சிக்ஸர் பறக்க விட்டு சதம் விளாசிய ஜெய்ஸ்வால்:
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. அதன்படி, கடந்த ஜனவரி 25 ஆம் தேதி நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இந்நிலையில் தான் இன்று (பிப்ரவரி 2) ஆம் தேதி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.
அதன்படி, இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் ரோகித் சர்மா ஆகியோர் களமிறங்கினார்கள். இதில் ரோகித் சர்மா 41 பந்துகள் களத்தில் நின்று 14 ரன்கள் மட்டுமே எடுத்து விக்கெட்டை பறிகொடுத்தார். ஆனால், இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 80 ரன்கள் எடுத்து சதத்தை தவறவிட்ட ஜெய்ஸ்வால் இன்றைய போட்டியில் அதிரடியாக விளையாடினார். இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்த இரண்டாவது டெஸ்ட் போட்டியில் 151 பந்துகளில் சதம் விளாசி அசத்தினார். அதன்படி இங்கிலாந்து அணி வீரர் டாம் ஹார்ட்லியின் பந்தை சிக்ஸருக்கு பறக்க விட்டு தன்னுடைய சதத்தை பதிவு செய்தார். தற்போது இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. முன்னதாக, முதல் நாள் ஆட்ட நேர முடிவின் படி 257 பந்துகளில் 17 பவுண்டரிகள் 5 சிக்ஸர்கள் என மொத்தம் 179 ரன்கள் எடுத்து களத்தில் உள்ளார்.
இரண்டாவது சதம்:
கடந்த 2023-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். இவ்வாறு அவர் விளையாடிய முதல் போட்டியிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் தன்னுடைய முதல் சதத்தை பதிவு செய்தார். இந்நிலையில் தான் இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தன்னுடைய சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டின் 2-வது சதத்தை பதிவு செய்திருக்கிறார்.
நான்காவது இந்திய வீரர்:
22 வயதான யஷஸ்வி ஜெய்ஸ்வால், 23 வயதை அடையும் முன்பே, உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த 4-வது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கர், வினோத் காம்ப்ளி மற்றும் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்த சாதனையை நிகழ்த்திய மற்ற மூன்று வீரர்கள் ஆவர், நான்கு வீரர்களும் ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது. மற்றொரு குறிப்பிடத்தக்க சாதனையாக இங்கிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் சதம் அடித்த 15-வது இந்திய தொடக்க வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றிருக்கிறார்.
மேலும் படிக்க: IND vs ENG 2nd Test: ரோகித் சர்மாவுக்கு மறுவாழ்வு தந்த விசாகப்பட்டினம் - இந்த முறையும் வெல்வாரா?
மேலும் படிக்க: Viral Video: மைதானத்திலே சக வீரருடன் மல்லு கட்டிய பாகிஸ்தான் பிரபல கிரிக்கெட் வீரர்!