ஒரு வாய்ப்பு இன்னொருவரிடத்தில் இருந்து நமக்கு கிடைத்தால், அதில் நீங்கள் ஜெயித்தால், ஜெயித்த நீங்கள் வெற்றியை குவித்தால்... அது தான் மலேசியா வாசுதேவன். வாசு என இசை உலகில் அனைவராலும் அழைக்கப்படும் மலேசியா வாசுதேவனுக்கு இன்று 77வது பிறந்த நாள்.




மலேசியா டூ தமிழ்நாடு


இளையராஜாவின் அறிமுகங்களில், வாசு சாருக்கு தனி இடம் உண்டு. மலேசியாவின் சிலாங்கூரில் ராஜகிரி எஸ்டேட்டில் பிறந்தவர் தான் வாசு. இயற்பெயர் சாத்து ஆறுமுகம் நாயர். பூர்வீகம் கேரளா என்றாலும், மலேசியாவில் செட்டில் ஆன குடும்பம். இளமையில் இசை ஆர்வம் இருந்ததால் அங்குள்ள தமிழர் இசைக் குழு ஒன்றில் பாடகராக இருந்தார். நாடகம், நடிப்பு, இசை என போய் கொண்டிருந்த சாத்து ஆறுமுகத்தின் இசை தாகம். தாய் தமிழ்நாட்டில் அரங்கேற்ற வேண்டும் என்கிற மோகம். அதுவே அவரை தமிழ்நாட்டிற்கு அழைத்து வந்தது. இளையராஜாவின் பாவலர் பிரதர்ஸ் குழுவில் இணைந்து மேடைக்கச்சேரிகளில் பாடி வந்தார். இங்கு வந்த பின் சாத்து அறிமுகம், வாசுவாக மாறினார். வாசு என்கிற பெயரில் பலர் இருந்ததால், மலேசியா என்கிற அடைமொழியோடு மலேசியா வாசுதேவன் ஆனார். ஜி.கே.வெங்கடேஷ் இசையில் பொல்லாத உலகில் ஒரு போராட்டம் படத்தில் ‛பாலு விக்கிற பத்தம்மா...’ என்ற பாடல் தான் அவரது முதல் பாடல். இதை எத்தனை பேர் கேட்டிருப்பீர்கள் என்று கூட தெரியாது. அன்றே அவருக்கும் அது தோன்றியிருக்க கூடும். நல்ல வாய்ப்புக்கு காத்திருந்தார்.




சொதப்பிய எஸ்.பி.பி., இன்ஸ்டண்ட் காபியாக வாசு!


இளையராஜாவுக்கு வாய்ப்பு கிடைத்து, தனக்கான அடையாளத்தை அவர் பதிவு செய்து கொண்டிருந்த சமயம் அது. அவருடன் இருந்தவர்களும் வாய்ப்புகளை பெற்று வந்தனர். எஸ்.பி.பி.,-இளையராஜா-ஜானகி கூட்டணி , இசையில் வேறு சம்பவம் செய்து கொண்டிருந்தார்கள். இப்போது 16 வயதினிலே படத்திற்கு இசையமைக்கிறார் இளையராஜா. ‛செவ்வந்தி பூ எடுத்த சின்னக்கா... சேதி என்னக்கா...’ என்கிற பாடல் பதிவு செய்ய வேண்டும். எஸ்.பி.பி.,-ஜானகி பாடுவதாக இருந்த பாடல், ஸ்டூடியோவில் எல்லாம் ரெடி. பாலுக்காக வெயிட்டிங். பாலு வருகிறார். எனக்கு தொண்டை சரியில்லை என கூறுகிறார். ஒட்டுமொத்த ஸ்டூடியோவும் அதிர்ந்து நிற்கிறது. எல்லாரும் தயாராக இருக்கிறார்கள். ஜானகி வந்தாச்சு. இப்போ எப்படி மாற்றுவது.... என ஒரே குழப்பம். ராஜாவும் கடிந்து கொள்கிறார். என்ன செய்யலாம் என யோசித்த போது, ‛வாசு இருக்கான்ல... அவனை வெச்சு சமாளிப்போம்... அப்புறம் ஏதாவது பண்ணி மேக்கப் பண்ணிக்கலாம்,’ என முடிவு செய்கிறார்கள். வாசு எப்போதும் ஸ்டூடியோவில் இருப்பவர். ராஜா வருகிறார்... ‛வாசு... பாலு சொதப்பிட்டான்... நீ பாடு; கமலுக்கு பாடப்போற... இதுல நீ ஜெயிச்சுட்டா... எங்கேயோ போயிடுவ... இல்லைன்னா பாத்துக்கோ..’ என, கூறிவிட்டு, ரிக்கார்டிங் தியேட்டருக்குள் சென்று விடுகிறார். திடீர் வாய்ப்பு. பாலு முடியாது என்பதால் கிடைத்த வாய்ப்பு. எந்த முன் தயாரிப்பும் இல்லாமல், இன்ஸ்டண்ட் வாய்ப்பு. போதாக்குறைக்கு ராஜா சொன்ன வார்த்தைகள் வேறு, என உடல் முழுக்க பதட்டத்தோடு ஸ்டூடியோ உள்ளோ போகிறார்.




‛தந்தானே தானே தனே தந்தானா... ஹோய்..’


