100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் 24.05.2025 அன்று நடைபெறவுள்ள விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டப் போட்டியில் தமிழகம் முழுவதிலிருந்து அனைவரும் கலந்து கொள்ளலாம் என விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் வீ.ப.ஜெயசீலன் தெரிவித்துள்ளார்.

விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம்
விருதுநகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 100 சதவிகிதம் உயர்கல்வியை வலியுறுத்தி கல்லூரிக் கனவு என்ற தலைப்பில் விழிப்புணர்வு நெடுந்தூர ஓட்டம் 24.05.2025 அன்று காலை 06.00 மணியளவில் விருதுநகர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ளது. தற்போது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிந்துள்ள நிலையில், 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவ, மாணவிகள் அனைவரும் உயர்கல்வியில் சேருவதை உறுதிசெய்யும் வகையிலும், உயர்கல்வி தொடர்வதன் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு வலியுறுத்தும் வகையிலும், மாணவர்களுக்கு ஊக்கமளித்து அவர்களின் எதிர்காலத்திற்கான உறுதுணையாகவும், நான் முதல்வன், புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் உள்ளிட்ட திட்டங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும் மாரத்தான் போட்டி ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனியாக நடைபெறவுள்ளது.
 
எவ்வளவு பரிசு தெரியுமா? இதில் ஆண்களுக்கு 12 கி.மீ தூரம் மற்றும் பெண்களுக்கு 10 கி.மீ. தூரம் என்ற வகையிலும் மாரத்தான் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டிகளில் தமிழகம் முழுவதிலிருந்தும் பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவிகள் என  அனைவரும் கலந்து கொள்ளலாம். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு முதல் பரிசு ரூ.20,000- இரண்டாம் பரிசு ரூ.15,000-, மூன்றாம் பரிசு ரூ.10,000- நான்காம் பரிசு ரூ.7000- மற்றும் ஐந்தாம் பரிசு ரூ.5,000- என வழங்கப்பட உள்ளது.
 
இந்த போட்டியில் எப்படி கலந்து கொள்வது? இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்புபவர்கள் தங்களது விவரங்களை https://docs.google.com/forms/d/e/1FAIpQLSdasYWstnFs_F92vdaaBVbYhy7fV0wU8NjWc3G0p1T2KLwIow/viewform?usp=header   என்ற இணையதளத்தில் பதிவு செய்து கொள்ளலாம். எனவே, இந்த மாரத்தான் போட்டியில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பொதுமக்கள், இளைஞர்கள், மாணவ, மாணவியர்கள் என அனைவரும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் இப்போட்டிகள் குறித்த விவரங்களுக்கு 86082-04154, 94864-54521, 99769-03873 ஆகிய  தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்   முனைவர் வீ.ப.ஜெயசீலன்  தெரிவித்துள்ளார்.