அண்மையில் திருமலை நாயக்கர் மகாலின் ஒரு கல்வெட்டைத் தானும் அமைச்சர் தங்கம் தென்னரசுவும் பார்வையிட்டது குறித்து பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார் மதுரை எம்.பி. சு.வெங்கடேசன். அது குறித்த அவரது பதிவில், 


‘கல்வெட்டில் கண்ட புதையல் !



நேற்று, மாண்புமிகு தொழில்துறை மற்றும் தமிழ்வளர்ச்சித் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களுடன் சென்று திருமலைநாயக்கர் அரண்மனையில் நடைபெறும் புனரமைப்புப் பணிகளைப் பார்வையிட்டோம்.



அரண்மனையின் நாடகசாலைப் பகுதியைப் பார்த்துவிட்டு, உள்ளறையில் வைக்கபட்டிருந்த சிலைகளையும் கல்வெட்டுகளையும் பார்த்துக்கொண்டிருந்தோம். அப்பொழுது ஒரு கல்வெட்டின் அருகில் நின்று நீண்டநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு அவ்விடத்தைக் கடந்தோம். சிறிது நேரத்தில் ஆய்வுப்பணி முடிந்துவிட்டது.



நான் வாகனத்தில் ஏறியவுடன் ஊடகவியலாளர் ஒருவரிடமிருந்து தொலைபேசி வந்தது “சார், நீங்களும் அமைச்சரும் ஒரு கல்வெட்டினைப் பார்த்தபடி ரெம்ப நேரமா பேசிக்கிட்டு இருந்தீங்க, என்ன சார் அது?” என்றார்.



“அது ரெம்ப முக்கியமான கல்வெட்டுங்க” என்றேன்.



“முக்கியமானதுனா, எப்படி சார்?” என்றார்.



“எல்லாக் கல்வெட்டுகளும் முக்கியமானவைதாங்க, இது ரெம்ப முக்கியமானது, பொக்கிஷம் மாதிரின்னு வச்சுக்கோங்களேன்” என்றேன்.



”பொக்கிஷம்” என்ற சொல்லினை நான் பயன்படுத்தியதும் ஆர்வம் அதிகமாகி ”புதையல் பற்றியதா சார்” என்றார்.



புதையல்தான், ஆனா பொன், நகை பற்றியதன்று; மொழி பற்றியது, நமது வரலாறு பற்றியது, மகத்தான மனிதர் பற்றியது என்றேன். அடுத்தடுத்து சற்று விரிவாகவும் அதனைச் சொன்னேன். ஆனால் ”புதையலா?” என்று அவர் கேட்ட ஆர்வத்தை எனது விளக்கம் பூர்த்தி செய்தது போல் தெரியவில்லை.



திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த முன்னோடி, அரசாங்க தங்கச்சாலையின் மூலம் திருவள்ளுவருக்கு தங்க நாணயத்தை வார்த்து வெளியிட்ட மாமனிதர், எல்லீஸ் பதித்த கல்வெட்டு அது.



1818 ஆம் ஆண்டு சென்னையில் கடுங்குடிநீர் தட்டுப்பாடு நிலவியபோது, எல்லீஸ் அவர்கள் மக்களின் குடிநீர் தேவையைக் கருதி 27 கிணறுகளை வெட்டிவித்தார். அதில் ஒரு கிணறு ராயப்பேட்டை பெரிய பாளையத்தம்மன் கோயில் அருகில் வெட்டப்பட்டது. அக்கிணற்றின் கைப்பிடிச்சுவற்றில் கல்வெட்டு ஒன்றினை பதித்துள்ளார்.

வழக்கமான ஆங்கிலேயர் பாணியில் இல்லாமல், அழகிய தமிழ் செய்யுள் வடிவில் இக்கல்வெட்டினை வடிவமைத்தார். அதில்

”இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும்

வல்லரணு நாட்டிற் குறுப்பு”

என்ற திருக்குறளும் இடம் பெற்றுள்ளது.


அக்கெல்வெட்டுதான் இப்பொழுது திருமலை நாயக்கர் அரண்மனையில் உள்ள அருங்காட்சியகத்திலே இருக்கிறது.

 



பல நூறு அல்லது ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் கல்வெட்டில் பொறிக்கப்பட்ட அக்குறள் எத்தனையாவது வரியிலே இருக்கிறது எனத் தேடி, அதனை 34ஆவது வரியில் கண்டு விரல்தொட்டு வாசித்தார் அமைச்சர்.



அதன்பின் எல்லீஸ் பற்றி பங்களிப்பு செய்த பலரைப்பற்றி பேசிக்கொண்டோம். அயோத்திதாசரின் பாட்டனார் கந்தப்பன் துவங்கி ஐராவதம் மகாதேவன், வேதாசலம், தாமஸ் டிரவுட்மென், ஆ.இரா.வெங்கடாசலபதி வரை பேசியபடி விடைபெற்றோம்.



நாற்பது வயது நிறைவுறும் வரை நூற்களை எழுதி வெளியிடக்கூடாது என கருதியிருந்த எல்லீஸ் நாற்பத்தி ஓராவது வயதில் சட்டென இறந்து போனது தமிழுக்கு ஏற்பட்ட மாபெரும் இழப்பு.



செய்தித்தாளினைப் போல கல்வெட்டினை படிக்கிறார் தமிழக அமைச்சர். ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சரோ, இந்தியாவில் இதுவரை கண்டு பிடிக்கப்பட்டுள்ள 80 000 கல்வெட்டில் பாதிக்கும் மேல் பதிப்பிக்கப்டாமல், படிக்காமல் கிடக்கிறது. அதற்குப் பணியாளர்களை நியமியுங்கள் என்றால் ஒருவரைக்கூட நியமிக்க மாட்டேன் என்கிறார்.



தங்கம் தென்னரசைப் பாராட்டிய கையோடு பிரகலாத் சிங் பட்டேலுக்கு நீண்ட கடிதம் எழுத ஆரம்பிக்கிறேன்.



வரிகளை விரல்களால் தொடுவது, அதனைப் பொறித்தவனது பாதங்களைத் தொடுவதைப் போன்றது. கிணறுகளை மண்மூடலாம். நிரம்பிய நீர் வற்றலாம், தமிழுக்கு தொண்டாற்றியவனின் புகழ் ஒருபோதும் மறையாது.



எல்லீஸ் புகழ் நீடுறும்’ எனக் குறிப்பிடப்பட்டிருந்தது’

 

எல்லீஸ் கல்வெட்டில் பொறித்த அந்தக் குறளின் பொருள் என்ன தெரியுமா? 

ஊற்றும் மழையுமாகிய இருவகை நீர்வளமும், தக்கவாறு அமைந்த மலையும், அந்த மலையிலிருந்து ஆறாக வரும் நீர் வளமும், வலிய அரணும் நாட்டிற்கு உறுப்புகளாம், என்பதாகும். 

ஆங்கிலேயரான எல்லீஸ் பிரபு தமிழ்நாட்டின் நீர்வளத்தின் மீதான அக்கறையிலும், திருக்குறளின் மீதான பேரார்வத்திலும் அதனைக் கல்வெட்டில் பதித்தார் என்பது பெருமகிழ்வு.