வெற்றிலை என்ற பெயர் சொன்னவுடனே பலருக்கு சினிமா பாடல்களில் ஏதோ ஒன்று நினைவுக்கு வந்துவிடும், இதற்கு காரணம் பல்வேறு காலகட்டத்தில் வெற்றிலை சொல்லைப் பயன்படுத்தி பல பாடல்கள் வந்த வண்ணம் உள்ளன. அந்த அளவிற்கு வெற்றிலையானது தமிழர்கள் வாழ்வில் வெற்றிலைக் கொடி போல பின்னி பிணைந்துள்ளது. ஆன்மீகம் துவங்கி தமிழர்களின் அனைத்து முக்கிய தருணங்களிலும் வெற்றிலை தாம்பூலம் மிக முக்கிய பொருளாக கருதப்படுகிறது.



கம்பராமாயணத்தில் ராவணனால் சிறை எடுக்கப்பட்ட சீதை, அசோக வனத்தில் அனுமனை அருகில் இருந்த வெற்றிலைக்கொடியின் இலையை பறித்து அனுமனின் தலையில் இட்டு வெற்றி பெற வாழ்த்தியதாக கம்பர் கூறுவார். ஆகவே அனுமனுக்கு வெற்றிலை மாலை அணிவித்து பிரார்த்திக்கும் வழக்கம் வந்தது. தமிழ் இலக்கியங்களிலும் வெற்றிலை குறித்த குறிப்புகள் உள்ளன. பண்டிகைகள், கோவில் திருவிழாக்கள் தொடங்கி, வீடுகளில் நடக்கும் நல்லது கெட்டது வரை எல்லாவற்றிலும் வெற்றிலை தாம்பூலம் தான் பிரதானம்.



அதேபோல வெற்றிலை என்பது கௌரவம் நிறைந்த பொருளாகவே கருதப்படுகிறது, திருவிழாக்கள், திருமணங்கள் ஆகிய நல்ல செய்திகளுக்கு வெற்றிலை தாம்பூலம் வைத்து மரியாதையாக அழைக்கும் பாரம்பரியம் தொடர்ந்து தமிழகத்தில் பின்பற்றப்பட்டு வருகிறது. வெற்றிலை தாம்பூலம் வைத்து உரிய மரியாதையுடன் அவர்கள் அழைக்கப்படவில்லை என்றால், கிராமங்களில் இப்போதும் பல பிரச்சனைகள் நடக்கின்றன.



தஞ்சை பெரிய கோவில் பணிகள் நடந்தபோது,  பெருந்தச்சன் என்ற சிற்பி சிலையை செதுக்கிக்கொண்டு இருந்தார். அவருக்கு பக்கத்தில் நின்ற அடப்பக்காரன் ( வெற்றிலை மடித்து தருபவர் ) தாம்பூலம் மடித்துக் கொடுத்துக் கொண்டிருந்தார். கோவில் பணிகளைப் பார்வையிட வந்த ராஜராஜன், சிலையின் அழகையும், பெருந்தச்சனின் வேலைப்பாட்டையும் பார்த்து வியந்து, பெருந்தச்சனை கௌரவப்படுத்துறதுக்காக  தானே தாம்பூலம் மடித்துக் கொடுத்தாராம்" என்ற கதை இன்னும் பொது மக்களிடையே உலா வந்து கொண்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் இந்த அளவிற்கு பெயர் பெற்ற வெற்றிலை மலேசியாவில் பூர்வீகமாக கொண்டதாகவும் மடகாஸ்கர் வழியாக தமிழகத்திற்கு வந்து இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.



வெற்றிலை பயிர் குறைவு தோட்டக்கலை பயிர்களில், பணப்பயிராக  கருதப்படுகிறது. அதேபோல வெற்றிலையை எளிதில் பயிர் வைத்துவிட முடியாது. முதலில் நிலத்தை அதற்கேற்றார்போல் தயார் செய்த வேண்டும், பின்பு விதை விதைத்து தினமும் சிறிதளவு தண்ணீர் தெளித்து வெற்றிலையை வளர்க்க வேண்டும்.வெற்றிலைத் தோட்டத்தை சுற்றி வெற்றிலை உள்ளே குளிர்ச்சியாக இருப்பதற்கு கரும்பு, முருங்கை, ஆவாரம் கீரை உள்ளிட்டவற்றை வளர்க்க வேண்டும். தொடர்ந்து அதிக அளவு ஈரப்பதம் இருப்பதை உறுதி செய்து கொண்டே இருக்க வேண்டும். பின்பு வெற்றிலை தோட்டத்திற்குள் வளர்ந்த வெற்றிலை கொடியைப் படர விட வேண்டும். அதன்பிறகே வெற்றிலை பயிர் விளைச்சலை கொடுக்க ஆரம்பிக்கும் அதுவரை விவசாயிகள் பொறுமை காக்க வேண்டும்.



