உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப்போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை. 22வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 20) கத்தார் நாட்டில் தொடங்கி நடைபெற்று வருகிறது. 32 அணிகள் 64 போட்டிகள் என கத்தாரில் 29 நாட்களுக்கான திருவிழா கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.


32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதின. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்தித்து அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளன.  அதாவது லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறியுள்ளன. 






இன்று நடைபெறவுள்ள ரவுண்ட் 16 சுற்றின் இறுதி இரண்டு ஆட்டங்களில் மொரோக்கோ ஸ்பெயின் அணிகளும் மற்றொரு போட்டியில் போர்ச்சுகல் சுவிட்சர்லாந்து அணிகள் மோதவுள்ளன.  இதில் முதலில் இரவு 8.30 மணிக்குத் தொடங்கும் போட்டியில் பலமான ஸ்பெயின் அணி மொராக்கோ அணி பலப்பரீட்சை நடத்தவுள்ளன. நள்ளிரவு 12.30 மணிக்கு தொடங்கவுள்ள மற்றொரு போட்டியில் ரொனால்டோவின் போர்ச்சுகல் அணி சுவிட்சர்லாந்து அணியுடன்  நேருக்கு நேர் மோதவுள்ளன. நான்கு அணிகளுக்கும் இது வாழ்வா சாவா போட்டி என்பதால் போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என எதிர்பார்க்கலாம். 


ஏற்கனவே இங்கிலாந்து, அர்ஜெண்டினா, பிரேசில், பிரான்ஸ், குரோஷியா, நெதர்லாந்து அணிகள் அடுத்த சுற்றான கால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளன. கால் இறுதி போட்டிகள் டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தொடங்கி மூன்று தினங்களுக்கு நடக்கவுள்ளது. அதே தினத்தில்  இன்றைய நாக் - அவுட் சுற்றில் வெற்றி பெரும் அணிகளுக்கு இடையில் 10ஆம் தேதியும், அதே தினத்தில் அர்ஜெண்டினா அணி நெதர்லாந்து அணியுடன் மோதவுள்ளது. மேலும், 11ஆம் தேதி நடப்புச் சாம்பியன் பிரான்ஸ் உடன் இங்கிலாந்து அணி மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.