கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து திருவிழா நேற்று இரவுடன் முடிவடைந்தது. கால்பந்து ஜாம்பவான் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டியான அணி பிரான்ஸ் அணியை வீழ்த்தி மூன்றாவது முறையாக கோப்பையை வென்று அசத்தியது.
கத்தாரில் நடைபெற்ற இந்த தொடரானது ஆரம்பம் முதலே பல்வேறு சர்ச்சைகளை கடந்து வந்தாலும், அர்ஜெண்டினா அணி கோப்பையை வென்றதும் அனைத்தும் மறந்து, மறக்க முடியாத தருணங்களாக உருவானது. இந்தநிலையில், இந்த ஃபிபா உலகக் கோப்பை 2022 தொடரில் பல்வேறு சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது. அவற்றில் முக்கிய 5 சாதனைகளை இங்கே பார்ப்போம் வாங்க..!
ஐந்து உலகக் கோப்பைகளிலும் கோல் அடித்த முதல் வீரர்:
உலக புகழ்பெற்ற கிறிஸ்டியானோ ரொனால்டோவிற்கு இந்த வருடம் பெரிய அடியாக அமைந்தது. ரொனால்டோ விளையாடும் போர்ச்சுகல் அணி எதிர்பாராத அளவிற்கு நாக் அவுட் சுற்றுகளில் சிறப்பாக விளையாடவில்லை. அதேபோல், ரொனால்டோ முக்கிய போட்டிகளில் களமிறக்கபடாமல் பெஞ்சில் அமரவைக்கப்பட்டு இருந்தார்.
இருப்பினும், கடந்த நவம்பர் 24ம் தேதி கானா அணிக்கு எதிராக ரொனால்டோ கோல் அடித்தார். இதன்மூலம், 5 வெவ்வேறு உலகக் கோப்பைகளில் கோல் அடித்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். கானா அணிக்கு எதிரான இரண்டாம் பாதியில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்றி இந்த அரிய சாதனையை படைத்தார்.
அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க நாடு:
உலகக் கோப்பையில் அரையிறுதி போட்டிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையை மொராக்கோ அணி படைத்தது. பிரான்ஸ் அணிக்கு எதிரான அரையிறுதி தோல்விக்கு பிறகு, மூன்றாம் இடத்திற்காக மொராக்கோ அணி குரோஷியா அணியிடம் மோதி தோல்வியடைந்தது. இதனால், உலகக் கோப்பையில் மொராக்கோ அணியால் மூன்றாம் இடத்தை பிடிக்க முடியவில்லை.
இருப்பினும், அரையிறுதிக்கு முன்னேறிய முதல் ஆப்பிரிக்க அணி என்ற பெருமையுடன் கத்தார் 2022 இன் சிறப்பம்சங்களில் ஒன்றாக பார்க்கப்படுகிறது.
அதிக உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடிய வீரர்:
நேற்றைய இறுதிப் போட்டியில் மெஸ்ஸி களமிறங்கியதன் மூலம், உலகக்கோப்பை தொடர்களில் அதிக போட்டிகளில் பங்கேற்ற வீரர் என்ற பெருமையை கொண்ட ஜெர்மனியின் லோதர் மத்தாஸை (25 போட்டிகள்) பின்னுக்கு தள்ளி மெஸ்ஸி (26 போட்டிகள்) முதலிடம் பிடித்துள்ளார்.
பெண் நடுவர் கொண்ட முதல் ஆண்கள் உலகக் கோப்பை:
ஆண்கள் உலகக் கோப்பைப் போட்டியில் நடுவராகப் பணியாற்றிய முதல் பெண்மணி என்ற பெருமையை ஸ்டெபானி ஃப்ராபார்ட் பெற்றார். டிசம்பர் 1 ம் தேதி ஜெர்மனி- கோஸ்டாரிகா அணிகளுக்கு இடையிலான ஆட்டத்தில் நடுவராக களமிறங்கினார்.
ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள்:
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் மொத்தம் 172 கோல்கள் அடிக்கப்பட்டு ஒரு உலகக் கோப்பை தொடரில் அதிக கோல்கள் அடிக்கப்பட்டது என்ற சாதனை படைக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, 998 பதிப்பு மற்றும் 2014 பதிப்பில் 171 கோல்கள் அடிக்கப்பட்டதே சாதனையாக இருந்தது.