தமிழகத்தில், வெற்றிலை சாகுபடி, கும்பகோணம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில், அதிகப்படியாக நடைபெறுகிற போதிலும், செங்கல்பட்டு மாவட்டத்தில், மதுராந்தகம் அடுத்த கருங்குழி பகுதிகளில் முன்பு பல ஏக்கர் பரப்பளவில் வெற்றிலை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக, வெள்ளை ரக வெற்றிலையை, அதிகளவு சாகுபடி செய்துள்ளனர். அறுவடை செய்யப்படும் வெற்றிலையை பல்வேறு பகுதிகளுக்கு அனுப்பி விற்பனை செய்துள்ளனர். 50 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை 120 ஏக்கர் அளவில் ஒரே கிராமத்தில் பயிரிடப்பட்ட வெற்றிலை தொழில், படிப்படியாக சரிந்து தற்பொழுது 5 ஏக்கரில் மட்டுமே கருங்குழி பகுதியில் வெற்றிலை பயிர் வைத்து வருகின்றனர். ஒரு காலகட்டத்தில் கருங்குழி பகுதிகளில் வெற்றிலை கொள்முதல் செய்வதற்காக நூற்றுக்கணக்கான வியாபாரிகள் கிராமத்தை நாடி வந்துள்ளனர். மேலும் அதே கிராமத்தில் வெற்றிலையை கொள்முதல் செய்து விற்பனை செய்யும் வியாபாரிகளும் 35-க்கும் மேற்பட்டோர் இருந்துள்ளனர்.



கருங்குழியில் பயிர் செய்யப்பட்ட வெற்றிலை அருகிலிருக்கும் நகரங்களான சென்னை ,வந்தவாசி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம் உள்ளிட்ட நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கருங்குழி வெற்றிலையை வியாபாரிகள் கொள்முதல் செய்து பெங்களூர், மும்பை போன்ற நகரங்களுக்கு அனுப்பி வைத்துள்ளனர். கருங்குழி வெற்றிலை வாயில் போட்டு உண்ணும்போது குழகுழப்பு அதிக தரும் என்பதால் இந்த வெற்றிலை வாங்குவதற்கு போட்டா போட்டி நிலவிவந்தது. அதேபோல் இந்த வெற்றிலை பயிரானது 3 ஆண்டுகள் வரை அப்பொழுது தொடர்ந்து பயன் அளித்துள்ளது. ஆனால் தற்போது ஆறு மாதங்களுக்கு குறைவாகவே பயன் தருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.



தோட்டக்கலை துறை சார்பில், இவர்களுக்கு தகுந்த ஆலோசனைகளொ சலுகைகளோ முறைப்படி வழங்காததால் காலப்போக்கில், வெற்றிலை சாகுபடி வெகுவாக குறைந்து, ஆங்காங்கே ஒருசிலர் மட்டும் குறைந்த அளவில் இச்சாகுபடியை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், கடந்த இருபது ஆண்டுகளுக்கு முன்பு துவங்கப்பட்ட மாத்திரை தயாரிக்கும் நிறுவனக் கழிவுகள் வெளியேறி அருகில், இருக்கும் ஏரியில் கலப்பதாகவும் அதனால் நீர் மற்றும் நிலம் மாசடைந்து வெற்றிலை தொழில் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

 

