இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அத்துடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லே லீட்ஸ் மைதானத்தில் இன்று நடைபெற்ற உள்ளது. 


இந்நிலையில் ஹெட்டிங்லே மைதானத்தின் இந்தியாவின் ரெக்கார்டு என்ன? அந்த ஆடுகளம் எதற்கு சாதகமாக  இருக்கும்?


ஹெட்டிங்லேவில் : இந்தியா vs  இங்கிலாந்து


ஹெட்டிங்லே லீட்ஸ் மைதானத்தில் இந்திய-இங்கிலாந்து அணிகள் தற்போது வரை 6 போட்டிகளில் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து அணி 3 முறை வெற்றியும், இந்திய அணி 2 வெற்றியையும் பெற்றுள்ளன. ஒரு போட்டி டிராவில் முடிவடைந்துள்ளது.  கடைசியாக ஹெட்டிங்லே மைதானத்தில் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. 


கடைசியாக இந்தியா-இங்கிலாந்து அணிகள் 2002ஆம் ஆண்டு ஹெட்டிங்லேவில் டெஸ்ட் போட்டியில் விளையாடி உள்ளது. அதன்பிறகு அங்கு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி களமிறங்கவில்லை. ஆகவே தற்போது இந்திய அணியில் இருக்கும் ஒரு வீரர் கூட ஹெட்டிங்லேவில் டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. எனவே தற்போதைய இந்திய வீரர்களுக்கு இந்த ஆடுகளம் புதிதாக இருக்கும். 


ஹெட்டிங்லேவில் டெஸ்ட் வரலாறு:


ஹெட்டிங்லே மைதானத்தில் தற்போது வரை 78 டெஸ்ட் போட்டிகள் நடைபெற்றுள்ளது. அதில் முதலில் பேட்டிங் செய்த அணி 29 முறையும் இரண்டாவது பேட்டிங் செய்த அணி 31 முறையும் வென்றுள்ளன. இந்த மைதானத்தில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் 628/8 ஆக உள்ளது. இந்த ஸ்கோரை இந்திய அணி 2002 ஆம் ஆண்டு அடித்தது. இங்கிலாந்து அணியை பொறுத்தவரை ஹெட்டிங்லே மைதானத்தில் கேப்டன் ஜோ ரூட் 6 டெஸ்ட் போட்டிகளில் 430 ரன்கள் அடித்துள்ளார். அதேபோல் பந்துவீச்சில் ஆண்டர்சென் 10 டெஸ்ட் போட்டிகளில் 39 விக்கெட் வீழ்த்தியுள்ளார். 


இங்கி. Vs இந்தியா 2002 டெஸ்ட்:  இன்னிங்ஸ் வெற்றி 


2002ஆம் ஆண்டு ஹெட்டிங்லேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கங்குலி தலைமையிலான இந்திய அணி நாசர் ஹூசைன் தலைமையிலான இங்கிலாந்து அணியை எதிர்த்து விளையாடியது. அந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடிய இந்திய அணியில் ராகுல் திராவிட் (148), சச்சின் டெண்டுல்கர்(193), சவுரவ் கங்குலி (128) ஆகியோரின் சதத்தால் வலுவான ஸ்கோரை எட்டியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட் இழப்பிற்கு 628 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிக்ளேர் செய்தது. 




இதைத் தொடர்ந்து முதலில் இன்னிங்ஸில் களமிறங்கிய இங்கிலாந்து அணி ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே சுழலில் சிக்கியது. ஹர்பஜன் மற்றும் கும்ப்ளே தலா 3 விக்கெட் வீழ்த்தினர். அகர்க்கர் மற்றும் ஜாகீர் கான் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனால் இங்கிலாந்து அணி 273 ரன்களுக்கு சுருண்டது. அதன்பின்னரி இந்திய அணி ஃபாலோ ஆன் கொடுத்தது. அதில் இங்கிலாந்து அணி மீண்டும் கும்ப்ளே பந்துவீச்சில் தடுமாறியது. இரண்டாவது இன்னிங்ஸிலும் 309 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இரண்டாவது இன்னிங்ஸில் அனில் கும்ப்ளே 4 விக்கெட் வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 46 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. 


மேலும் படிக்க: இங்கி.vs இந்தியா: மூன்றாவது டெஸ்ட்டில் அஸ்வின் விளையாடுவாரா?- விராட் கோலியின் பதில் !