FIFA உலகக் கோப்பை 2022 நாக் அவுட் கட்டத்திற்குள் நுழைந்துள்ள நிலையில் அதற்காக பயன்படுத்தப்படும் பந்துகள் சார்ஜ் செய்யப்படுவதை காட்டும் புகைப்படம் வெளியாகி வைரலாகி உள்ளது. 


சார்ஜ் போடப்படும் பந்துகள்


உலகக் கோப்பைக்கு முன்னதாகவே, போட்டியில் பயன்படுத்தப்படும் அதிகாரப்பூர்வ கால்பந்துகளை அடிடாஸ் வெளியிட்டது. அதிகாரப்பூர்வ மேட்ச் பந்திற்கு அரபு மொழியில் பயணம் என்று பொருள்படும் "அல் ரிஹ்லா" என்று பெயரிடப்பட்டுள்ளது. பொதுவாக, பந்துகள் போட்டிக்கு முன் பம்ப் செய்யப்படும் என்பது அனைவரும் அறிந்ததுதான். ஆனால் இந்த FIFA உலகக் கோப்பையில், மேட்ச்சில் பயன்படுத்தப்படும் பந்துகள் சார்ஜ் செய்யப்படுகின்றன. உலகக் கோப்பைக்கு சில மாதங்களுக்கு முன்பு, போட்டியில் பயன்படுத்தப்படும் பந்துகளில் சென்சார்கள் இருக்கும் என்று FIFA மற்றும் அடிடாஸ் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த பந்தில் உள்ள சிஸ்டம் எப்படி செயல்படுகிறது என்பதற்கான அனிமேஷன் விடியோ ஜூலை மாதமே வெளியிடப்பட்டது. அது எப்படி தயாரிக்கப்படுகிறது என்பது வரை வீடியோவாக வெளியாகி இருந்த நிலையில் தற்போது அந்த பந்துகள் விளையாட்டரங்கில் சார்ஜ் செய்யப்படும் புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.






பந்தை சார்ஜ் செய்வதற்கான காரணம்


பந்தினுள் அமைக்கப்பட்ட சென்சார் இருப்பதுதான் பந்து சார்ஜ் செய்ய காரணம். இந்த சென்சார் பந்தின் வேகம் மற்றும் திசையை அளவிடும். VAR மூலம் பந்து-கண்காணிப்பு மற்றும் ஆஃப்சைடு சரிபார்ப்புகளையும் மிகத் துல்லியமாக இதன் மூலம் பார்க்கமுடியும். சார்ஜ் செய்யக் கூடிய சிறிய பேட்டரி இதனுள் உள்ளது. செயலில் இருக்கும் போது, பேட்டரி ஆறு மணி நேரம் வரை தாங்குகிறது. பயன்பாட்டில் இல்லை என்றால் 18 மணி நேரம் வரை நீடிக்கிறது. 


தொடர்புடைய செய்திகள்: TN Rain Alert: உருவானது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி.. வரும் 7,8, 9 ஆம் தேதிகளில் தமிழகத்தில் கன மழை எச்சரிக்கை..


வெளிச்சத்திற்கு வந்த டெக்னாலஜி


போர்ச்சுகல் மற்றும் உருகுவே அணிகளுக்கிடையிலான போட்டியின் போது புருனோ பெர்னாண்டஸ் ஒரு கோல் அடித்தார், அந்த கோலை அடித்தது கிறிஸ்டியானோ ரொனால்டோ அல்ல என்பது உறுதிசெய்யப்பட்ட பின்னர்தான் இந்த தொழில்நுட்பம் வெளிச்சத்திற்கு வந்தது. முன்பே அறிவிக்கப்பட்டிருந்தாலும், இந்த போட்டிக்கு முன், இந்த தொழில்நுட்பம் பற்றி பலருக்கு தெரியாது. சமீபத்தில் கால்பந்தில் சார்ஜர் பொருத்தப்பட்ட படம் சமூக வலைதளங்களில் வைரலானதில் இருந்து பலர் இதுகுறித்து பேசி வருகின்றனர்.






எங்கு தயாரிக்கப்படுகிறது


அறிக்கைகளின்படி, அடிடாஸ் FIFA உலகக் கோப்பைக்கான பந்துகளைத் தயாரிக்க மூன்று ஆண்டுகள் எடுத்துக்கொண்டுள்ளது. விளையாட்டில் புள்ளிவிவரங்களைப் பயன்படுத்துவதில் பந்து குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருக்கக்கூடும். FIFA உலகக் கோப்பை 2022 போட்டி பந்துகளில் பயன்படுத்தப்படும் சென்சாரின் எடை 14 கிராம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கால்பந்துகள் பாகிஸ்தானின் சியால்கோட்டில் தயாரிக்கப்படுகின்றன. இந்த பந்துகளில் KINEXON நிறுவனத்தின் சென்சார்கள் பயன்படுத்தப்படுகின்றன. 16-வது சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடையும் நிலையில் விரைவில் காலிறுதிப் போட்டிகள் தொடங்கி, இறுதிப் போட்டி டிசம்பர் 18-ம் தேதி நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.