பெண்கள் உலகக் கோப்பையில் இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற காலிறுதி ஆட்டத்தில் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை தோற்கடித்து, அரையிறுதிக்கு முன்னேறியது. இளம் வீரர் சல்மா பரால்லுலோ கூடுதல் நேரத்தில் கோல் அடித்து வெற்றியை உறுதி செய்தார்.


முதலில் சமன் ஆன ஆட்டம்


வெலிங்டனில் நடந்த பரபரப்பான ஆட்டத்தில் 80 நிமிடம் வரை கோல்கள் எதுவும் வரவில்லை. மரியோனா கால்டென்டே ஸ்பெயினுக்காக 81வது நிமிடத்தில் பெனால்டியை கோலாக மாற்றினார். ஆட்டம் ஸ்பெயின் பக்கம் என்று நினைக்கையில் அடுத்த பத்து நிமிடத்தில் 91வது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்கு ஒரு கோல் வந்து சேர்ந்தது. நெதர்லாந்து வீரர் ஸ்டெபானி வான் டெர் கிராக்ட் கூடுதல் நேரத்தில் அந்த கோலை அடித்து சமன் செய்தார்.



(Image: Al Jazeera)


கூடுதல் நேரத்தில் கோல் அடித்து ஸ்பெயின் வெற்றி


இதனால் இந்த காலிறுதிப் போட்டி அரை மணி நேர கூடுதல் நேரத்தை பெற்றது. அதிலும் ஆரம்பத்தில் இரு அணிகளும் கோல் அடிக்காத நிலையில் ஆட்டம் பெனால்டிக்கு செல்லும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 19 வயதான பரால்லுலோ அயிங்கோனோ, தனியாக சென்று ஒரு அற்புதமான கோலை அடிக்க ஸ்பெயின் அணியின் வெற்றிக்கு வித்திட்டார். இதன் விளைவாக, செவ்வாயன்று ஆக்லாந்தில் நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில், ஸ்பெயின் அணி, ஸ்வீடன் அல்லது ஜப்பானுக்கு எதிராக மோதும் என்று உறுதியாகியுள்ளது. 


தொடர்புடைய செய்திகள்: World Cup 2023 Tickets: காலண்டரை எடுங்க, குறிங்க.. இந்தெந்த நாட்களில் உலகக் கோப்பை டிக்கெட்கள் விற்பனை.. ட்வீட் போட்ட ஐசிசி


நெதர்லாந்தை பலமுறை காத்த கோல் கீப்பர்


இந்த போட்டி முழுவதுமே ஸ்பெயின் அணி ஆதிக்கம் செலுத்தும் போட்டியாக அமைந்தது. ஜப்பானிடம் 4-0 என்று க்ரூப் ஸ்டேஜ் போட்டிகளில் தோல்வி அடைந்த பின்னர் ஸ்பெயின் இந்த நிலையில் தற்போது எட்டியுள்ளது. 16-வது சுற்றில் சுவிட்சர்லாந்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. முதல் பாதியில் ஸ்பெயின் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி, 11 முறை கோல் முயற்சிகளை மேற்கொண்டது. ஆல்பா ரெடோண்டோ அடித்த ஹெடர் கோல் கீப்பர் டாப்னே வான் டோம்செலாரால் தடுக்கப்பட்டு, போஸ்ட்டின் மீது மோதி வெளியே சென்றது. கோல் கீப்பரால் மட்டுமே நெதர்லாந்து அணி இரண்டு முறை மீட்கப்பட்டனர்.



(Image: Al Jazeera)


ஆட்டத்தின் கடைசியில் இரண்டு கோல்கள்


இரண்டாவது பாதியில் நெதர்லாந்து லேசாக கை ஓங்க தொடங்கியது. பெனால்டி பாக்ஸிற்குள் பாரலூலோ அடித்த ஷாட், வான் டெர் கிராக்ட்டின் கையை தாக்கியதால் 81வது நிமிடத்தில் ஸ்பெயின் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. அதனை கோலாக மாற்றினார் கால்டெண்டே. பிறகு 90 நிமிடம் முடிந்த பின்னர் நெதர்லாந்து அணிக்கு அந்த கூடுதல் நேரத்தில் நிறைய வாய்ப்புகள் கிடைத்தன. அதில் 91 வது நிமிடத்தில், விக்டோரியா பெலோவாவால் தொலை தூரத்தில் இருந்து கம்பத்திற்கு அருகில் அனுப்பப்பட்ட பந்தை எடுத்து கோலாக மாற்றினார் வான் டெர் கிராக்ட். 81 வது நிமிடத்தில் தன்னால் ஏற்பட்ட தவறை, 91 வது நிமிடத்தில் தானே திருத்தி ஆட்டத்தை சமன் செய்தார்.