இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் நண்பர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்து வெளியிட்ட வீடியோவில் தோனி இல்லாததது குறித்து ரசிகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.


அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமைகளில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி, அந்தந்த நாடுகளில் இன்று நண்பர்கள் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. நம் நாட்டில் நள்ளிரவு முதலே தங்களின் தோழர்களுக்கும், தோழிகளுக்கும் சமூகவலைதளங்கள் மூலமாகவும், தொலைபேசி வாயிலாகவும் வாழ்த்துகளை தெரிவித்தனர். தொலைக்காட்சியில் நண்பர்களின் சிறப்பை தெரியப்படுத்தும் வகையில், இன்று நண்பர்கள் கதையம்சம் கொண்ட படங்கள், பாடல்கள் போன்றவை ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. கொரோனாவால் பலரும் பல இன்னல்களை சந்தித்து வரும் நிலையில், இன்றைய நாளில் அதையெல்லாம் மறந்து, தங்களின் நண்பர்களோடு நேரத்தை செலவிட்டு மகிழ்ச்சியோடு இருந்து வருகின்றனர். சினிமா பிரபலங்கள், விளையாட்டு வீரர்களும் நண்பர்கள் தின வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.


இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங் தனது டுவிட்டர் பக்கத்தில் நண்பர்கள் தின வாழ்த்துகள் தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஹே தோஸ்து ஹே... என்ற பாடலுடன் ஓடும் அந்த வீடியோவில் யுவராஜ் சிங்குடன் விளையாடிய வீரர்கள் பலர் இடம்பெற்றிருந்தனர். ஆனால், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி மற்றும் விராட் கோலி ஆகியோர் அந்த வீடியோவில் இடம்பெறவில்லை. யுவராஜ் வெளியிட்ட அந்த சிறப்பு வீடியோவில், தனது தோழர்களை, ‘குடும்பமாக மாறிய நண்பர்கள்’ என்று பதிவிட்டுள்ளார். அத்துடன், சக வீரர்களுடன் கழித்த அனைத்து வேடிக்கையான தருணங்களும் அந்த வீடியோவில் இருந்தன. ஆனால், தோனி, கோலி இல்லாதததால் பலரின் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளார் யுவராஜ் சிங்.


 






இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான்கள் மெதுவாக ஓய்வு பெற்ற பிறகு, யுவராஜ் சிங் இந்திய அணியின் அடுத்த கேப்டன்களான எம்எஸ் தோனி மற்றும் விராட் கோலியுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார். அவர் புற்றுநோயிலிருந்து குணமடைந்து, 2014 இல் டி20 உலகக் கோப்பையை விளையாடிய பிறகு ஒரு அற்புதமான மறுபிரவேசம் செய்தார். அவர் தோனியுடன் விளையாடி மகிழ்ந்தார், இருவரும் விளையாடும்போது மைதானத்திலும் வெளியேயும் நல்ல நண்பர்களாக இருந்தனர்.


இருப்பினும், தனது நட்பு தின வீடியோவில், யுவராஜ் சிங் தோனி மற்றும் கோலி இருவருடனும் எந்த வேடிக்கையான தருணத்தையும் வெளியிடவில்லை. இதனால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர். மேலும், இது சமூக ஊடகங்களில் எதிர்வினைகளைக் கொண்டு வந்துள்ளது. தோனி மற்றும் விராட் கோலி இருவரும் அவரது தொழில் வாழ்க்கையின் கடினமான காலங்களில் அவருக்கு ஆதரவளித்ததாக சில ரசிகர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள், சிலர் தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படையாக வெளிப்படுத்தினர்.


சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கோபத்திற்குப் பிறகு யுவராஜ் சிங் இதற்கு ஏதாவது விளக்கம் அளிக்கிறாரா என்பதைப் பார்க்க வேண்டும்.


Happy Friendship Day: 'என் ஃப்ரெண்ட போல யாரு மச்சான்'- நண்பர்களுக்கு ஒரு சமர்ப்பணம் !