டேவான் கான்வே தற்போது கிரிக்கெட் உலகமே அறிந்த ஒரு நபராக மாறிவிட்டார். ஆனால் நியூசிலாந்து சர்வதேச அணிக்கு கான்வே கடந்து வந்த பாதை கடினங்கள் நிறைந்தது. தென்னாப்பிரிக்க நாட்டின் ஜோஹன்ஸ்பர்க் நகரை சேர்ந்தவர் டேவான் கான்வே. தென்னாபிரிக்காவின் பெருமை வாய்ந்த செயின்ட் ஜான் பள்ளியில் கிரிக்கெட் பயிற்சி மேற்கொண்டு விளையாடியவர். அவருடன் பள்ளி காலத்தில் விளையாடியவர்கள் தான் தென்னாபிரிக்கா அணியின் இன்றைய நட்சத்திர வீரர்கள் டி காக், தப்ரைஸ் ஷம்சி, தெம்பா பவுமா ஆகியோர். அவர்கள் அனைவரும் சர்வதேச கிரிக்கெட் அணிக்கு சென்றுவிட்ட நிலையில், டேவான் கான்வேவால் மட்டும் போக முடியவில்லை.
அதற்கு காரணம் தென்னாப்பிரிக்காவில் நிலவும் மோசமான நிலையே என்கிறார் முன்னாள் வீரர் ஒருவர். திறமையான வீரர்களை கண்டறிந்து, அவர்களை வழிநடத்துவதில் தென்னாபிரிக்கா கட்டமைப்பு வலுவாக இல்லை.
முன்னாள் தென்னாபிரிக்கா ஏ அணியின் துவக்க வீரர் ஓம்பிளே ரமீலா அவரின் முகநூல் பக்கத்தில் "கான்வே 2017ம் ஆண்டு தென்னாபிரிக்காவில் இருந்து வெளியேறினார், திறமையான வீரர்களை கண்டறிந்து அணிக்கு அழைத்து வருவதில் தென்னாபிரிக்கா சந்திக்கும் தோல்விக்கு இறையானவர் தான் கான்வே" என தெரித்துள்ளார். மேலும் பள்ளி அளவில் கான்வேயின் கேப்டனாக தான் செயல்பட்டுள்ளதாக ரமீலா தெரிவித்துள்ளார்.
மேலும் கான்வே தென்னாபிரிக்காவில் பயிற்சி மேற்கொண்ட காலத்தில் பயிற்சியாளர்கள் சிலர் "வெட்டி வம்பு வளர்க்க மட்டுமே உனக்கு தெரியும், உன்னால் என்றும் சர்வதேச கிரிக்கெட் விளையாட முடியாது" என்று உதாசீனப்படுத்தியதாக ரமீலா தெரிவித்துள்ளார்.
திறமை என்றுமே கான்வே வசம் இருந்துள்ளது, ஆனால் அதனை தென்னாபிரிக்காவோ கண்டுகொள்ள மறுத்துவிட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் உன்னால் முடியாது என்ற வார்த்தை கான்வேயின் நம்பிக்கையை உடைக்க, நம்மால் சர்வதேச கிரிக்கெட் விளையட முடியாது என்ற மனநிலைக்கு தள்ளப்படுகிறார் கான்வே. தென்னாபிரிக்க நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்யும் அவர், தன்னுடைய வீடு, கார், சொத்து என அனைத்தையும் உதறி தள்ளிவிட்டு நியூசிலாந்து வந்து சேர்கிறார்.
மேலும் அறிய : ‛வந்துட்டோம்ன்னு சொல்லு’ - இங்கிலாந்தில் கெத்தா இறங்கிய இந்திய அணி!
2017ம் ஆண்டு கான்வே எடுத்த அந்த முடிவு தான் அவரின் வாழ்க்கையை மாற்றி அமைத்தது. நியூசிலாந்து வரும் கான்வே அப்போதும் சர்வதேச கிரிக்கெட் ஆசையெல்லாம் இல்லாமல் தான் மீண்டும் கிரிக்கெட் விளையாட தொடங்குகிறார். அங்கு வெல்லிங்டன் அணிக்காக விளையாட தொடங்கும் கான்வே 2018ம் ஆண்டு 12 இன்னிங்ஸில் 659 ரன்களை 82.37 சராசரியுடன் விளாசுகிறார், 2019ம் ஆண்டு 11 இன்னிங்ஸில் 701 ரன்களை 87.62 சராசரியுடன் விளாசுகிறார், 2020ல் ஒன்பது இன்னிங்ஸில் 50.66 சராசரியுடன் 456 ரன்களை விளாசுகிறார். இந்த கால கட்டங்களில் ஒருமுறை கூட அவரின் சராசரி 50க்கு கீழ் வரவில்லை.
குறிப்பாக வெலிங்டன் அணி ஒருமுறை 50-4 என தடுமாறிக்கொண்டு இருக்கும்போது உள்ளேவரும் கான்வே 352 பந்துகளில் 327 ரன்களை விளாசியதை கண்ட கிரிக்கெட் ரசிகர்கள் யார் இவர், எங்கே இருந்தார் இதனை நாள் என கொண்டாட தொடங்கினர். அவ்வளவு தான் சர்வதேச நியூசிலாந்து அணிக்கு அழைக்கப்பட்டார் கான்வே. சர்வதேச கிரிக்கெட்டில் இவரின் சராசரி 75, 3 ஒருநாள் போட்டிகளில் 225 ரன்கள் அடித்துள்ளார். டி20 போட்டிகளில் 11 இன்னிங்ஸில் விளையாடியுள்ள கான்வே 59.12 சராசரியுடன் 473 ரன்களை விளாசியுள்ளார். இந்த நிலையில் தான் டெஸ்ட் அரங்கில் தடம் பதித்த கான்வே இரட்டை சதத்துடன் தனது வருகையை உலகிற்கு அறிவித்துள்ளார்.