குரூப் எச் பிரிவில் தரவரிசையில் 9ஆவது இடத்தில் உள்ள போர்ச்சுகல் அணிக்கும், தரவரிசையில் 61-ஆவது இடத்தில் உள்ள கானா அணிக்கும் இடையே கால்பந்து போட்டி நடைபெற்றது. இதில் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
22ஆவது உலகக் கோப்பைப் போட்டித் தொடர் கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் 18 ஆம் தேதி வரை போட்டிகள் நடைபெறும். இன்று மொத்தம் 4 ஆட்டங்கள் நடைபெறுகின்றன.
பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கி நடைபெற்ற முதல் ஆட்டத்தில் சுவிட்சர்லாந்து அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேமரூனை வீழ்த்தியது. இதையடுத்து, 6.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் தென்கொரியாவும், உருகுவேயும் மோதின. இந்த ஆட்டம் ட்ரா ஆனது.
இந்நிலையில், போர்ச்சுகல்-கானா இடையிலான ஆட்டம் 9.30 மணிக்கு தொடங்கியது. முதல் பாதி ஆட்டத்தில் கோல்கள் எதுவும் விழவில்லை. பந்து போர்ச்சுகல் வசமே அதிகம் இருந்தது. இரண்டாவது பாதி ஆட்டம் தொடங்கியதும் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி 65ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார் போர்ச்சுகலின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ.
இதன்மூலம், வெவ்வோறு உலகக் கோப்பை எடிஷனில் 5 கோல்களை அடித்த ஒரே வீரர் என்ற சாதனையை படைத்தார் ரொனால்டோ. இந்தப் பட்டியலில் அர்ஜென்டினா வீரர் மெஸ்ஸி 4 கோல்களுடன் அடுத்த இடத்தில் உள்ளார்.
இதையடுத்து 73-ஆவது நிமிடத்தில் ஆன்ட்ரே அஜியூ 73-ஆவது நிமிடத்தில் கோல் அடித்தார். பின்னர், போர்ச்சுகல் அணி சார்பில் ஜாவோ ஃபெலிக்ஸ் 78ஆவது நிமிடத்திலும், ரஃபேல் லியாவ் 80ஆவது நிமிடத்திலும் அடுத்தடுத்து கோல் அடித்து அசத்தினர். கானா அணியின் புகாரி 89-ஆவது நிமிடத்தில் தலையால் முட்டி கோல் அடித்து அசத்தினார்.
90 நிமிடங்கள் முடிவில் போர்ச்சுகல் 3-2 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. கூடுதல் நேரத்திலும் கானா அணி கோல் எதுவும் அடிக்காததால் போர்ச்சுகல் அணி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
ஸ்டேடியம் 974 (Stadium 974)
இந்த ஸ்டேடியத்தில் மொத்தம் 40 ஆயிரம் பேர் வரை அமர முடியும். கப்பலில் பயன்படுத்தப்படும் இரும்பு சரக்கு கண்டெய்னர்களால் இந்த ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. மொத்தம் 974 கண்டெய்னர்களால் வடிவமைக்கப்பட்டுள்ளது. உலக கோப்பை வரலாற்றில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஸ்டேடியம் இதுதான். இந்தப் போட்டி முடிந்ததும் இந்த ஸ்டேடியம் அகற்றப்பட்டு விடும். இங்கு மொத்தம் 7 ஆட்டங்கள் நடக்கிறது.