திங்களன்று நைஜீரியாவுக்கு எதிரான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் போட்டியிட்ட இங்கிலாந்து அணியின் சிறந்த வீராங்கனையான லாரன் ஜேம்ஸ், நைஜீரிய வீராங்கனையின் மீது ஏறி நடந்து சென்றதற்காக கால்பந்து நிர்வாகக் குழுவால் இரண்டு ஆட்டங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். 


ரெட் கார்டாக மாற்றிய நடுவர்


மகளிர் ஃபிஃபா உலகக் கோப்பை ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. பிரிஸ்பேனில் நடந்த இங்கிலாந்து மற்றும் நைஜீரிய அணிகளுக்கு இடையேயான ரவுண்ட் ஆஃப் 16 சுற்றுக்கான போட்டியில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. நைஜீரியாவின் டிஃபெண்டர் மிச்செல் அலோசி மீது ஏறி சென்றதற்காக லாரன் ஜேம்ஸ் சிவப்பு அட்டையை பெற்றார். முதலில் மஞ்சள் அட்டையை காட்டிய நடுவர், ரிப்ளே பார்த்துவிட்டு கடும் கோபத்துடன் களத்திற்கு திரும்பி வந்து, "எல்லோ கார்டு நீக்கப்படுகிறது, ரெட் கார்டு கொடுக்கிறோம்," என்று மைக்கில் கூறினார். 






இரண்டு ஆட்டங்கள் ஆட முடியாது


120 நிமிடங்களுக்குப் பிறகு கோல் ஏதுமின்றி பெனால்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்த போட்டியை இங்கிலாந்து அணி வென்றுவிட்ட காரணத்தால், காலிறுதி போட்டியில் லாரன் ஜேம்ஸால் விளையாட முடியாது. அந்த அணி சனிக்கிழமை சிட்னியில் கொலம்பியாவுக்கு எதிராக ஆட உள்ளது. ஒரு வேளை அதிலும் வென்று அரையிறுதி சென்றால் அதிலும் லாரன் ஜேம்ஸால் ஆட முடியாது. ஒரு வேளை இறுதிப்போட்டி சென்றால் அதில் ஆடலாம். 


தொடர்புடைய செய்திகள்: World Cup 2023 Tickets: காலண்டரை எடுங்க, குறிங்க.. இந்தெந்த நாட்களில் உலகக் கோப்பை டிக்கெட்கள் விற்பனை.. ட்வீட் போட்ட ஐசிசி!


கூடுதலாக ஒரு ஆட்டத்திற்கு தடை சேர்ப்பு


சிவப்பு அட்டை கொடுத்தபோதே கொலம்பியாவுக்கு எதிரான இங்கிலாந்தின் காலிறுதி ஆட்டத்தில் லாரன் ஜேம்ஸ் கலந்து கொள்ள முடியாது என்பது உறுதி ஆனது. ஆனால் அவரது செயல் வன்முறை நடத்தைக்காக இருந்த காரணத்தினால் ஃபிஃபாவின் ஒழுக்காற்றுக் குழு, அதோடு ஒரு கூடுதல் ஆட்டத்திலும் தடையை சேர்த்து, வியாழன் அன்று அறிவித்தது. "இந்த இடைநீக்கம் FIFA மகளிர் உலகக் கோப்பை காலிறுதி மற்றும் அதைத் தொடர்ந்து அடுத்த சர்வதேச போட்டிக்கு வழங்கப்படும்" என்று FIFA ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.






என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?


லாரன் ஜேம்ஸ் இங்கிலாந்தின் சிறந்த வீரர்களில் ஒருவர். ஜேம்ஸ், இந்த தொடரில் மூன்று கோல்களுடன், இங்கிலாந்தின் மிகவும் தேவையான வீரராக உள்ளார். இங்கிலாந்து எஞ்சியிருக்கும் முன்னணி அணிகளில் ஒன்றாகும், குறிப்பாக அமெரிக்கா மற்றும் ஜெர்மனியின் வெளியேற்றத்திற்குப் பிறகு, இங்கிலாந்து அணிக்கு கோப்பை வெல்வது எளிதாக இருந்திருக்கும். ஆனால் அவர்களது முக்கிய வீரர் இல்லாமல் இறுதிப்போட்டி செல்ல முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. X சமூக வலைதளத்தில் இதனை ஆட்டத்தின் ஆக்ரோஷத்தில் இதெல்லாம் நடப்பது சகஜம் தான் என்று கூறிய அலோசியிடம், லாரன் ஜேம்ஸ் வெளிப்படையாக மன்னிப்பு கேட்டார். இந்த தொடரின் இறுதிப் போட்டி ஆக.20ம் தேதி நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.