செய்த பவினா : கடந்துவந்த பாதை !