17 ஆட்டங்களில் 12 போட்டிகளில் வெற்றி, 4 தோல்வி, ஒரு டிரா என்று 520 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது இந்திய அணி. 11 ஆட்டங்களில் 7 வெற்றி, 4 தோல்விகளுடன் 420 புள்ளிகளுடன் இந்தியாவிற்கு எதிராக களத்துக்கு வந்துள்ளது நியூசிலாந்து அணி. இந்தியா மற்றும் நியூசிலாந்து இரு அணிகளின் தன்னம்பிக்கைகளே அந்தந்த அணியின் கேப்டன்கள். இன்று உலக அளவில் மூன்று வடிவிலான போட்டிகளிலும் சிறந்த ஆட்டக்காரர்களாகவும், அதே நேரத்தில் தலைசிறந்த கேப்டன்களாகவும் திகழ்பவர்கள் விராட் கோலியும், கேன் வில்லியம்சனும்.


களத்தில் ஆக்ரோஷம், இறுதிவரை போராடும் குணம், எல்லைக்கோட்டிலே நின்று கடைசி விக்கெட்டுக்கு ஆடும் நபரையும் ஊக்கப்படுத்தும் கோலி ஒருபுறம். களத்தில் நிதானம், வெற்றியோ தோல்வியோ முகத்தில் சிறு புன்னகை, 2019 உலக கோப்பை போட்டியில் தனி ஆளாக நியூசிலாந்தை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்ற வில்லியம்சன் மறுபுறம்.




91 டெஸ்ட் போட்டிகளில் 153 இன்னிங்சில் விளையாடியுள்ள விராட் கோலி, 7,490 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 27 சதங்களும் அடங்கும். 83 போட்டிகளில் 133 இன்னிங்சில் ஆடியுள்ள வில்லியம்சன் 7 ஆயிரத்து 115 ரன்களை குவித்துள்ளார். இவற்றில் 24 சதங்கள் அடங்கும். ஆஸ்திரேலியாவிற்கு எதிராக முதல் டெஸ்ட் தொடர் வெற்றியை பெற்றுத்தந்த விராட் கோலி தலைமையில் இந்திய அணி ஆஸ்திரேலியா, இங்கிலாந்து என பலம்வாய்ந்த பல அணிகளை புரட்டி எடுத்துள்ளது. அதே தருணத்தில், இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து ஆகிய பலம் வாய்ந்த அணிகளையும் எளிதில் வீழ்த்தும் அணியாக வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து தரம் உயர்ந்துள்ளது. இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணிலே கடந்த வாரம் புரட்டி எடுத்ததே அதற்கு சான்று.


ரோகித் சர்மா, புஜாரா, ரகானே, ரிஷப் பண்ட், அஸ்வின், ஜடேஜா, பும்ரா, சிராஜ், இஷாந்த் சர்மா என பலம் கொண்ட கோலியின் படையுடன் மோதும் டெய்லர், கிராண்ட்ஹோம், சான்ட்னர், டாம் லாதம், ட்ரெண்ட் போல்ட், டிம் சவுதி ஆகியோரை கொண்ட வில்லியம்சன் படை நிச்சயம் வலுவான சவாலை இந்திய அணிக்கு அளிக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.




2019 உலகக்கோப்பை போட்டியில் இதே கோலியின் படையை, இறுதிப்போட்டிக்கு செல்லவிடாமல் வீட்டிற்கு அனுப்பிய வில்லியம்சனின் படையை பழிதீர்ப்பார்களா இந்திய வீரர்கள்? என்று இந்திய ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். அதே தருணத்தில், எந்த மண்ணில் வித்தியாசமான விதியால் உலகக்கோப்பையை பறிகொடுத்தனரோ? அதே மண்ணில் முதலாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையுடன் நாடு திரும்புவார்கள் என்று எதிர்பார்ப்பில் உள்ளனர் நியூசிலாந்து ரசிகர்கள்.


மொத்தத்தில், டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள விராட் கோலியின் இந்திய அணியும், டெஸ்ட் பேட்ஸ்மேன் தரவரிசையில் முதலிடத்தில் உள்ள வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் மோதும் இந்த இறுதிப்போட்டியில் கோப்பையை உச்சி முகரும் நாயகனே டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயத்தின் முதல் பக்கமாக திகழப்போகிறார் என்பதில் சந்தேகமே இல்லை.


மேலும் படிக்க : WTC 2021 Final: 3 நாட்களில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் - யார் உள்ளே, யார் வெளியே ?