இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் பங்கேற்பதற்காக இங்கிலாந்தில் உள்ளது. வரும் 18ஆம் தேதி இந்தப் போட்டி தொடங்க உள்ளதால் இந்திய வீரர்கள் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் தங்களுக்குள் ஒரு பயிற்சி போட்டியிலும் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தச் சூழலில் இந்திய கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் தொடர்பாக முன்னாள் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயித் அஜ்மல் ஒரு சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். 


இது தொடர்பாக சயித் அஜ்மல் ஒரு தளத்தின் யூடியூப் சேனலுக்கு அளித்தப் பேட்டியில், "ஐசிசி யாரிடமும் சொல்லாமலும் கலந்து ஆலோசிக்காமலும் பந்துவீச்சு விதிமுறைகளை மாற்றியது. 8 ஆண்டுகளுக்கும் மேலாக விளையாடி வந்த எனக்கு அது பெரிய சவாலான ஒன்றாக அமைந்தது. அந்த சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் புதிய விதிகளால் தடை செய்யப்படாமல் இருக்க 6 மாதங்கள் விளையாட வைக்கப்படாமல் இருந்தார். ஒரு பாகிஸ்தான் பந்துவீச்சாளர் தடை செய்யப்பட்டால் அவர்களுக்கு அது பெரிய விஷயம் அல்ல. அவர்கள் எப்போதும் பணத்தை பிரதானமான ஒன்றாக பார்த்தனர்" என்று ஐசிசி மீது குற்றச்சாட்டை முன்வைத்தார். 




கிரிக்கெட் விளையாட்டில் பல பந்துவீச்சாளர்கள் தூஸ்ரா பந்தை வீச தொடங்கியுடன் ஐசிசி பந்துவீச்சிற்கான புதிய விதிமுறைகள் அப்போது அறிவித்திருந்தது. அதன்படி பந்துவீச்சாளர் தனது கையை 15 டிகிரிக்கு குறைவாக மடக்கும் பட்சத்தில் அது தவறான பந்துவீச்சு என்று கருதப்படும். மேலும் அந்த வீரர் பந்துவீச்சு முறையை மாற்றும் வரையில் போட்டிகளில் பந்துவீச தடை செய்யப்படுவார். இந்த காரணத்திற்காக அஜ்மல் பந்துவீச்சு தடை செய்யப்பட்டது. இது தொடர்பாக தான் அவர் அந்த வீடியோவில் பேசியுள்ளார். 


மேலும் சமீபத்தில் அஸ்வின் தனது தூஸ்ரா பந்தை வீச ஏதுவாக ஐசிசியிடம் அந்த 15 டிகிரி விதியை சற்று தளர்த்து வேண்டும் என்று கேட்டு கொண்டதாக ஒரு தவறான செய்தி ஒன்று பரவி வந்தது. அது தொடர்பாக அஸ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதில், "நான் அப்படி ஒன்று கூறவே இல்லை. இது முற்றிலும் தவறான ஒன்று. என்னுடைய யூடியூப் சேனலில் அப்படி ஒன்றும் நான் தெரிவிக்கவில்லை. என்னுடைய யூடியூப் சேனல் மக்களுக்கு எளிமையான முறையில் கிரிக்கெட்டை புரிய வைப்பதற்காக உள்ளது. அதில் வரும் வீடியோ தொடர்பாக சரியான மொழி பெயர்ப்பு தெரியவில்லை என்றால் இப்படி தவறான செய்தியை போடாதீர்கள்" எனப் பதிவிட்டிருந்தார். இந்தச் சூழலில் தற்போது சயித் அஜ்மல் இந்த கருத்தை தெரிவித்துள்ளது மீண்டும் இது தொடர்பான சர்ச்சையை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க:'உள்ளாடை அணிந்து விளையாடுங்கள்’ ரசிகர் யோசனைக்கு பதிலடி தந்த கிரிக்கெட் வீராங்கனை