இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியுடன் ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் ஒருநாள் தொடர் ஆகியவற்றில் பங்கேற்க இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் இரு மகளிர் அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை பிரிஸ்டோல் கவுண்டி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரு நாட்டு வீராங்கனைகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன் அவர்களுக்கு வழங்கப்பட்ட வெள்ளை நிற டெஸ்ட் உடையை அணிந்து தங்களது சமூக வலைதள பக்கங்களில் வீராங்கனைகள் பதிவிட்டு வருகின்றனர்.


அந்தவகையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான கேட் கிராஸ் தன்னுடைய டெஸ்ட் வெள்ளை நிற ஜெர்ஸி அணிந்து ஒரு படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அதற்கு ஒருவர் மிகவும் மோசமான கமெண்ட் பதிவு செய்திருந்தார். இதற்கு கேட் கிராஸ் தகுந்த பதிலடி கொடுத்தார். இது தொடர்பாக கேட் கிராஸ் பதிவிற்கு அந்த நபர், "நீங்கள் அனைவரும் உள்ளாடைகளுடன் விளையாடுங்கள். அப்போது தான் மகளிர் கிரிக்கெட் வர்த்தக ரீதியில் பெரிய வெற்றி அடையும். இதை ஏற்று கொள்வதற்கு கடினமாக இருந்தாலும் அது தான் உண்மை" எனப் பதிவிட்டிருந்தார். 


 






இதற்கு வீராங்கனை கேட் கிராஸ்,"உங்களுடைய விசித்திரமான யோசனைக்கு நன்றி. ஆனால் இதற்கு என்னிடம் முடியாது என்ற பதில் தான் உள்ளது" எனப் பதிவிட்டுள்ளார். இதற்கு அந்த நபர் மீண்டும் ஒரு பதிவை செய்தார். அதில்,"இது விசித்திரமான யோசனை அல்ல. அது தான் வர்த்தக உண்மை. சிறந்த மகளிர் கிரிக்கெட் வீராங்கனை கூட உரிய அங்கீகாரம் மற்றும் ஸ்பான்சர்ஷிப் கிடைக்காமல் உள்ளனர். அவர்களை உள்ளாடையுடன் களமிறக்கினால் ஸ்பான்சர்ஷிப் மற்றும் அதிக பார்வையாளர்கள் வருவார்கள்"என்று மீண்டும் ஒரு மோசமான பதிவை செய்துள்ளார். இவரின் இந்தப் பதிவை பலரும் வன்மையாக கண்டித்து வருகின்றனர். 


 






 






மேலும் இந்த மோசமான பதிவிற்கு மற்றொரு இங்கிலாந்து கிரிக்கெட் வீராங்கனையான அலெக்ஸாண்ட்ரா ஹார்ட்லியும் தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு பதிவை செய்துள்ளார். அதில், "நீங்கள் எல்லாம் குப்பைகளில் கிடக்க வேண்டிய நபர் " என்று பதிவிட்டுள்ளார். அவருக்கும் பதிலளித்த அந்த நபர்,"அலெக்ஸ் உங்களுடைய கருத்தை நான் மதிக்கிறேன். ஆனால் மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகள் உள்ளாடைகளுடன் விளையடினால் அதிக பணம் சம்பாதிக்க முடியும்" எனப் பதிவிட்டிருந்தார். அதற்கு ஹார்ட்லி,"நான் அந்த மாதிரி எண்ணத்தில் கிரிக்கெட் கரியரை தேர்ந்தெடுக்கவில்லை" என்று பதிலளித்துள்ளார். 


 






இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் கேட் கிராஸ் ஐபிஎல் தொடரின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகை. அவர் ஐபிஎல் போட்டிகளின் போது எப்போதும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஜெர்ஸி அணிந்து படங்களை பதிவிட்டு வருவார். அத்துடன் சென்னை அணிக்கு தொடர்ந்து தன்னுடைய ஆதரவை தந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 






மகளிர் கிரிக்கெட் வர்த்தக ரீதியில் ஆடவர் கிரிக்கெட் உடன் சமமாக இல்லை என்பதற்காக அதை எப்படி மேம்படுத்துவது என்பது குறித்தே யோசிக்க வேண்டும். அதைவிடுத்து இப்படி பட்ட கேவலமான யோசனைகளை தருவது மிகவும் தவரிக்கப்பட வேண்டிய ஒன்று என்று கிரிக்கெட் ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: இந்தியா அணி சந்திக்கும் முக்கிய சவால்கள் !