ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளுக்கு உலகக்கோப்பைப் போட்டித் தொடர் நடத்தப்படடு வருகிறது. அதேபோல, சமீப காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் நோக்கத்தில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் நடத்தப்பட்டு வருகிறது.


தொடரை வென்ற இந்தியா:


முதன் முதலில் சாம்பியன் மகுடத்தை நியூசிலாந்து அணியும், இரண்டாவது முறை சாம்பியன் பட்டத்தை ஆஸ்திரேலிய அணியும் கைப்பற்றியது. இந்த இரண்டு முறையும் இறுதிப்போட்டியில் இந்திய அணி தோற்றது. தற்போது 2023 – 2025ம் ஆண்டுக்கான உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் நடைபெற்று வருகிறது.


ஒவ்வொரு அணிகள் ஆடும் டெஸ்ட் தொடரின்போதும் இதற்கான புள்ளிப்பட்டியல் மாறிக் கொண்டே இருக்கும். இந்த வகையில் இந்திய அணி தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிராக உள்நாட்டில் நடைபெற்று வரும் கிரிக்கெட் தொடரை 3-1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியுள்ளது.


டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியல்: 


இந்திய அணி தொடரை கைப்பற்றியதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசைக்கான பட்டியலில் வலுவாக உள்ளது. இந்திய அணி தற்போது 3-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ள நிலையில், டெஸ்ட் சாம்பியன்ஷிப்பிற்கான தரவரிசைப்பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.


இந்திய அணி இதுவரை 8 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 5 டெஸ்ட் வெற்றி, 2 தோல்வி, 1 டிரா என மொத்தம் 62 புள்ளிகளுடன் 64.58 சதவீதத்துடன் இரண்டாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து அணி 4 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 3 வெற்றி, 1 தோல்வி என மொத்தம் 36 புள்ளிகளுடன் 75 சதவீதத்துடன் முதலிடத்தில் உள்ளது.




ஆஸ்திரேலிய அணி 10 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வி, 1 டிரா என மொத்தம் 66 புள்ளிகளுடன் 55 சதவீதத்துடன் 3வது இடத்தில் உள்ளது. வங்கதேசம் 50 சதவீதத்துடன் 4வது இடத்திலும், பாகிஸ்தான் 50 சதவீதத்துடன் 5வது இடத்திலும், வெஸ்ட் இண்டீஸ் அணி 36 சதவீதத்துடன் 6வது இடத்திலும், தென்னாப்பிரிக்கா 7வது இடத்திலும், இங்கிலாந்து 8வது இடத்திலும், இலங்கை 9வது இடத்திலும் உள்ளனர்.


மகுடத்தை கைப்பற்றுவாரா?


உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மகுடத்தை இரண்டு முறை கைப்பற்ற கிடைத்த வாய்ப்பை தவறவிட்ட இந்திய அணி, தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை ஆடி இந்த முறை கோப்பையை கைப்பற்றும் என்று ரசிகர்கள் நம்புகின்றனர். அதேசமயம், பின்னால் உள்ள அணிகள் புள்ளிப்பட்டியலில் முன்னேற போராடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.


பந்துவீச்சு தாமதம், மைதானத்தில் ஒழுங்கீனம் உள்ளிட்ட பல காரணங்களுக்காக புள்ளி இழப்பு தண்டனையை ஐ.சி.சி. வழங்கி வருகிறது. இந்திய அணிக்கு இதுபோன்ற காரணத்திற்காக 2 புள்ளிகள் மதிப்பிழப்பு செய்யப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணிக்கு அதிகபட்சமாக 19 புள்ளிகள் இழப்பீடு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக, ஆஸ்திரேலிய அணி அதிகபட்சமாக 10 புள்ளிகளை இழந்துள்ளது.


மேலும் படிக்க: IND vs ENG 4th Test: பேஸ்பால் இங்கிலாந்தை நையப்புடைத்த ரோகித்தின் இளம்படை - டெஸ்ட் தொடரை வென்ற இந்தியா


மேலும் படிக்க:Dhruv Jurel: கார்கில் போர் வீரரான தந்தைக்கு பிக் சல்யூட் - துருவ் ஜூரல் பின்னணி தெரியுமா?