முக்கிய பருவமழையான தென்மேற்கு பருவமழையானது ஜூன் 3-ஆம் தேதி தொடங்கும் என்று ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் கடந்த சில தினங்களாக பல இடங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், “வெப்பச்சலனம் மட்டும் தமிழ்நாட்டின் தென்கடல் ஓரத்தில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், குமரிக்கடல் மற்றும் இலங்கையை ஒட்டி நிலவும் வறட்சி காரணமாகவும் கர்நாடகம் முதல் தென் தமிழ்நாடு வரை நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாகவும், ஜூன் 4-ஆம் தேதி( இன்று) டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, சிவகங்கை, மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை, மதுரை, விருதுநுகர், ராமநாதபுரம், தூத்துக்குடி, கடலூர், கள்ளக்குறிச்சி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை, ஏனைய மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.




தமிழ்நாட்டின் உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும் நாளை பெய்யக்கூடும். தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் கன்னியாகுமரி மாவட்டம் சித்தாறு பகுதியில் 14 செ.மீ. மழையும், கன்னியாகுமரி மாவட்டம் சிவலோகம் பகுதியில் 12 செ.மீ. மழையும், பேச்சிப்பாறையில் 11 செ.மீ. மழையும் பதிவாகி உள்ளது. குறைந்தபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.




இன்று  மற்றும் நாளை குமரிக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதியில் பலத்த காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும். மீனவர்கள் இந்த தேதிகளில் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம். மேலும், இன்று மற்றும் நாளை கேரளா மற்றும் கடலோர பகுதிகள், லட்சத்தீவு பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வரை வேகத்தில் வீசக்கூடும். தென்மேற்கு பருவமழை இன்று தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களில் முன்னேறியுள்ளது. அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற வாய்ப்பு உள்ளது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


தமிழகத்தில் கடந்த மாதம் முழுவதும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மழை பெய்யும் என்ற அறிவிப்பு மக்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


மேலும் படிக்க :Tamil Nadu 12th Exam News Live: 12ம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து - மகாராஷ்டிரா அரசு அறிவிப்பு