இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை நண்பர்கள் தினமாக கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் இன்று இந்தியாவில் நண்பர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. உலகின் பல்வேறு நாடுகளில் நண்பர்கள் தினம் வெவ்வேறு நாட்களில் கொண்டாடப்படுகிறது. 2011ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ஐநா பொது சபை ஜூலை 30-ஆம் தேதியை சர்வதேச நண்பர்கள் தினமாக அறிவித்தது. எனினும் இந்தியாவில் ஆகஸ்ட் மாதம் வரும் முதல் ஞாயிற்றுகிழமையே நண்பர்கள் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 


நம்முடைய வாழ்க்கை பயணத்தில் நண்பர்கள் என்பவர்கள் ஒரு முக்கிய சக்கரமாக அமைந்து விடுகிறார்கள். நமது வாழ்வில் வேறு எந்த உறவிற்கும் ஒரு இரத்த சம்பந்தம் உண்டு. ஆனால் நண்பர்களுக்கும் நமக்கும் மட்டும் தான் அப்படி எந்த ஒரு பந்தமும் இல்லை. நம்முடைய வாழ்க்கை துணைக்கும் நமக்கும் கூட எந்தவித இரத்த சொந்தமும் இருக்காது. ஆனால் நாமும் வாழ்க்கை துணையும் சேர்ந்து இரத்த சம்பந்தப்பட்ட உறவான குழந்தை என்ற ஒன்றை உருவாக்குவோம். நட்பில் அப்படி எதுவும் கிடையாது.  




இத்தகைய சிறப்பு வாய்ந்த நட்பிற்கு உலக பொதுமுறையாம் திருக்குறளில் அய்யன் திருவள்ளுவர் ஒரு அதிகாரத்தையே ஒதுக்கியுள்ளார். அதில் இருக்கும் குறள்களும் நட்பின் இலக்கணத்தை பரைசாற்றும் விதகமாக அமைந்திருக்கும்.  குறிப்பாக அந்த அதிகாரித்தின் முதல் குறளில்


 "செயற்கரிய யாவுள நட்பின் அதுபோல்
வினைக்கரிய யாவுள காப்பு"


அதாவது நட்புக் கொள்வது போன்ற அரிய செயல் இல்லை அதுபோல் பாதுகாப்புக்கு ஏற்ற செயலும் வேறு ஒன்றும் இல்லை எனக் கூறுகிறார். மேலும் நமக்கு துன்பம் வரும் வேளையில் நட்பு எவ்வளவு சிறப்பானது என்று திருவள்ளுவர் 


 "உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு."


அதாவது இந்த குறளில் பொருள் என்னவென்றால், ஒருவர் அணிந்திருக்கும் உடை உடலைவிட்டு நழுவும்போது எப்படிக் கைகள் உடனடியாகச் செயல்பட்டு அதனைச் சரிசெய்ய உதவுகின்றனவோ அதைப்போல நண்பனுக்கு வரும் துன்பத்தைப் போக்கத் துடித்து செல்வதே நட்புக்கு இலக்கணம் என்று அய்யன் திருவள்ளுவர் நட்பின் இலக்கணத்தை தெளிவாக கூறியுள்ளார். 




இதைப்போல் நம்முடைய இளைஞர்களின் எழுச்சி நாயகன் என்று போற்றப்படும் ஐயா அப்துல் கலாமும் நட்பு குறித்து ஒரு சிறப்பான வாக்கியத்தை கூறியுள்ளார். அதாவது


"ஒரு நல்ல புத்தகம் 100 நண்பர்களுக்கு சமமாக இருக்கும். ஆனால் ஒரு நல்ல நண்பன் கிடைப்பது ஒரு நூலகத்திற்கு சமமானது"


எனக் கூறியிருப்பார். நட்பிற்கு அவ்வளவு சிறப்பு உண்டு.  முதல் முதலில் நட்பு என்பது நம்முடைய பள்ளி பருவத்தில் தான் தொடங்குகிறது. அப்படி பள்ளி பருவத்தில் தொடங்கும் நட்பு நீண்ட ஆண்டுகள் நீடிக்கும் பட்சத்தில் அதுவே உங்களுடைய சிறப்பான செல்வங்களில் ஒன்று. இத்தகைய சிறப்பு மிக்க உறவை தினமும் கொண்டாடும் நமக்கு தனியாக ஒரு நாள் தேவையில்லை என்றாலும், இன்று நம்முடைய நண்பர்களுக்கு வாழ்த்தையும் அன்பையும் பறிமாறிக் கொள்வோம். அனைவருக்கும் இனிய நண்பர்கள் தின வாழ்த்துகள்.


மேலும் படிக்க:அந்த அரபிக்கடலோரம்.. 8 பெட்ரூம்.. 30 கோடி ரூபாய்: ஹர்திக் - க்ருணால் புது வீடு!