உலக கோப்பை கால்பந்தாட்ட தொடர் கடந்த மாதம் 20-ந்தேதி கத்தாரில் தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. 8 பிரிவுகளில் 32 நாடுகள் லீக் போட்டியில் பங்கேற்றன. லீக் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் நாக்-அவுட் ரவுண்டான அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில் லீக் போட்டியின் கடைசி நாளில் இரண்டு போட்டிகள் நடைபெற்றன.


முதல் பாதியில் ஆட்டம் சமநிலை:


எடுகேஷன் சிட்டி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் எச் பிரிவை சேர்ந்த, போர்ச்சுகல் அணியும் தென் கொரியா அணியும் தங்களது கடைசி லீக் போட்டியில் மோதின. ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி ஏற்கனவே அடுத்த சுற்றுக்கு முன்னேறிய நிலையில், தென் கொரியா அணிக்கு இந்த போட்டி, வாழ்வா சாவா என இருந்தது. இதையடுத்து போட்டி தொடங்கிய ஐந்தாவது நிமிடத்திலேயெ போர்ச்சுக்கல் வீரர் ரிகார்டோ ஹோர்டா கோல் அடித்து தென் கொரியாவிற்கு அதிர்ச்சி அளித்தார். இதையடுத்து போட்டி விறுவிறுப்பாக  27வது நிமிடத்தில் தென் கொரிய வீரர் கிம் யங் வோன் பதில் கோல் அடித்தார்.  இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் 1-1 என்ற கோல் கணக்கில் இரு அணிகளும் சம நிலையில் இருந்தன.






அடுத்த சுற்றுக்கு முன்னேறிய தென்கொரியா:


2வது பாதி ஆட்டம் தொடங்கியதும் இரு அணிகளும் மாறி மாறி மேற்கொண்ட கோல் அடிக்கும் முயற்சிகளும் தோல்வியிலேயே முடிவடைந்தன. இதனால் ஆட்ட நேர முடிவில்  எந்த அணியும் புதியதாக கோல் அடிக்காத நிலையில்.  கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. இதில் 91வது நிமிடத்தில் தென் கொரியாவின் வாங் ஹி ஷான் கோல் அடித்தார். இதனல், ஆட்ட நேர முடிவில் 2-1 என்ற கோல் கணக்கில் போர்ச்சுக்கல் அணியை வீழ்த்திய தென் கொரியா வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. கடைசி லீக் போட்டியில் ரொனால்டோ கோல் அடிக்காததும், அவரது தலைமையிலான அணி தோல்வியை சந்தித்ததும் போர்ச்சுகல் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.