ஒலிம்பிக், காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் போலவே ஆசிய விளையாட்டு போட்டிகளும் மிகவும் பிரபலமான ஒன்று. இந்த விளையாட்டு தொடரில் கிரிக்கெட் தொடர் அவ்வப்போது இடம்பெற்றும், பின்னர் இடம்பெறாமலும் இருந்தது.


ஆசிய விளையாட்டு போட்டிகள்:


இந்த நிலையில், நடப்பாண்டிற்கான ஆசிய விளையாட்டு போட்டிகள் சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடைபெற உள்ளது. செப்டம்பர் 23 முதல் அக்டோபர் 8-ந் தேதி வரை இந்த தொடர் நடைபெற உள்ளது. நடப்பாண்டு சீனாவில் நடைபெற உள்ள ஆசிய விளையாட்டு போட்டித் தொடரில் கிரிக்கெட் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கு இந்தியாவின் ஆண்கள் மற்றும் பெண்கள் கிரிக்கெட் அணியை அனுப்ப பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது.


இந்த தொடருக்கு ஆண்கள் அணியில் இந்திய பி அணியையும், பெண்கள் அணியை வழக்கமான அனுபவமிகுந்த வீராங்கனைகளை அனுப்பவும் பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளது. இந்த நிலையில் ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணிக்கு கேப்டனாக ஷிகர்தவானை நியமிக்க பி.சி.சி.ஐ. முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


கேப்டனாகும் ஷிகர்தவான்:


இந்திய அணியின் அனுபவமிகுந்த வீரரான ஷிகர்தவான் ஏற்கனவே இளம் வீரர்களை வைத்துக்கொண்டு இந்திய அணியை வழிநடத்திய அனுபவமிக்கவர். அவரது தலைமையில் இலங்கை, நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு எதிராக இந்திய அணி ஆடியுள்ளது. சமீபகாலமாக இளம் வீரர்களை கொண்ட இந்திய அணியை வழிநடத்த மட்டுமே ஷிகர்தவான் இந்திய அணிக்கு அழைக்கப்படுகிறார்.


இந்திய அணியின் தொடக்க வீரரான ஷிகர்தவானுக்கு, சுப்மன் கில் வருகைக்கு பிறகு அணியில் இடம் கிடைக்கவில்லை என்றே கூற வேண்டும். இந்திய அணிக்காக ஷிகர்தவான் கடைசியாக வங்காளதேசத்திற்கு எதிராக கடந்தாண்டு டிசம்பர் மாதம் களமிறங்கியிருந்தார். இந்திய அணிக்காக அவர் கடைசியாக ஆடிய போட்டியும் இதுவே ஆகும்.


இளம் வீரர்களுக்கு வாய்ப்பு:


37 வயதான ஷிகர்தவான் 2010ம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமானார். அவர் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 7 சதங்கள், 5 அரைசதங்களுடன் 2315 ரன்களும், 167 ஒருநாள் போட்டிகளில் ஆடி 17 சதங்கள், 39 அரைசதங்களுடன் 6 ஆயிரத்து 793 ரன்களையும், டி20 போட்டிகளில் 68 ஆட்டங்களில் ஆடி 11 அரைசதங்களுடன் 1759 ரன்களை எடுத்துள்ளார். இதுதவிர ஐ.பி.எல். போட்டிகளில் 217 ஆட்டங்களில் ஆடி 2 சதம் மற்றும் 50 அரைசதங்கள் விளாசி 6 ஆயிரத்து 616 ரன்களை எடுத்துள்ளார். 


ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடருக்கு களமிறங்கும் இந்திய அணிக்கு ஷிகர்தவான் தலைமை வகித்தாலும், பல இளம் வீரர்களுக்கு வாய்ப்புகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் ஜூலை 7-ந் தேதி ஆசிய விளையாட்டு போட்டிகளுக்கான இந்திய அணி அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகக்கோப்பை தொடருக்கு அட்டவணை அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் ரோகித் தலைமையிலான இந்திய அணி தயாராகுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அந்த தொடரில் ஷிகர்தவானுக்கு வாய்ப்பு வழங்கப்படாது என்றே தகவல்கள் வெளியாகியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க: Womens Ashes 2023: அனைத்திலும் முதலிடம்.. ஐசிசி தரவரிசையில் ஆதிக்கம் செலுத்தும் ஆஸ்திரேலியா.. இங்கிலாந்து எதிராக அசத்தல்!


மேலும் படிக்க: கொண்டாட்டங்கள் ஆக்ரோஷமா இருக்கு… உடற்தகுதி இல்லை… சர்ஃபராஸ் புறக்கணிப்புக்கு காரணமாக பிசிசிஐ அதிகாரி