உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் குரூப் சி பிரிவில் இடம்பெற்றுள்ள முன்னாள் சாம்பியன் அர்ஜென்டினா முதல் வெற்றியை எதிர்நோக்கி உள்ளது.


கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் அர்ஜென்டினா அணி, சவுதி அரேபியாவிடம் 1-2 என்ற கோல் கணக்கில் தோல்வியைத் தழுவியது. நட்சத்திர வீரரான மெஸ்ஸி ஒரே ஒரு கோலை அந்த ஆட்டத்தில் அடித்தார். சில கோல்கள் ஆஃப் சைடு கோல் ஆனது.


புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதேநேரம், அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் சவுதி அரேபியா அணி 3 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், அர்ஜென்டினா அணி இன்று இரவு 12.30 மணிக்கு மெக்சிகோ அணியை எதிர்கொள்கிறது. தரவரிசையில் 13ஆவது இடத்தில் உள்ள மெக்சிகோ அணி தனது தொடக்க ஆட்டத்தில் போலந்து அணியுடன் கோல் எதுவும் இன்றி டிரா செய்தது.


உலகக் கோப்பையில் 18 ஆட்டங்களில் விளையாடிய போர்ச்சுகல் கேப்டன் ரொனால்டோ, இதுவரை உலகக்  கோப்பையில் 8 கோல்களை அடித்துள்ளார். மெஸ்ஸி, உலகக் கோப்பையில் 20 ஆட்டங்களில் விளையாடி 7 கோல்களைப் பதிவு செய்துள்ளார். வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு எதிராக மெஸ்ஸி 3 கோல்களை அடித்துள்ளார்.


2007 கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியில் மெக்சிகோவுக்கு எதிரான ஆட்டத்தில் ஒரு கோலையும், அதே அணிக்கு எதிராக 2008ஆம் ஆண்டில் மற்றொரு முறையும், 2015 இல் இன்னொரு முறையும் கோல் அடித்துள்ளார்.
மெக்சிகோவுக்கு எதிரான கடந்த 10 முறையும் அர்ஜென்டினா அணியே வென்றுள்ளது. 


FIFA World Cup 2022: அர்ஜெண்டினா அணிக்கு ஆப்பு வைத்த சவுதி அரேபியா.. வெற்றிக்கு பிறகு ரோல்ஸ் ராய்ஸ் ஆஃபர் அளித்த அரசாங்கம்!


ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டியைப் பொருத்தவரை,  அர்ஜென்டினாவுக்கு எதிராக 3 முறையும் மெக்சிகோ தோல்வியைத் தழுவியுள்ளது. உலகம் முழுவதும் மெஸ்ஸிக்கு அதிக ரசிகர்கள் இருப்பதால் இன்று இரவு மெக்சிகோவுக்கு எதிரான போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முதல் வெற்றியை அர்ஜென்டினா பெறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.






உலகின் மிகப் பெரிய விளையாட்டு திருவிழாக்களில் ஒன்றான உலகக் கோப்பை கால்பந்து போட்டி 1930-ஆம் ஆண்டு முதல் 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போர் காரணமாக 1942 மற்றும் 1946 ஆகிய ஆண்டுகளில் மட்டும் உலகக் கோப்பை கால்பந்து போட்டி நடத்தப்படவில்லை.


கடைசியாக 2018-ஆம் ஆண்டு ரஷ்யாவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் பிரான்ஸ் சாம்பியன் பட்டம் வென்றது.
இந்தப் போட்டி டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரபு நாட்டில் நடக்கும் முதல் உலகக் கோப்பை போட்டியான இதில் 32 நாடுகளைச் சேர்ந்த கால்பந்து அணிகள் பங்கேற்றுள்ளன.


8 பிரிவுகள்
32 அணிகள் 8 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு லீக் ஆட்டங்களில் மோதுகின்றன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை லீக் ஆட்டத்தில் சந்திக்கும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் 2-ஆவது சுற்றுக்கு (ரவுண்ட்-16) முன்னேறும். 


மொத்தம் எத்தனை ஆட்டங்கள்
48 லீக் ஆட்டங்கள் உள்பட மொத்தம் 64 ஆட்டங்கள் இந்த உலகக் கோப்பைப் போட்டியில் நடைபெறுகின்றன.