உலக கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வரும் 18-ஆம் தேதி, இங்கிலாந்து நாட்டில் உள்ள சவுதாம்படன் நகரில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் இந்தியாவும், நியூசிலாந்து அணிகளும் நேருக்குநேர் மோதுகின்றன. முதலாவது உலகக்கோப்பை டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை சூடப்போவது யார்? என்ற எதிர்பார்ப்பு அனைவரது மத்தியிலும் எழுந்துள்ளது.


இந்த நிலையில், கிரிக்கெட் ஜாம்பவான் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் இன்று தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இந்தியா மற்றும் நியூசிலாந்து இடையிலான போட்டி மிகவும் போட்டி மிகுந்ததாக இருக்கும். நியூசிலாந்து இந்தியாவை வெல்லும் என்று அர்த்தம் அல்ல. அவர்கள் இந்தியாவை வீழ்த்த வேண்டும் என்றால், நல்ல கிரிக்கெட்டை ஆடவேண்டும். அதேநேரத்தில் இந்திய அணியும் நியூசிலாந்து அணியினருடன் விளையாட முழுமையாக தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தங்கள் முன் உள்ள வாய்ப்புகளை தங்களுக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள வேண்டும்.




நியூசிலாந்தை வீழ்த்த வேண்டும் என்றால் பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என மூன்று தரப்பிலும் சிறப்பாக ஆட வேண்டும். அவைகள் ஆட்டத்தை 50 சதவீதம் மாற்றக்கூடியவை. நாம் முழு கவனத்துடன், முழுமையாக தயார் நிலையில் ஆட வேண்டும். முழு உலகமும் நம்மை பின்தொடர்கிறது. நான் வரும் 18-ஆம் தேதிக்காக காத்திருக்கிறேன். நானும் இந்திய அணிக்காக ஆடியுள்ளேன். அதனால், நான் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளேன். இந்த அணிகள்தான் உலகின் தலைசிறந்த இரு அணிகள் தற்போது” என்று அவர் கூறினார்.


இந்த இறுதிப்போட்டிக்கு இந்திய அணி 520 புள்ளிகளுடன் முதலிடம் பெற்றும், நியூசிலாந்து அணி 420 புள்ளிகள் பெறறு இரண்டாம் இடத்துடன் முன்னேறியுள்ளது. ஐ.பி.எல். ஆட்டத்திற்கு பிறகு, இந்திய வீரர்கள் நேரடியாக இந்த இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளனர். ஆனால், நியூசிலாந்து அணியினர் இங்கிலாந்துடனான தொடரை வென்ற உற்சாகத்துடன் இந்த போட்டியில் களமறிங்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 


48 வயதான சச்சின் டெண்டுல்கர் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 15 ஆயிரத்து 921 ரன்களையும், 463 ஒருநாள் போட்டிகளில் ஆடி 18 ஆயிரத்து 426 ரன்களையும், 78 ஐ.பி.எல். போட்டிகளில் ஆடி 2 ஆயிரத்து 334 ரன்களையும் குவித்து சர்வதேச கிரிக்கெட்டில் அனைத்த வடிவிலான கிரிக்கெட்டிலும் அதிக ரன்கள், அதிக சதங்களை குவித்தவராக திகழ்கிறார்.  


WTC 2021 Update: உலகக்கோப்பை மகுடத்தை சூடப்போவது யார்? - "கிங்" கோலியா? "கூல்" வில்லியம்சனா?