ரஞ்சி டிராபியின் கடைசி மூன்று சீசன்களில் நல்ல ஃபார்மில் இருந்த போதிலும், சர்ஃபராஸ் கானுக்கு இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்காத நிலையில், பல தரப்பில் இருந்து தேர்வுக்குழு மீது விமர்சனங்கள் எழுந்தன. முதல் தர கிரிக்கெட்டில் ஜாம்பவான் டான் பிராட்மேனுக்கு பிறகு (குறைந்தபட்சம் 2000 ரன்கள் எடுத்த வீரர்களில்) தொடர்ந்து அதிக ஸ்ட்ரைக் ரேட் வைத்துள்ள வீரராக திகழும் அவரை டெஸ்ட் அணியில் சேர்க்காதது பலருக்கும் ஏமாற்றம் அளித்தது.
தொடர்ந்து புறக்கணிப்பு
சமீபத்தில் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான 16 பேர் கொண்ட டெஸ்ட் அணியை அறிவித்த போது, 2023-ஆம் ஆண்டிலேயே மூன்றாவது முறையாக, அவர் இந்திய தேர்வுக்குழுவால் புறக்கணிக்கப்பட்டார். தேர்வாளர்களின் முடிவை சுனில் கவாஸ்கர் போன்ற ஜாம்பவான்கள் கடுமையாக விமர்சித்த நிலையில், சர்ஃபராஸை தொடர்ச்சியாக ஒதுக்குவதற்கு பின்னால் உள்ள காரணங்களை தேர்வுக்குழு விளக்க வேண்டும் என்று எதிர்ப்புகள் எழ தற்போது அதற்கு பிசிசிஐ அதிகாரி ஒருவர் பதில் கூறியுள்ளார்.
சர்பராஸ் ஃபார்ம்
சர்பராஸ் தனது கடைசி மூன்று ரஞ்சி டிராபி சீசன்களில் 2566 ரன்களை குவித்தார். 2019/20 சீசனில் 928 ரன்களும், 2022-23ல் 982 ரன்களும், 2022-23 சீசனில் 656 ரன்களும் எடுத்தார். இந்த மூன்று ரஞ்சி சீசன்களின் மூலம் முதல் தர சராசரியை 79.65 ஆகக் உயர்த்தினார். இந்த பட்டியலில் இந்திய அணி வீரர்களிலேயே இவர்தான் முதலிடம். உலக அளவில் பிராட்மேனுக்கு (குறைந்தபட்ச 50 இன்னிங்ஸ்) பின்னால் இரண்டாவது இடத்தில் உள்ளார். ஆனால், ருதுராஜ் கெய்க்வாட் போன்ற சராசரி 42 வைத்திருக்கும் ஒரு பேட்டர் சர்ஃபராஸ் காணை தாண்டி அணியில் இடம்பிடித்ததால் பலர் கோபம் அடைந்தனர். பெயர் கூற விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர், இது குறித்து PTI இடம் பேசினார்.
கிரிக்கெட் ஆட்டம் மட்டும் காரணம் அல்ல
அவர் சர்ஃபராஸ் தேர்வு செய்யப்படாததற்கு களத்திற்கு வெளியே உள்ள காரணங்களும் உள்ளது என்று விளக்கினார். அவர் சுட்டிக்காட்டிய முக்கிய காரணிகளில் ஒன்று அவரது உடற்தகுதி. அவர் பேசுகையில், "கோபமான எதிர்வினைகள் வருவது ஏன் என்று தெரியும், ஆனால் சர்ஃபராஸ் மீண்டும் மீண்டும் புறக்கணிக்கப்படுவதற்குக் காரணம் கிரிக்கெட் மட்டுமல்ல. அவர் கருத்தில் கொள்ளப்படாததற்குப் பல காரணங்கள் உள்ளன என்பதை என்னால் ஓரளவு உறுதியாகச் சொல்ல முடியும்" என்று அந்த அதிகாரி கூறினார். "தொடர்ந்து 3 சீசன்களில் 900 ரன்களுக்கு மேல் அடித்த வீரரைக் கருத்தில் கொள்ளாத தேர்வாளர்கள் என்ன முட்டாள்களா? சர்வதேச தரத்தில் இல்லாத அவரது உடற்தகுதியும் ஒரு காரணம்." என்று கூறினார்.
ஆக்ரோஷமான கொண்டாட்டங்கள்
"ஆடுகளத்திற்கு வெளியேயும் வெளியேயும் அவரது நடத்தை சரியாக இல்லை. சில விஷயங்கள் சொல்லப்பட்டது, அவருடைய சில சைகைகள் மற்றும் சில சம்பவங்கள் கவனிக்கப்பட்டன. இன்னும் கொஞ்சம் ஒழுக்கமான அணுகுமுறை அவருக்கு இருந்தால் நல்ல முன்னேற்றத்தை தரும். நம்பிக்கையுடன், சர்ஃபராஸ் அவரது தந்தை மற்றும் பயிற்சியாளர் நௌஷாத் கான் உடன் சேர்ந்து அந்த விஷயங்களில் பணியாற்ற வேண்டும்," என்று மூத்த அதிகாரி மேலும் கூறினார். தேர்வாளர்கள் இந்த முடிவை எடுப்பதில் சர்ஃபராஸ் சதமடித்த பிறகு காட்டும் கொண்டாட்டம் ஒரு காரணமாக அந்த அதிகாரி சுட்டிக்காட்டினார், அதில் ஒன்று ரஞ்சி ஆட்டத்தில் டெல்லிக்கு எதிராக சதம் அடித்த பிறகு அவரது கொண்டாட்டமாக கூறப்படுகிறது. கிரிக்கெட் காரணங்களைப் பொறுத்த வரையில், ஐபிஎல் சீசனில் ஷார்ட் பந்திற்கு எதிரான அவரது பலவீனம் அம்பலமானது என்று பெரும்பாலானவர்கள் கருதுகின்றனர்.