மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய ஐடி விதிகள் தனிநபர் சுதந்திரத்துக்கு எதிரானது எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்துள்ளார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா.
மத்திய அரசின் புதிய ஐடி விதிகள் சொல்வது என்ன?
சமூக வலைதளங்களில் தனிநபர்களால் பகிரப்படும் கருத்துகளால், இந்தியாவின் பாதுகாப்புக்கும், இறையாண்மைக்கும் எதிரான கருத்துகள் கட்டமைக்கப்படுகிறது என்பது மத்திய அரசின் நீண்ட கால குற்றச்சாட்டு., இதனாலேயே ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களைக் கட்டுப்படுத்தும் விதத்தில் மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் புதிய தகவல் தொழில்நுட்பம் (இடைநிலை வழிகாட்டுதல்கள் மற்றும் டிஜிட்டல் மீடியா நெறிமுறைகள் சட்டம்) விதிகள் 2021-ஐக் கொண்டுவந்தது.
அதில்,
- சமூக ஊடக நிறுவனங்கள் அதன் அலுவலக முகவரி மற்றும் தொடர்பு எண்களை வலைதளத்தில் வெளியிடவேண்டும்.
- புகார்களைப் பெறுவது, நடவடிக்கை எடுப்பதற்காக இந்தியாவில் அதிகாரிகளை நியமிக்க வேண்டும்.
- சட்ட ரீதியான உத்தரவுக்கு 36 மணிநேரத்துக்குள் உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்.
- சர்ச்சைக்குரிய பதிவை யார் முதலில் பதிந்தது என்ற விவரத்தை பகிரவேண்டும் என அனைத்து சமூக வலைதள ஊடகங்களுக்கும் மத்திய அரசு கெடுவிதித்துள்ளது.
இந்நிலையில், புதிய ஐடி விதிகள் தனது தனிப்பட்ட சுதந்திரத்தை முடக்கும் எனக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தி மனு தாக்கல் செய்துள்ளார் பிரபல பாடகர் டி.எம்.கிருஷ்ணா. இந்த வழக்கில் மூன்று வாரங்களில் மத்திய அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
டி.எம்.கிருஷ்ணா தனது மனுவில், "உச்ச நீதிமன்றம் 20117ல் வழங்கிய தீர்ப்பில் தனிநபர் உரிமை என்பது அரசியல் சாசன சட்டப்பிரிவு 21-இன் கீழ் வழங்கப்படும் வாழ்வுரிமையின் கீழ் வருகிறது எனத் தெளிவுபடத் தெரிவித்திருக்கிறது. தனியுரிமை என்பது வாழ்க்கை, புதிய கண்டுபிடிப்புகள், பாதுகாப்பு, மகிழ்ச்சி, உருவாக்கம் ஆகியவற்றுடன் தொடர்புடையது. அவை ஒரு கலைஞன் சுதந்திரமாகவும், கண்ணியத்துடனும், வாழ வழி செய்கிறது. அப்போதுதான் ஒரு தனிநபர் ஒரு கலைஞனாக மட்டுமல்ல மனிதனாகவும் உணரமுடியும். ஆனால், புதிய தகவல் தொழில்நுட்ப விதிகள் ஒரு கலைஞன் மற்றும் கலாச்சார வர்ணனையாளரான எனது உரிமையை பறிக்கும் வகையில் இருக்கிறது. சமூக ஊடக சேவைகளின் பயனாளராகவும், ஆன்லைன் உள்ளடக்கத்தை உருவாக்கியவர் என்ற முறையிலும் எனது உரிமைகளை பறிப்பதாகவும் உள்ளது" எனக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் அந்த மனுவில், ஐடி விதிகளின் மூன்றாவது பிரிவு ஆன்லைன் உரையாடல், கருத்துகள் மீது ஒருவகையான கலாச்சார காவல் போக்கை உருவாக்குகிறது. இது முழுக்க முழுக்க கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
என்னைப்போன்ற சுயாதீன படைப்பாளிகளை கலாச்சார, சமூக கொள்கைகளால் கட்டிப்போடமுடியாது. எங்களின் எண்ணங்களுக்கு அரசு மூலம் கடிவாளம் போட நினைப்பதே அடக்குமுறைதான் என்றும் கிருஷ்ணா குறிப்பிட்டிருக்கிறார். ஐடி புதிய விதிகள் மேலோட்டமானதாக இருக்கின்றன. வெறுப்புப் பேச்சைத் தடுப்பதற்காக எனக் கொண்டுவரப்படும் எந்தவொரு சட்டமும் தெளிவாகவும், துல்லியமானதாகவும் இருக்க வேண்டும் அப்படி தெளிவாக இல்லாதபட்சத்தில் அது ஒட்டுமொத்தமாக கருத்து சுதந்திரத்தை அடக்குவதாக அமைந்துவிடும்.
நான் கலைக்கு மறுவடிவம் கொடுக்க முயற்சிக்கிறேன். ஒரு கலைஞனாக நான் மேற்கொள்ளும் முயற்சிகள் கட்டுப்பாடுகளைக் கடந்தது. ஆனால், என்னைப் போன்றோரின் எண்ணங்கள் மத்திய அரசின் புதிய விதிகளின் பார்வையில் அத்துமீறலாகத் தெரியும். ஆகவே இந்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என அதில் கூறியிருக்கிறார்.