தமிழகத்தில் புதியதாக பதிவியேற்றுக்கொண்ட மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு கொரோனா தடுப்பு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. ஆக்சிஜன் படுக்கைகள் அதிகரிப்பு, ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தி அதிகரிப்பு, ஐ.சி.யு. படுக்கைகள் அதிகரிப்பு, சாதாரண வார்டு படுக்கைகள் அதிகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மாநில அரசு தீவிரமாக செயல்பட்டு வருகிறது.


இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா வைரசின் நிலை குறித்து ஆய்வு செய்வதற்காக  நிபுணர்கள் குழு ஒன்றை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அமைத்துள்ளார். இந்த குழுவின் தலைவராக ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பூர்ணலிங்கம் செயல்பட உள்ளார்.


இவர் தவிர, இந்த குழுவில் அதிகாரப்பூர்வமாக 9 நபர்களும். அதிகாரப்பூர்வமில்லாமல் 4 நபர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதிகாரப்பூர்வமற்ற உறுப்பினர்களாக மருத்துவர் குகநாதன், மருத்துவர் குழந்தைசாமி, சென்னையில் உள்ள தேசிய தொற்றுநோய் நிறுவன இயக்குனர் மருத்துவர் மனோஜ் முரேகர். வேலூர், சி.எம்.சி. மருத்துவமனையின் தொற்றுநோயியல் நிபுணர் மருத்துவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.


இந்த குழுவின் அதிகாரப்பூர்வ உறுப்பினர்களாக சுகாதாரத்துறை முதன்மை செயலாளர், மருத்துவ கல்வி இயக்குனர், பொதுசுகாதார மற்றும் பாதுகாப்பு மருந்துகள் இயக்குனர், தமிழ்நாடு மருத்துவ சேவை கார்ப்பரேஷன் நிறுவன மேலாண் இயக்குனர், மருத்துவ பணியாளர் தேர்வு வாரிய தலைவர், சுகாதார மற்றும் குடும்பநலத்துறை கூடுதல் செயலாளர் உள்பட 9 நபர்கள் செயல்பட உள்ளனர்.


மொத்தம் 13 நபர்களை உள்ளடக்கிய இந்த குழு கொரோனா வைரசின் தற்போதைய சூழல், கொரோனா வைரசா் ஏற்பட்டுள்ள பாதிப்பின் தற்போதைய சூழல், கொரோனா பரவல் நிலவரம், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்து முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்க உள்ளது. மேலும், தமிழகத்தில் கொரோனா வைரசின் பரவல் காரணங்கள், தடுப்பு நடவடிக்கைகள், மருத்துவமனைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சிகிச்சை முறைகள் குறித்தும் இந்தக்குழு பரிந்துரை அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தமிழகத்தில் ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்காக முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அனைத்து கட்சிகளின் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது என்பதும், அந்த குழுவினரும் தங்களது கொரோனா வைரஸ் இரண்டாம் அலையை கட்டுப்படுத்துவதற்கான தங்களது கருத்துக்களை பரிந்துரைகளாக அளித்து வருவதும் குறிப்பிடத்தக்கது.


தமிழகத்தில் கொரோனா பரவல் முழு ஊரடங்கு காரணமாக தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த வாரம் 36 ஆயிரம் என்ற அளவில் இருந்த பாதிப்பு. தற்போது 24 ஆயிரம் என்ற அளவில் சரிந்துள்ளது. மேலும்., உயிரிழப்பு விகிதமும் கடந்த சில தினங்களாக படிப்படியாக குறைந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


மேலும் படிக்க : தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை : தமிழ்நாட்டில் பல இடங்களில் மழைக்கு வாய்ப்பு