இந்திய அணியின் நான் விளையாட காரணமாக தோனியுடனான எனது நட்பை சிலர் குறிப்பிடுகையில் மிகவும் வருத்தமாக இருக்கும் என முன்னாள் இந்திய வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரருமான சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி மற்றும் சக வீரரான சுரேஷ் ரெய்னா இடையேயான நட்பு ஊர் அறிந்தது. சென்னை அணியில் ஒன்றாக விளையாடி, இந்திய கிரிக்கெட்டில் சேர்ந்து விளையாடி பின்னர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து இருவரும் ஒரே நாளில் ஓய்வை அறிவித்தது வரை தோனியும் ரெய்னாவும் மிக சிறந்த நண்பர்கள். இந்திய கிரிக்கெட்டில் மிக பெரிய இரு நட்சத்திரங்கள் இப்படி நட்புணர்வுடன் இருப்பது பல நேரங்களில் ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும், சில நேரங்களில் விமர்சிக்கப்படாமலும் இல்லை.
நட்பால் எழுந்த விமர்சனம்
தோனி இந்திய அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, சில நேரங்களில் ரெய்னா சரியாக விளையாட தவறும் போதெல்லாம் அவருக்கு தொடர்ந்து அளிக்கப்படும் வாய்ப்புக்கு தோனியுடன் அவருக்கு இருக்கும் நட்பே கரணம் என்கின்ற விமர்சனங்கள் எழுந்தன. இது குறித்து அண்மையில் வெளியான ரெய்னாவின் சுயசரிதையில் அவர் மனம் திறந்துள்ளார். சுரேஷ் ரெய்னா "பிலீவ்" என்னும் சுயசரிதையை எழுதியுள்ளார். அதில் தன்னை ஒரு சிறந்த கிரிக்கெட் வீரராக மாற்றியதில் தோனியின் பங்கு மிக பெரியது என குறிப்பிட்டுள்ள அவர், சில நேரங்களில் தோனியின் நட்பை குறிப்பிடுவது, தனக்கு ஏற்படுத்திய வருத்தங்கள் குறித்தும் பேசியுள்ளார்.
ரெய்னா சுயசரிதையில் "என்னுடைய சிறந்த ஆட்டத்தை எவ்வாறு வெளிக்கொண்டு வருவது என்பது தோனிக்கு தெரியும், நான் அவரை நம்பினேன். இந்திய அணியில் எனக்கு கிடைத்த இடத்துடன், மக்கள் சிலர் எங்கள் நட்பை தொடர்புபடுத்தும்போது, அது மிக வலிக்கும். தோனியின் நம்பிக்கையையும் மரியாதையையும் நான் சம்பாதித்ததைப் போலவே, இந்திய அணியில் எனது இடத்தைப் பெற நான் எப்போதும் கடுமையாக உழைத்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
7 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் : முழுவீச்சில் தயாராகும் இந்திய அணி!
தோனி ரெய்னா இருவரில், முதலில் இந்திய அணிக்கு தேர்வானவர் தோனியே. டிசம்பர் 23, 2004ல் இந்திய அணிக்காக தனது முதல் போட்டியில் தோனி களமிறங்கிய நிலையில், 7 மாதங்களுக்கு பின் 2005-ஆம் ஆண்டு தான் சுரேஷ் ரெய்னா இந்திய அணிக்கு தேர்வானார். பின்னர் இருவரும் இனைந்து இந்திய அணிக்கு சிறப்பாக விளையாடி வெற்றியை தேடி தந்தனர். மூன்று விதமான போட்டிகளிலும் சதம் விளாசிய முதல் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா என்ற சாதனையும் அவர் படைத்துள்ளார்.