சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் ஆகஸ்ட் மாதம் 3ஆம் தேதி தொடங்கிய 7-வது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டி, தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 6 அணிகள் பங்கேற்ற இந்த ஆசிய சாம்பியன்ஸ் போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வந்தது இந்தியா. தற்போது லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா 5 போட்டிகளில் விளையாடி 4 வெற்றி 1 சமன் என்ற கணக்கில் முதல் இடத்திலும், மலேசியா 5 போட்டியில் 4 வெற்றி 1 தோல்வியுடன் இரண்டாம் இடத்திலும், தென் கொரியா 5 போட்டிகளில் விளையாடி 1 வெற்றி 2 சமன் 2 தோல்வி என்று மூன்றாவது இடத்திலும், ஜப்பான் 5 போட்டியில் விளையாடி 1 வெற்றி 2 சமன் 2 தோல்வி என்று நான்கு அணிகளும் முதல் நான்கு இடங்களை பெற்று அரை இறுதிக்கு முன்னேறியுள்ளது. பாகிஸ்தான் ஒரு வெற்றியுடன் ஐந்தாவது இடத்தையும், சீனா ஒரு வெற்றியும் இல்லாமல் கடைசி இடத்தையும் பெற்று தொடரில் இருந்து வெளியேறியது.

Asian Champions Trophy 2023 hockey group stage points table and standings
தரவரிசை அணி போட்டிகள் வெற்றி சமன் தோல்வி புள்ளி
1* இந்தியா 5 4 1 0 13
2* மலேசியா 5 4 0 1 12
3* தென் கொரியா 5 1 2 2 5
4* ஜப்பான் 5 1 2 2 5
5 பாகிஸ்தான் 5 1 2 2 5
6 சீனா 5 0 1 4 1

பயிற்சியாளராக நியமனம்

ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டியின் ஓய்வு நாளான நேற்று, இந்தியா ஹாக்கி அமைப்பின் 100 வது செயற் குழு கூட்டம் நடைபெற்றது. இந்த செயற் குழு கூட்டத்தை தலைமை தாங்கி நடத்தினார் முன்னாள் இந்திய ஹாக்கி அணியின் கேப்டன் திலிப் திர்கே. செயற் குழு கூட்டம் முடிந்ததற்கு பின்னர் திலிப் திர்கே நிருபர்களிடம் பேசுகையில், “பயிற்சி கட்டமைப்பில் குறிப்பாக இளையோருக்கான அடிமட்ட அளவில் சில மாற்றங்களை கொண்டுவர  ஹாக்கி இந்திய  அணி முடிவுசெய்துள்ளது. கீழ்மட்ட அளவிலான ஹாக்கியை வலிமைமிக்கதாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.


சமீபத்திய ஆண்டுகளில் 21 வயதுக்கு உட்பட்ட பிரிவினருக்கு முக்கியத்துவம் கொடுத்தாலும், தற்போது சப்-ஜூனியர் (17 வயதுக்கு உட்பட்டோருக்கு) பிரிவினருக்கு முக்கியதுவம் அளிக்க உள்ளோம். இதன் ஒரு பகுதியாக தேசிய சப்-ஜூனியர் ஹாக்கி அணியை முதல் முறையாக ஹாக்கி இந்தியா உருவாக்குகிறது. இளைஞர்கள், சர்வதேச அளவிலான போட்டிகளில் சிறந்து விளங்க வேண்டும் என்ற நோக்குடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.17 அணிக்கு உட்பட்ட இந்திய ஆண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் சர்தார் சிங்கும், பெண்கள் அணிக்கு முன்னாள் கேப்டன் ராணி ராம்பாலும் பயிற்சியாளராக இருப்பார்கள்.தேசிய சப்-ஜூனியர் அணிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் நடத்தப்படுவதுடன், அவர்களுக்கு சர்வதேச தொடர்களில் கலந்துகொண்டி விளையாட ஏற்பாடு செய்ய படும். தேசிய சப்-ஜூனியர் அணிகளுக்கான பயிற்சி முகாம் ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் வருகிற 21 ஆம் தேதி தொடங்கிறது” என்று கூறியுள்ளார்.

8 நாட்கள் தொடர்ச்சியாக நடந்த ஆசிய சாம்பியன்ஸ் ஹாக்கி போட்டி தொடரில் நேற்று எந்த போட்டியும் நடக்கவில்லை. இன்று இரண்டு அரை இறுதி போட்டி நடக்க உள்ளது. இன்று மாலை 6 மணிக்கு மலேசியா தென் கொரியா நாட்டை எதிர்கொள்கிறது. இரவு 8:30 மணி அளவில் இந்திய- ஜப்பான் அணிகள் மல்லுக்கட்ட உள்ளது.