இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. லார்ட்ஸ் மைதானத்தில் கடந்த வாரம் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட்டில் இந்திய அணி 151 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து மூன்றாவது டெஸ்ட் தொடர் ஹெட்டிங்லே லீட்ஸ் மைதானத்தில் நடைபெற்ற உள்ளது. 


இந்தப் போட்டியில் இந்திய அணியில் ஏதாவது மாற்றம் இருக்குமா என்ற பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. குறிப்பாக சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் இடம்பெறுவாரா என்ற சந்தேகம் மீண்டும் எழுந்துள்ளது. இதற்கு போட்டிக்கு முன்பாக நடைபெற்ற காணொளி செய்தியாளர் சந்திப்பில் இந்திய கேப்டன் விராட் கோலி பதிலளித்துள்ளார். 




அதில்,”ஹெட்டிங்லே மைதானத்தை தற்போது பார்க்கும்போது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது. நான் அதிகளவில் ஆடுகளத்தில் புற்கள் இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதில் அந்த அளவு புற்கல் இல்லை. ஆகவே ஆடுகளம் மிகவும் ஃபிலாட்டாக உள்ளது. இது வேகப்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்று என்னால் உறுதியாக கூற முடியாது. ஆகவே நாளையை போட்டியில் அஸ்வின் விளையாடுவது குறித்து என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.


வழக்கமாக நாங்கள் போட்டிக்கு முந்தைய நாளே 12 பேர் கொண்ட அணியை அறிவித்துவிடுவோம். அதன்பின்னர் போட்டிக்கு 3 மணிநேரத்திற்கு முன்பாக 11 பேர் கொண்ட அணியை தேர்வு செய்வோம். ஆகவே அஸ்வின் விளையாடுவது நாளை தீர்மானிக்கப்படும். இயல்பாக ஒரு வெற்றி பெற்ற அணியை காயம் இல்லாமல் மாற்ற மாட்டோம். ஆனால் ஆடுகளத்தின் தன்மையையும் தற்போது கருத்தில்கொள்ள வேண்டும்” எனக் கூறியுள்ளார். 


 






ஹெட்டிங்லே மைதானம் ஃபிலாட்டாக இருக்கும் பட்சத்தில் வேகப்பந்து வீச்சாளர்களுக்கு அதிகளவில் பயன் தராது. அதில் மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களுக்கு பிறகு ஆடுகள் வரண்டு இருந்தால் சுழற்பந்துவீச்சுக்கு சாதகமாக அமைந்துவிடும். அந்த சமயத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினின் பந்துவீச்சு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்துவிடும். இங்கிலாந்து வீரர்கள் சுழற்பந்துவீச்சில் அதிகமாக திணறுவார்கள். எனவே அஸ்வின் நாளைய போட்டியில் விளையாடும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என்று கருதப்படுகிறது. 


அதேபோல் கடந்த டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ஜடேஜா பந்துவீச்சில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தவில்லை. மேலும் அவருடைய சுழற்பந்துவீச்சை இங்கிலாந்து வீரர்கள் எளிதாக எதிர்கொண்டனர். இதையும் கருத்தில் கொண்டு ஒரு வேகப்பந்து வீச்சாளர் அல்லது ஜடேஜா ஆகியோரில் ஒருவருக்கு பதிலாக அஸ்வின் களமிறக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


 மேலும் படிக்க:விராட் கோலி குடிக்கும் கருப்பு தண்ணீர்.. விலை எவ்ளோ தெரியுமா....?