உலகிலேயே அதிக ரசிகர்களை கொண்ட விளையாட்டாக இருப்பது கால்பந்து. இந்தியாவில் கிரிக்கெட்டின் ஆதிக்கம் இருந்தாலும் கால்பந்துக்கு என்று ஒரு ரசிகர் கூட்டம் இருந்து கொண்டே இருக்கிறது. தற்போது இந்தியாவில் கால்பந்தை மக்கள் மத்தியில் அதிகளவில் கொண்டு சேர்ப்பதற்காக ஐ.எஸ்.எல். லீக் நடத்தப்பட்டு வருகிறது.


100வது இடம்:


இந்த நிலையில், ஃபிபா எனப்படும் சர்வதேச கால்பந்து சம்மேளனம் புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டுள்ளது. புதிய தரவரிசை பட்டியல்படி இந்திய அணி 100வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய அணி தரவரிசை பட்டியலில் 100வது இடத்திற்குள் சென்றுள்ளது. இந்திய அணி மொத்தம் 1204.90 புள்ளிகளை பெற்றுள்ளது.


இந்திய அணியின் நான்காவது சிறந்த இடம் இதுவாகும். இந்திய அணியின் அதிகபட்ச சிறந்த இடம் என்பது 1996ம் ஆண்டு பிடித்த 94வது இடமே ஆகும். 1993ம் ஆண்டு இந்திய அணி 99வது இடத்தை பிடித்திருந்தது. 2017-2018ம் ஆண்டு  96வது இடத்தை பிடித்துள்ளது. 100வது இடத்தை பிடித்துள்ள இந்தியா லெபனான் மற்றும் நியூசிலாந்து அணிகளை பின்னுக்கு தள்ளியுள்ளது. 5 ஆண்டுகளுக்கு பிறகு 100வது இடத்தை பிடித்துள்ள இந்திய அணிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






அர்ஜெண்டினா முதலிடம்:


ஒட்டுமொத்த தரவரிசையை பொறுத்தவரையில் உலகக்கோப்பையை கைப்பற்றிய அர்ஜெண்டினா அணி முதலிடத்தில் உள்ளது. உலகக்கோப்பையை தவறவிட்ட பிரான்ஸ் அணி தரவரிசையில் 2வது இடத்தில் உள்ளது. பிரேசில் அணி 3வது இடத்திலும், இங்கிலாந்து அணி 4வது இடத்திலும் மற்றும் பெல்ஜியம் அணி 5வது இடத்திலும் உள்ளனர். 6வது இடத்தில் குரோஷியா, 7வது இடத்தில் நெதர்லாந்து, 8வது இடத்தில் முன்னாள் சாம்பியன் இத்தாலி, 9வது இடத்தில் போர்ச்சுக்கல் மற்றும் 10வது இடத்தில் ஸ்பெயின் அணிகள் விளையாடுகின்றன.


தெற்காசிய கால்பந்து போட்டியில் வரும் 1-ந் தேதி இந்தியா – லெபனான் அணிகள் மோத உள்ளன. லெபனான் அணி தரவரிசையில் 102வது இடத்தில் உள்ளது. உலகிலேயே மிகப்பெரிய கால்பந்து நட்சத்திரமாக ஜொலிக்கும் மெஸ்ஸி, ரொனால்டோவிற்கு பிறகு பல்வேறு சாதனைகளை தன்வசம் வைத்திருப்பவராக திகழ்பவர் இந்திய கால்பந்து கேப்டன் சுனில் சேத்ரி ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Womens Ashes 2023: அனைத்திலும் முதலிடம்.. ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து எதிராக அசத்தல்!


மேலும் படிக்க: கொண்டாட்டங்கள் ஆக்ரோஷமா இருக்கு… உடற்தகுதி இல்லை… சர்ஃபராஸ் புறக்கணிப்புக்கு காரணமாக பிசிசிஐ அதிகாரி