அங்கு அதை விட இன்னொரு பதட்டம் காத்திருந்தது. ஜானகி பாட தயாராக நிற்கிறார். ‛என்னது... ஜானகி கூட பாடப்போறோமா...’ என, மனிதருக்கு இரட்டை பதட்டம் வந்துவிட்டது. ஒரு வழியாக அவரை தேற்றி, மைக் முன் நிறுத்திவிட்டனர். ‛தந்தானே தானேதனே தந்தானா... ஹோய் தந்தானா...’ என கோரஸ் துவங்கியதுமே, முடிவு செய்துவிட்டார் வாசு, இதை விடக்கூடாது என்று. ‛செவ்வந்தி பூ முடிச்ச சின்னக்கா... சேதி என்னக்கா... நீ சிட்டாட்டம் ஏன் சிரிச்ச சொல்லக்க... முத்து பல்லக்கா...’ என பாடலை பாடி முடித்து வெளியே வந்த வாசுக்கு ஒரே கிளாப்ஸ். ஜானகியே வாசுவை அழைத்து, ‛ நல்லா பாடுனீங்க... நல்லா வருவீங்கனு,’ வாழ்த்தியிருக்காங்க. இப்போ தான் மனுசனுக்கு கான்பிடண்ட் வந்துருக்கு. அதே படத்தில் ஆட்டுக்குட்டி முட்டையிட்டு பாடலும் வாசு பாடியதே.




ஓப்பனிங், தத்துவம், சோகம்... வாசுவை கூப்பிடுங்க!


அதுக்கப்புறம் வாசுக்கு வாய்ப்புகள் குவிந்தன. அந்த குரலில் இருந்த வேறு விதமான உணர்வு, குறிப்பாக கிராமிய கதைக் களங்களுக்கு பெரிதும் எடுபட்டது. அதனால் வாசு ஹிட்ஸ் வரத்துவங்கின. இப்போதும் மலேசியா ஹிட்ஸ் பிரபலமானது. அதிலும் டூயட் வேற ரகம். இசைஞானிக்கு எஸ்.பி.பி-சித்ரா எப்படியோ, அப்படி தான் வாசு-ஜானகி ஜோடி. அவர்களின் டூயட்டுகள் எப்போதும் பிரசித்தமானது. ரம்யமானது. வாசு தான் மலேசியாவிலேயே பாடகர் என்றில்லாமல், நாடகங்களிலும் ஆர்வம் காட்டியவராச்சே. இப்போது பேர், புகழ் இருக்கிறது. நடிகராகாமல் இருப்பாரா? வில்லன், நகைச்சுவை, குணசித்திரம் என அவர் ஏற்காத கதாபாத்திரங்களே இல்லை. அதிலும் அவரது குரல் தனிக்கவனம் பெற்றது. டயலாக் உச்சரிப்பில் உயிர்ப்பு இருந்தது. பாடகராகவும், நடிகராகவும் தன் பயணத்தை தண்டவாள ரயில் போல நகர்த்தினார். இடையில் சாமந்திப்பூ, பாக்கு வெத்தலை, ஆயிரம் கைகள் போன்ற படங்களுக்கு இசையமைக்கவும் செய்தார். எஸ்.பி.பி., மாதிரியே பல படங்களில் சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்டோருக்கு ஓப்பனிங் பாடல்கள் பாடிய பெருமை வாசுவுக்கு உண்டு. அவரது ஹிட்டில் ரஜினி பாடல்கள் அதிகம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஓப்பனிங் சாங்கா, தத்துவ பாட்டா, சோக கீதமா... கூப்பிடுங்க வாசுவ... என்று தான் இருந்தது. 




விடைபெற்றார் மலேசியா வாசுதேவன்!


திடீரென பக்கவாத நோயால் பாதிக்கப்பட்ட மலேசியா வாசுதேவன், அதற்கான சிகிச்சையில் இருந்தார். அந்த இடைப்பட்டகாலம், நிறைய வேதனைகளை அனுபவித்தார். 2011 பிப்ரவரி 20ம் தேதி ஞாயிற்று கிழமையன்று பகல் 1 மணியளவில் இந்த மண்ணை விட்டு மறைந்தார் மலேசியா வாசுதேவன். தன்னுடைய 66வது வயதில் அவர் தன்னுடைய கலைப்பணியை நிறைவு செய்து விடைபெற்றார். இன்று அவருக்கு 77 வது பிறந்ததாள். இன்று அவர் நம்மிடம் இல்லை என்றாலும், அவர் விட்டுச் சென்ற முத்தான பாடல்கள், என்றும் அவரை நம்முடன் பயணிக்க வைக்கின்றன. ‛பூங்காற்று திரும்புமா...’ என்கிற பாடல் கேட்கும் போதெல்லாம்.... வாசு சார் நியாபகம் வருவதை தவிர்க்கவே முடியாது. பூங்காற்று வருமா என தெரியாது... வாசு சார் வருவார்... இசையின் வழியே... நம் இதயத்திற்குள்! வாசு என்கிற இசை பயணியின் இந்த பயணம், கோடிக்கணக்கான இசைப்பிரியர்களை மகிழ்வித்திருக்கிறது. மகிழ்விக்கும். ‛ஹேப்பி பெர்த்டே மலேசியா வாசுதேவன் சார்...!’


 


மேலும் படிக்க: ‛நான் போக்கிரிக்கு போக்கிரி ராஜா...’ டாப் 5 வாசு ஹிட்ஸ்!