இதுகுறித்து கருங்குழி வெற்றிலை விவசாயி கருப்பன் என்பவர் கூறுகையில், 50 வருடங்கள் முன்பு  120 ஏக்கர் பரப்பளவு வரை இங்குள்ள விவசாயிகள், வெற்றிலை சாகுபடி செய்தனர். இதற்காக, ஆந்திரா, கடப்பா, மாதேஸ்வர் போன்ற பகுதியில் இருந்து, வெற்றிலை செடிகளை கொண்டு வந்து பயிர் செய்து, பல்வேறு பகுதிகளில் விற்பனை செய்தோம்.  இந்நிலையில், கடந்த 20 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதியில், மாத்திரை தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று உருவானது. அதிலிருந்து வெளியேற்றப்படும் ரசாயன கழிவுகள் ஏரி நீரில் கலந்ததால் வெற்றிலை சாகுபடி பாதித்தது. இதனை தடுக்கக் கோரி மாவட்ட நிர்வாகத்திடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மேலும், தோட்டக்கலைத்துறை அதிகாரிகள் எங்களுக்கு தகுந்த ஆலோசனைகளோ, சலுகைகளோ வழங்கவில்லை. இதனால் சாகுபடி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஒரு சிலர் மட்டும், குறைந்த அளவில் வெற்றிலை சாகுபடி செய்து வருகின்றனர்.

 

மேலும் பேசுகையில் முன்பு மூன்று வருடங்கள் வரை வெற்றிலை பயிர் செய்ய முடியும். ஆனால் தற்போது மண் மாசுபட்ட காரணத்தினால் ஆறு மாதங்கள் கூட வெற்றிலை உயிருடன் இருப்பது இல்லை காய்ந்து கருகி விடுகின்றன. அதேபோல் வெற்றிலை தொழில் பாதித்தது காரணம் தற்போது வெற்றிலை போடும் பழக்கம் குறைந்து பான்மசாலா ,குட்கா, பாக்கு உள்ளிட்ட கேடு விளைவிக்கும் பொருட்களைப் பயன்படுத்தும் இளைஞர்கள் அதிகரித்துள்ளனர். இதனால் வெற்றிலை பயன்பாடு குறைந்துள்ளது. இதன் காரணமாகவும் வெற்றிலை வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது. வெற்றிலை சாப்பிட்டால் வாய் துர்நாற்றம் இல்லாமல் இருக்கும் பசியின்மையைப் போக்கும் உள்ளிட்ட மருத்துவ குணங்கள் இருக்கிறது. ஒரு காலகட்டத்தில் இங்கு உருவாக்கிய வெற்றிலைகள் ஒரு கை அகலம் இருக்கும், எனவும் தற்போது அவை சுருங்கி சின்னதாகி இருப்பதாக வேதனையுடன் தெரிவித்தனர். வெற்றிலை சாகுபடியை ஊக்குவிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்தார்.



இதுகுறித்து கருங்குழியை சேர்ந்த வெற்றிலை வியாபாரி பன்னீர்செல்வம் என்பவர் கூறுகையில், நான் 12 வயது இருக்கும் போதிலிருந்து என் தந்தையுடன் இருந்து சேர்ந்து வெற்றிலை வியாபாரத்திற்கு உதவி செய்தேன். பின்பு நானே வெற்றிலை வியாபாரி ஆனேன். 40 வருடங்களுக்கு முன்பெல்லாம் ஏராளமான வியாபாரிகள் இருப்பார்கள் நாளொன்றுக்கு அதிக அளவு வெற்றிலையை ஏற்றுமதி செய்து வந்தேன். ஆனால் படிப்படியாக வெற்றிலை வியாபாரம் குறைந்து தற்போது, நாள் ஒன்றுக்கு ஒரு கூடை வெற்றிலை கூட விற்க முடியாமல் தவித்து வருகிறேன்.



மேலும் ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளில் தயாராகும் வெற்றிலை, சென்னை போன்ற நகரங்களில் இறக்குமதி செய்யப்படுவதால் கருங்குழி வெற்றிலையை வியாபாரிகள் மறந்துவிட்டனர் இதனாலும் வெற்றிலை தொழில் பாதிக்கப்பட்டது. தற்பொழுது கருங்குழி கிராமத்தில் இரண்டு நபர்கள் மட்டுமே வெற்றி வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாக வேதனையுடன் தெரிவித்தார்.

வெற்றிலை பயன்பாடு குறைந்தது, பல்வேறு பகுதிகளிலிருந்து வெற்றிலை இறக்குமதி செய்யப்பட்டது, மண் மற்றும் தண்ணீர் மாசடைந்து உள்ளிட்ட காரணங்களால் காரமான கருங்குழி வெற்றிலை தற்போது காய்ந்து கருகி காணாமல் போய் வருகிறது.